சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் (Post No.14,411)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,411

Date uploaded in London – –20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலை மலர் 29-3-25 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

 சுற்றுலா இடங்கள்

சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் 

ச. நாகராஜன் 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்காலத் தலைநகரமான ஶ்ரீ நகரைப் பற்றி அனைவரும் கூறும் பிரபலமான புகழ் மொழிகள் இரண்டு உண்டு.

“அட கடவுளே! இனி சொர்க்கம் என்று ஒன்று இல்லை; இது தான் சொர்க்கமே!”

“பண்பாடு,  இயற்கை அழகு, அமைதி ஆகிய அனைத்தும் கலந்த அற்புத இடம் ஶ்ரீ நகர் தான்!”

கிழக்கின் வெனிஸ் நகரம் (VENICE OF THE EAST ) என்று புகழப்படும் இதை அடைய ஜம்மு, மும்பை, டில்லி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து விமான வசதி உண்டு. ரயில் மூலமாகவும் பஸ் மூலமாகவும் பல்வேறு இடங்களிலிருந்து இதை எளிதில் அடைய முடியும்!

அழகிய இமயமலை பின்னணியும் பிரம்மாண்டமான ஏரியும் அனைவரையும் இங்கு ஈர்க்கின்றன என்றால் அது மிகையல்ல!

இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

என்றாலும் முக்கியமான இடங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்..

சங்கராசார்யர் கோவில்

ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவாலயமானது ஶ்ரீ நகர் நகரத்திலிருந்து 1100 அடி உயரத்தில் சங்கராசார்யா மலை உச்சியில் உள்ளது.

பிரபல மன்னனான கல்ஹணர் காலத்திலிருந்து இது மிகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இதை அவர் கோபாத்ரி என்று அழைத்தார். சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு திரள்வர்.

தால் ஏரி

மிகவும் அழகிய தால் ஏரி ஶ்ரீ நகரின் முக்கிய ஈர்ப்பு மையமாகும். மிதக்கும் தோட்டங்களுக்கும் படகு வீடுகளுக்கும் இது மிகவும் புகழ் பெற்றது. பின்னணியில் மாபெரும் இமயமலை இருக்க இதன் அழகில் சொக்கிப் போகாதவர் இருக்கவே முடியாது.

ஏரியின் தூய்மையான நீரில் மலையின் பிரதிபலிப்பைக் காணலாம். இங்கு ஷிகாரா ரைட் எனப்படும் பாரம்பரிய படகு சவாரியை மெற்கொள்ளாதவர் இல்லை. சுமார் 16 கிலோமீட்டர் நீளமுள்ள ஏரியில் அழகாகப் படகு சவாரி செய்தவாறு இயற்கையை அணுஅணுவாக ரசிக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. குறைந்தபட்சம் 45 நிமிடங்களை எடுக்கும் இந்த சவாரிக்கு கட்டணம் உண்டு. ஒரு நாளில் எந்த நேரத்திலும் இந்த சவாரியை மேற்கொள்ளலாம்.

ஷாலிமார் பாக்,  – முகல் கார்டன்

முகலாய மன்னனான ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக அமைத்த தோட்டம் முகல் கார்டன் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தோட்டங்கள், நீரூற்றுகள் மிக்க அழகுடன் காட்சி அளிக்கின்றன. பின்னால் உள்ள பிர்பஞ்சல் மலைத்தொடர் சரியான பின்னணியைத் தருகிறது. மலர்ந்து குலுங்கும் ஒளி வீசும் மலர்கள் மனதிற்கு இன்பத்தைத் தரும்.

நைகீன் ஏரி

நாகீன் ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த நைகீன் ஏரி பர்பத் மலையின் அடிவாரத்தில் வில்லோ மரங்களும் பாப்லர் மரங்களும் ஏரியைச் சூழ்ந்திருக்க பரந்திருக்கும் ஒரு ஏரியாகும்,  படகு வீடுகளும் ஷிகாரா படகுகளும் இங்கு உண்டு. இது தால் ஏரிக்கு அருகிலேயே உள்ளது. பரபரப்பில்லாமல் அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் இது.

ஹரி பர்பத்

ஹரி பர்பத் என்றால் மைனா குன்று என்று பொருள். ஹிந்து, முஸ்லீம்,, சீக்கியர் ஆகியோர் வழிபடுவதற்காகன் அநேக வழிபாட்டு இடங்கள் இங்கு உள்ளன.

இந்தக் குன்றின் மீதுகுள்ள துர்ரானி கோட்டையை அக்பர் 1590ல் கட்ட ஆரம்பித்தார். ஆனால் திட்டம் முழுவதுமாக முடியவில்லை. இப்போது நாம் காணும் கோட்டையை 1808ல் ஷூஜா ஷா துரானி என்பவர் கட்டி முடித்தார். இந்தக் குன்றின் மேற்குப்புறத்தில் உள்ள ஷாரிகா தேவி ஶ்ரீ நகரின் காவல் தெய்வமாக இருக்கிறார் என்பது ஐதீகம்.

துலிப் கார்டன்

இந்திரா காந்தி நினவாக இது ‘இந்திரா காந்தி நினைவக துலிப் கார்டன்’

என்றும் அழைக்கப்படுகிறது. ஜபர்வான் குன்றில் அமைக்கப்பட்ட இந்தத் தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களை இமயமலை பின்னணியோடு பார்த்து மகிழலாம், இந்த மலர்ப் படுக்கை மையத்தில் ஓய்வாக நடந்து செல்வதே மனதுக்கு இதம் தரும்.

துலிப் என்பது ஒருவகை தண்டுக் கிழங்கு கொண்ட காட்சிப் பூக்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இது லிலியாசே என்று அழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. காணக் கண் கொள்ளாக் காட்சி தரும்

60 வகைக்கும் மேற்பட்ட 15 லட்சம் துலிப் இங்கு உள்ளன.

பாரி மஹால்

தால் ஏரிக்குத் தென்மேற்கே அமைந்துள்ள பாரி மஹால் பெரிய தோட்டமாகும்.   க்விண்டிலான் என்று பிரசித்தி பெற்றிருக்கும் இது ஆறு தளங்களைக் கொண்டுள்ளது.  இதன் நீளம் 400 அடி. அகலம் 205 அடி.  பாரி மஹால் என்றால் தேவதைகளின் இல்லம் என்று பொருள். இது ஷாஜஹானின் மூத்த மகனான தாரா ஷிகோவினால் தனது ஆசிரியர் முல்லா ஷா படாக்ஷியின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். பழைய காலத்தில் இது ஒரு புத்த மடாலயமாக விளங்கியது. தாரா வானவியலில் ஆர்வம் கொண்டவர். வானவியல் மற்றும் ஜோதிடம் கற்பிக்கும் மையமாக இது முன்பு திகழ்ந்தது.

லால் சௌக்

இது சந்தடி நிறைத்த ஒரு பிரபலமான சந்தையாகும். ஏராளமான கடைகளில் விதவிதமான பொருள்களை வாங்கலாம். இந்தப் பகுதியில் ஒரு சுற்று சுற்றினாலே காஷ்மீர் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதால் பல நாட்டினரும் இங்கு சுற்றி வருவதைப் பார்க்கலாம்.

இன்னும் ஜாமா மசூதி, மகிழ்ச்சியின் தோட்டம் எனப்படும் நிஷாத் பூங்கா உள்ளிட்ட ஏராளமான இடங்கள் ஶ்ரீ நகரில் பார்ப்பதற்கு உள்ளன.

நதிகள் கீதம் பாட, மலைகள் முணுமுணுக்க, காற்று சிலுசிலுக்க சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்!

***

Leave a comment

Leave a comment