
Post No. 14,399
Date uploaded in London – –17 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நூல் அறிமுகம்
சிவஞானபோதம் – மூலமும் உரையும் – நூலாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம்
ச. நாகராஜன்
ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், கள்ளக்குறிச்சியின் வெளியீடாக வந்துள்ள நூல் சிவஞானபோதம் – மூலமும் உரையும் என்ற நூல்.
இதன் ஆசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள்.
சிவஞானபோதம் சித்தாந்த சாஸ்திர நூல்கள் பதினான்கினுள் முதல் நூலாகத் திகழ்கின்றது.
இதை திருவெண்ணெய்நல்லூர் ஶ்ரீ மெய்கண்ட தேசிகர் அருளிச் செய்துள்ளார்.
சிவபெருமான் பற்றிய ஞானத்தை ஆன்மாக்களுக்கு போதிக்கும் நூல் இது என்பதால் சிவஞானபோதம் என்ற பெயரை இந்த நூல் பெற்றது.
சிவாகமகங்கள் மொத்தம் 28 ஆகும். இவை சிவபேதம் மற்றும் ருத்ரபேதம் என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 16வது ஆகமமாக பரமனின் தத்புருஷ முகத்தில் தோன்றிய ஶ்ரீமத் ரௌரவ ஆகமத்தின் ஞானபாதப் பகுதியில் பாபவிமோசனப் படலத்தில் சிவஞானபோதம் பன்னிரெண்டு சூத்திரங்களும் சிவபெருமானால் அருளப்பட்டுள்ளன.
வடமொழியில் உள்ள நூலைத் தமிழில் அருமையாக யாத்துத் தந்தருளியவர் ஶ்ரீ மெய்கண்ட தேசிகர்.
இந்த நூலில் பன்னிரெண்டு சூத்திரங்களும் அளிக்கப்பட்டு முறையான விளக்கமும் தரப்பட்டுள்ளது.
நூலின் இன்னொரு பகுதியாக ஶ்ரீ நந்தியம்பெருமான் ஆகம சிவஞானபோதம் உபதேசம் பெற்ற வரலாறு,
ஶ்ரீ மாணிக்கவாசகரும் சிவஞானபோதமும்,ஶ்ரீ
மெய்கண்ட தேசிகர் அருள் வரலாறு,
வடமொழி சிவஞானபோதமும், சிவாக்கிரம பாஷ்யமும்,
சிவஞான போதமாபாடியம் அருளிச் செய்த ஶ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் அருள் வரலாறு,
இலக்கணம் ஶ்ரீ முத்துக்குமாரத் தம்பிரான் ஸ்வாமிகளும் சிவஞானபோதமும்,
சிவஞானபோதத்துக்கு வந்த உரைநூல்கள் – பதிப்பு விவரம்
ஆகிய ஏழு அத்தியாயங்கள் உள்ளன.
இவற்றில் அரிதில் காணக்கிடைக்காத ஏராளமான சுவையான செய்திகள் ஒரு கலைக்களஞ்சியம் போலத் தரப்பட்டுள்ளன.
நூலாசிரியர் சிவஶ்ரீ தில்லை s. கார்த்திகேயசிவம் அவர்களின் நுண்மாண் நுழைபுலமும் கடின உழைப்பும் நூல் உருவாக்கத்தில் தெள்ளெனத் தெரிகிறது.
இவர் அனைவரது பாராட்டுக்கும் உரியவர்.
நூலுக்குத் தக்கதொரு அருள் வாழ்த்துரையை திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தந்தருளியுள்ளார்.
ஆசியுரையை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனரான திரு ஏ.வி. ஸ்வாமிநாத சிவாசாரியார் தந்து சிறப்பித்துள்ளார்.
நூலின் விலை ரூ 100/ பக்கங்கள் 76
நூல் கிடைக்குமிடம் : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்
கள்ளக்குறிச்சி – 606202 தொலைபேசி: 97518 48933
**