WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,416
Date uploaded in London –21 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
மறம்பயம் மலைந்தவர் மதில் பரிசு அறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புறம்பயம் திருத்தலமாகும்.. சோழநாட்டு வடகரைத் தலங்களில் 46வது தலமாக இது அமைகிறது.
இறைவன் திருப்பெயர் : சாட்சி நாதேஸ்வரர், புன்னைவனநாதர், புறம்பயநாதர், கல்யாண நாதர்
சந்நிதி: கிழக்கு
இறைவி திருப்பெயர்: கரும்படுசொல்லம்மை, இக்ஷுவாணி
தல விருட்சம் : புன்னை மரமாகும்.
செட்டிப் பெண்ணுக்குச் சாட்சியாக மதுரைக்குச் சென்ற மிகப் பழைய வன்னி மரமும் உண்டு.
தீர்த்தம்: பிரம தீர்த்தம், சப்தசாகரகூபம், சூரிய புட்கரிணி, சந்திர புட்கரிணி
இங்கு வழிபட்டோர்: அகஸ்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்திரர், சம்பந்தர் உள்ளிட்ட ஏராளமான முனிவர்களும் மகான்களும்.
பாஹ்யாம்புபுரம் என்றும் கல்யாண நகரம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் ஏராளம் உண்டு.
மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்ற ஒரு வணிகன் இந்த ஆலயத்தில் வன்னி மரத்தின் கீழ் பாம்பு கடித்து இறந்தான். இவனுடன் வந்த இளம் கன்னி ரத்தினாவளி இந்த ஆலய ஈசனிடம் அழுது புலம்பினாள். உடனே ஈசன் வணிகனை உயிர்ப்பித்து மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியவற்றை சாக்ஷியாக வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மதுரைக்கு இருவரும் சென்ற போது வணிகனின் மூத்த மனைவி, ரத்தினாவளியை ஏற்காத நிலையில் திருமணம் நடந்ததை இறைவன் சாட்சிகளுடன் தோன்றி உண்மையை உரைத்தார்.
இன்றும் மதுரை மீனாட்சிகோவிலில் சாட்சியாக வந்த மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியன உள்ளன. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
இப்படி செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம் என்பதால் இறைவனுக்கு சாட்சிநாதேஸ்வரர் என்ற திருப்பெயர் அமைந்தது.
அம்பிகை தவிர ஏனைய நான்கு சாக்ஷி சொன்ன வடிவங்களும் இதற்கு அறிகுறியாக பெரிய பிரகாரத்தில் அக்னி மூலையில் சேர்ந்து உள்ளன.
சிவலிங்கம் மதுரைக்கு சாக்ஷி சொல்லச் சென்ற போது மூலஸ்தானத்திலிருந்து காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்து, பின்னர் அவர் திரும்பி வந்தவுடன் தனியே வேறு இடத்திற்கு வந்தவர் பிரத்தியக்ஷநாதர் என்ற பெயரில் லிங்க வடிவமாக உள்ளார். இவரது ஆலயம் தனியாக கர்பக்ருஹத்திற்கு வடக்கே உள்ளது.
இந்த ஊரின் வரலாற்றைச் சொல்லும் வன்னிநாடகம் என்னும் ஒரு நூல் செய்யப்பட்டு அது ஆடப்பட்டு வருகிறது.
இந்தத் தலத்தில் சனகாதி முனிவர்களுக்கு சிவபிரான் தக்ஷிணாமூர்த்தி வடிவமாக எழுந்தருளி ஞானோபதேசம் செய்தார். இந்த மூர்த்தி பெரிய கோபுரத்துக்கு வெளியே சந்நிதிக்கும் வடக்கே இடது புறத்தில் தனியாக உள்ளது. இதையே மாணிக்கவாசகர் “புறம்பயந்தனில் அறம் பல அருளியும்” என்று குறிப்பிடுகிறார்.
இங்குள்ள பிள்ளையார் பிரளயங்காத்த பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் உருவம் நத்தாங்கூடு, கிளிஞ்சல், மணல் ஆகியவற்றால் ஆக்கப்பட்டது. ஒரு காலத்தில் கடல் வெள்ம் தோன்றி இந்த நகரை அழிக்க இருந்த தருணத்தில், கடல் வெள்ளத்திலிருந்து நத்தாங்கூடு முதலியவற்றை விநாயகராகப் பிடித்து வைத்துக் கடல் வெள்ளம் நகரை அழிக்காதவாறு காப்பாயாக என்று சிவபிரான் நியமிக்க அப்படியே பிள்ளையார் செய்து நகரைக் காத்ததால் அவர் இந்தப் பெயரைப் பெற்றார்.
மஹாமண்டபத்தில் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி இந்தப் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். விநாயக சதுர்த்தி தோறும், நூறு சேருக்குக் குறையாமல் தேன் அபிஷேகம் இவருக்குச் செய்யப்படுகிறது. எல்லாமே திருமேனியில் உறிஞ்சப்பட்டு வற்றி விடும்.
தீர்த்தங்கள்:
சப்தசாகர கூபம் என்னும் தீர்த்தம் ஏழு கடல்களும் பொங்கி எழுந்து உலகத்தை அழிக்க வந்தபோது அவற்றை அடங்கச் செய்தமையால் இந்தப் பெயரைப் பெற்றது.
பெரிய கோபுரத்திற்கு இடப்புறத்தில், நந்தவனத்துக்குள், பிரமதீர்த்தத்தின் தென்கரையில் இது உள்ளது. அமாவாசையன்று இதில் ஸ்நானம் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
பிரம தீர்த்தம்: பெரிய கோபுரத்தின் இடப்புறத்தில் குள வடிவில் இது உள்ளது.
சூரிய புட்கரிணி: இந்தத் தலத்துக்கு ஈசானத்தில் குள வடிவில் இது உள்ளது.
சந்திர புட்கரிணி: மேற்கு வடக்கு மதிலின் புறத்தே ஓடை வடிவில் இது உள்ளது. சித்திரா பௌர்ணமி தோறும் இங்கு ஸ்நானம் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன.
இந்தத் தலத்தில் தான் துரோணாசாரியர் உபாஸித்து அஸ்வத்தாமனைப் பெற்றார்.
இமவான் வழிபட்டு மைநாகத்தைப் பெற்றார்.
இந்த ஊரைப் பற்றி ஏராளமான புலவர்கள் எழுதியுள்ள நூல்கள் உண்டு.
இத்திருத்தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.
இந்த ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள இன்னொரு தலம் பொன்பற்றி என்ற பெயரைப் பெற்ற தலமாகும். இங்கு தான் சுந்தரமூர்த்தி நாயனார் பொன் பெற்றார். சுக்ரீவனும், விஸ்வாமித்திரரும் வழிபட்ட தலமும் இதுவே.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சாட்சிநாதேஸ்வரரும், கரும்படுசொல்லம்மையும்,
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
**