வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை நோய்கள்! (Post No.14,392)

Written by London Swaminathan

Post No. 14,392

Date uploaded in London –  15 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கொள்கை வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .

ஒரு நாட்டிற்கான ஐந்து லட்சணங்களை வள்ளுவன் பாடுகிறான்

:பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.  -குறள் 738.

பொருள்

நோயில்லாதிருத்தல்‌, செல்வம்‌, விளை பொருள்‌ வளம்‌, இன்பவாழ்வு, நல்ல காவல்‌ ஆகிய இந்த ஐந்தும்‌ நாட்டிற்கு அழகு என்று கூறுவர்‌.

பிணி என்றால் நோய், வியாதி  இது இல்லாமல் இருக்க மக்களும் அரசும் முயற்சி செய்யவேண்டும் .

****

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.  குறள் 734

பொருள்

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

****

வேதங்களில், மனிதர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை அடிக்கடி வருகிறது . உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இதைக் காண முடியாது. இந்தியாவில் 120 ஆண்டுகள் அல்லது அதற்குமேலாக வாழ்ந்தோரின் வாழ்க்கை வரலாற்றினையும் நாம் அறிவோம்.

பிராமணர்கள் — முன் காலத்தில் மூன்று ஜாதியினரும் செய்த — கீழ்க்கண்ட பிரார்த்தனையில் இன்னும் தெளிவாகவே உள்ளது . இதை இப்போதும் பிராமணர்கள் மதிய வேளை சந்தியாவந்தனத்தில்,  விரல்களின் சிறு இடுக்கு வழியாக,  சூரியனைப் பார்த்துக்கொண்டு,  சொல்கின்றனர் :

 பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

பொருள்

சூரிய தேவனே ! நூறாண்டுக் காலம் (உன்னை நாங்கள்) காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக!

****

எப்போது ஒருவர் நோயில்லாத வாழ்க்கையை வேண்டுகின்றாரோ அப்போதே நோய்கள் இருந்ததையும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அர்த்தம் ; தினமும் சிவன் கோவில்களில் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது சொல்லும் ருத்ரம்- சமகம் மந்திரத்திலும் பேஷஜம், பிஷக் (மருந்து, மருத்துவர்) நல்ல தூக்கம், நல்ல வாழ்வு ஆகியனவற்றை வேண்டுகின்றனர்.

****

வேத கால நோய்ப் பட்டியல்

மக்டொனால் மற்றும் கீத் என்ற இரண்டு ஆங்கிலேயர்கள் 

தொகுத்த ‘வேதிக் இண்டெக்ஸ் – VEDIC INDEX BY A. A. MACDONELL AND A. B. KEITH  பட்டியலில் நாற்பதுக்கும் மேலான நோய்களின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் உள்ளன ; வயிற்றுப் போக்கு, ஜுரம், தலைவலி, க்ஷயரோகம் குஷ்டம், மஞ்சள்  காமாலை, இருதய நோய்கள் , ரத்தப்போக்கு முதலியன அந்தப் பட்டியலில் காணப்படுகின்றன.  ஒவ்வொன்றினையும் அவர்கள் விளக்கியபோதும் பல சந்தேகக்குறிகளும் உள்ளன. வேதங்கள் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால்  இதுதான் என்று சொல்ல முடியாது .

வேதங்கள் மருத்துவ நூல்கள் இல்லை ; அவை சமய நூல்கள். மேலும் அவை சொல்லும் வியாதி என்ன என்று சிகிச்சைக் குறிப்பிலிருந்தோ மருந்துக் குறிப்பிலிருந்தோ கூட கண்டு பிடிக்க முடிவதில்லை. க்ஷேத்திரியா KSHETRIA என்ற நோயினை அதர்வண வேதம் (AV) 2-8-5; 3-7-1 பல இடங்களில் குறிப்பிட்டாலும் அது என்ன என்று தெரியவில்லை !

யுக்மன் YUKMAN என்ற வியாதியையும் அதர்வண வேதம் குறிப்பிடுகிறது ; பிற்கால சம்ஸ்க்ருத நூல்களில் இந்த நோயினைக் காண  முடியவில்லை ; ஒருவேளை ஜுரம்/ காய்ச்சல்  என்ற பொதுச் சொல்லாக இருக்கலாம்

கீழ்க்கண்ட சொற்கள் என்ன வியாதியைக் குறிக்கின்றன என்று காணலாம் ,

பாமன் PAMAN- தோல் நோய்

பிரிஸ்த்யமயா PRISHYTYAMAYA – விலா எலும்பில் நோவு

பலாஷ் BALASH –  டி .பி.  க்ஷயரோகம், எலும்புருக்கி நோய்.

யக்ஷ்ம YAKSHMA – காய்ச்சல்

நூற்றுக்கணக்கான யக்ஷ்ம – காய்ச்சல் என்ற சொற்றோடர் யஜுர் வேத வாஜசநேயி சம்ஹிதையில் வருகிறது.

அயக்ஷ்ம AYAKSHMA = நோயற்ற வாழ்வு என்ற சொல் காடக சம்ஹிதையில் வருகிறது

இவை தவிர வயிற்று நோய் , கண் நோய் , இருமல், தலையில் நோய், இருதயத்தில் நோய்  ஆகியவற்றையும் வேதம் குறிப்பிடுகிறது .

ரோகம், ஆமய  என்ற நோய் பற்றிய வேத கால சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன  .

முப்பது நோய்கள்

வேத காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம், இராமாயண- மஹாபாரதம் பாணினியின் இலக்கண நூல் அஷ்டாத்யாயீ என்பனவற்றில் முப்பது நோய்கள்  காணப்படுகின்றன..

மிலிந்த பன்ன என்ற புத்தமத நூல் 98 வியாதிகள் ப ற்றி ப் பேசுகிறது ; அதிலும் கூட குறிப்பான விஷயங்கள் இல்லை; ஏனெனில் அதுவும் சமய நூல்தான்.

ஆனால் புத்தர் காலத்திலிருந்து கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும்  அதற்கு முந்தைய சரக, சுஸ்ருத சம்ஹிதைகள் மூலம் கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும் தெளிவான சித்திரம் கிடைக்கிறது.

****

ஆயுர்வேத நூல்களுக்கு முன்னர் காணப்பட்ட நோய்கள்,

மல மூத்திர வெளியேற்ற சிக்கல்கள் – அர்த்தசாஸ்திரம்

க்ஷய ரோகம் என்னும் காச நோய் எலும்புருக்கி நோய். – அர்த்தசாஸ்திரம்

பாலியல் நோய் — அர்த்தசாஸ்திரம்

குஷ்டம் – மஹாபாரதம்

வயிற்றுப போக்கும் – அர்த்தசாஸ்திரம் மஹாபாரதம்

ஆஸ்த்மா – மஹாபாரதம்

தோல் நோய் – மஹாபாரதம்

ஜலோதரம்/மகோதரம் – மஹாபாரதம்

வலிப்பு –  மஹாபாரதம்

ராமாயணம் பொதுப்படையாக வாத ரோகம், ரக்த ரோகம் VATA ROGA, RAKTA VIKARA  என்றே சொல்கிறது ; பாணினியின் 2700 ஆண்டுக்கு முந்தைய அஷ்டாத்யாயீ இலக்கண நூல் மூல நோய், இருமல், ஜுரம், குஷ்டம், ரத்தம் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது .

ஆயுர்வேதத்தில் ஆயிரம் நோய்கள்

முதல் முதலில் எழுதப்பட்ட மருத்துவ நூல்களில் நீண்ட நோய்ப் பட்டியல் உளது; ஆயிரம் வியாதிகளுக்கு மேல் உள்ளன.

15 மன நோய்கள்

அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைகள் இறப்பது மிகவும் சர்வ சாதாரணமாக இருந்தது; இதை சரக, சுஸ்ருத சம்ஹிதையில் காணலாம். இதனால் இறந்த  குழந்தைகளுக்குத் தகனமோ, இறுதிக் கிரியைகளோ தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் விளம்பின;  அதே போல 15 மன நோய்களையும் — உன்மத்தம்– அவை குறிப்பிடுகின்றன.

****

உதவிய நூல் – பழங்கால இந்தியாவில் மருந்துகள் – ஆசிரியர் கன்சீவ் லோஷன் – வாரணாசி- ஆண்டு 2003.

REFERENCE- MEDICINES OF EARLY INDIA, KANJIV LOCHAN, CHAUKHAMBHA SANSKRIT BHAWAN, VARANASI, 2003

—SUBHAM—

 TAGS – மன நோய்கள், ஆயுர்வேதத்தில், ஆயிரம் நோய்கள் , வேத காலம், வள்ளுவர் காலம்

Leave a comment

Leave a comment