Post No. 14,396
Date uploaded in London – –16 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
13-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
பத்ராசல ராமதாஸர்! – 2
ச. நாகராஜன்
வருடங்கள் ஓடின. சிறைவாசம் பொறுக்கமுடியாத நிலையில், விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு வந்தார் கோபண்ணா.
“ஏ! சீதம்மா! நீயாவது என் நிலையை ராமருக்குச் சொல்லக் கூடாதா” என்று கூறி விட்டு விஷக் கோப்பையை தயார் செய்து வைத்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
சீதாதேவியின் மனம் உருகியது. ராமரை நோக்கிய சீதாதேவி, இப்படி ஒரு மெய்யன்பர் உருகித் தவிக்க ஏன் அவரைக் காக்காமல் இருக்கிறீர்கள். பன்னிரெண்டு வருட காலம் சிறைவாசம் என்பது ஒரு பெரிய தண்டனை அல்லவா? என்று கேட்க ராமர், “முன்னொரு ஜென்மத்தில் ஒரு கிளியைக் கூண்டில் அடைத்து வைத்து விட்டான் இவன். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறான் இப்போது. இன்றுடன் அந்த தண்டனை காலம் முடிகிறது.
“தானீஷா சென்ற ஜென்மத்தில் காசியில் ஒரு அந்தணனாகப் பிறந்தவன். அபிஷேகம் செய்தால் இறைவன் தரிசனம் கிடைக்கும் என்று 999 குடங்கள் அபிஷேகம் செய்தான். பிறகு பொறுமையின்றி குடத்தை இறைவன் தலையின் மீதே போட்டு உடைத்தான். அதன் பயனாகவே அவன் இப்போது இப்படி பிறக்க நேரிட்டது. அவனுக்கும் தரிசனம் தர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இதோ லட்சுமணருடன் தானீஷாவிடம் செல்கிறேன்” என்றார் ராமர்.
ஹைதராபாத்தில் நடுநிசி நேரத்தில் தானீஷாவின் அரண்மனைக் கதவுகள் தானே திறக்க உள்ளே நுழைந்தனர் ராமரும் லட்சுமணரும்..
நல்ல ஒரு கனவைக் கண்டு விழித்த தானீஷா தன் எதிரே வந்து நின்றவர்களை யார் யார்? என்று வியப்பு மேலிடக் கேட்டான்.
“நாங்கள் கோபண்ணாவின் வேலையாட்கள் என் பெயர் ராமன். இவன் பெயர் லட்சுமணன். இதோ அவர் கொடுத்தனுப்பிய ஆறு லட்சம் வராகனைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று ராமர் கூறி தன் கையிலிருந்த மூட்டையை அவிழ்த்து நாணயங்களைக் கொட்டினார்.
கீழே கொட்டப்பட்டுக் கிடந்த தங்க நாணயங்களைப் பார்த்து பிரமித்தான் தானீஷா.
இதைப் பெற்றுக் கொண்டதற்கு ரசீதைத் தாருங்கள் என்றார் ராமர்.
அதைப் பெற்றுகொண்டு நேராக சிறையை நோக்கி லட்சுமணருடன் விரைந்தார்.
அங்கே விஷக் கிண்ணம் எதிரே இருக்க கோபண்ணா தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
ராமர் லட்சுமணனை நோக்கி, நீ உள்ளே சென்று அந்த கிண்ணத்தைக் கவிழ்த்து விடு என்று ஆணையிட்டார்.
லட்சுமணன் அனந்தனாக – பாம்பாக – மாறி உள்ளே சென்று கிண்ணத்தைக் கவிழ்க்க கோபண்ணா விழித்தார். ரசீதைப் பார்த்துத் திகைத்தார். எதிரே இருந்த ராமர் அவருக்குத் தரிசனம் தந்து அருளினார்.
நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்த தானீஷா வந்தது ராம லட்சுமணரே என்று உணர்ந்து பரிவாரங்களுடன் சிறையை நோக்கி விரைந்து வந்தான்.
அங்கே அவனுக்கும் ராமரின் தரிசனம் கிடைத்தது.
பத்ராசலம் சென்று வழிபடுக என்று ராமர் கூறி அருள, மனம் மகிழ்ந்த கோபண்ணா பத்ராசலம் நோக்கி விரைந்தார்.
அன்றிலிருந்து அவரது பெயர் பத்ராசல ராமதாஸர் என்று ஆயிற்று.
சங்கீதத்தில் வல்லவராக இருந்த அவர் ராமரின் புகழ் பாடி ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார்.
மக்களிடையே ராம பக்தியைப் பரப்பினார்.
ஒரு நாள் தேர் ஒன்று வானிலிருந்து வந்து இறங்க அதில் ஏறினார் ராமதாஸர். தன் மனைவியைக் கூப்பிட அவரோ “ கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்து விட்டு வருகிறேன்” என்று உள்ளிருந்தே பதிலை அளித்தார்.
தேர் வானில் பறக்கும் சமயம் , வெளியே வந்த அம்மையார் ராமதாஸரைக் காணாமல் தவித்தார்.
“நீ உன் மகனுக்குப் பணி செய்! அதற்காகவே நீ இங்கு தங்கி விட்டாய்” என்று வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
பத்ராசல ராமதாஸரின் பாடல்கள் பாரதமெங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.
ஹைதராபாத் செல்வம் கொழிக்கும் சீமையாக விளங்குவதற்குக் காரணம் ராமர் அங்கு கொட்டிய ஆறு லட்சம் வராகன் பொன் நாணயங்களே என்று இன்றும் மக்கள் அனைவரும் பேசி வருகின்றனர்.
மஹா பக்த விஜயம் நூலில் தரப்பட்டுள்ளபடி இந்த திவ்ய சரித்திரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
அற்புதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து ராம நாம கீர்த்தனைகளை இயற்றி அருளிய பத்ராசல ராமதாஸரைப் போற்றுவோமாக!
‘ஶ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம்” என்று பக்தியுடன் பாடிப் பரவசமடைவோமாக! நன்றி, வணக்கம்!
*