Post No. 14,415
Date uploaded in London – –21 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
6-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
ஜெய் ஜெய்பூர் – 1
ச. நாகராஜன்
இந்திய வீரத்தையும் பாரம்பரியத்தையும் அழகையும், கலைகளின் மேன்மையையும் பக்தியின் உச்சத்தையும் கண்டு உற்சாகம் பெற ஒரு இடத்தை இந்தியாவில் சொல்லுங்கள் என்றால் உடனே வரும் விடை ஜெய்பூர்.
கம்பீரமான இந்த ஊரில் உள்ள கவினுறு காட்சிகள் ஏராளம். முக்கியமானவற்றைப் பார்ப்போமா?
ஹவா மஹால்
ஜெய்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஹவா மஹால்.
தேனடையைப் போலக் காட்சி அளிக்கும் ஐந்து அடுக்கு அரண்மனையான இதை மஹாராஜ சவாய் ப்ரதாப் சிங் 1799ம் ஆண்டில் கட்டினார். சிவப்பு மற்றும் இளநீல கற்களைக் கொண்டு சிடி பாலஸ் அருகில் இது கட்டப்பட்டது.
பிரமிட் போல கட்டப்பட்ட இதில் ஜாரோகாஸ் என்று அழைக்கப்படும் 953 விசேஷமான ஜன்னல்கள் பார்ப்போரைக் கவரும் வடிவமைப்பில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜன்னல்கள் வழியே குளிர்ந்த காற்று பாய்ந்து மஹாலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
அரண்மனையில் வாழும் மகளிர் சாதாரணமாக நகர வாழ்க்கையைப் பார்க்க முடியாமல் தனியே அரண்மனைக்குள்ளேயே இருப்பது வழக்கம். அவர்கள் இதிலிருந்து மீண்டு, நகரத்தைப் பார்க்க வழிவகை செய்யும் முக்கிய நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது.
அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்ட 50 அடி உயரம் கொண்ட இந்த மஹால் 87 டிகிரி சாய்ந்திருக்கும். இங்கு மாடிப்படிகள் கிடையாது. அரண்மனை நாரீமணிகள் நளினமாக நடந்து செல்ல வசதியாக இதில் சரிவுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்லியல் கண்காட்சி ஒன்றும் உள்ளது. ராயல் டோர் என்னும் பிரதான வாயில் வழியே உள்ளே செல்ல வேண்டும்.. இதன் உச்சியிலிருந்து பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு
ஆம்பர் ஃபோர்ட்
அமர் நகரில் ஒன்றரை சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள கோட்டை இது. பவானி என்னும் அம்மனின் பெயரால் இக்கோட்டைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. ராஜபுதன கட்டிடக் கலை அம்சங்களைக் காட்டும் இந்தக் கோட்டை மணல் கற்களாலும் சலவைக் கல்லாலும் கட்டப்பட்டதாகும்.
கோட்டையில் பல அரண்மனைகளும் ஒரு ஏரியும் உள்ளன.
ஜெய் மந்திர் எனப்படும் கண்ணாடி மாளிகை உட்பட பல மாளிகைகள் இங்கு உண்டு. இங்குள்ள ஒலி-ஒளி காட்சியை மறக்காமல் அனைவரும் பார்ப்பது வழக்கம்.
ஆம்பர் கோட்டையின் சுவர்களுக்கு மற்றும் பேசும் சக்தி இருந்தால் அவை ராஜபுதனத்து மன்னர்களின் காலத்தை வென்ற வீர சரித்திரங்களைக் கூறும் என்பது அறிஞர் வாக்கு.
ஜெய்கர் ஃபோர்ட்
ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது. இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்ற மன்னர் தனது வெற்றியைக் கொண்டாட 1310 அடி உயரமுள்ள மலையில் இந்தக் கோட்டையைக் கட்டினார். கோட்டையின் மேல் உள்ள ஜெய்வானா பீரங்கி உலகின் மிகப் பெரிய பீரங்கிகளில் ஒன்று. கோட்டையின் சுவர்கள் எதிரிகள் இடிக்க முடியாதபடி வலிமை வாய்ந்தவை. உள்ளே லலிதா கோவில் ஆரம் கோவில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. ஜெய்கர் கோட்டையையும் ஆம்பர் கோட்டையையும் பூமிக்கடியில் உள்ள ஒரு சுரங்கப் பாதை இணைக்கிறது.
ஒரு போதும் சரிந்து வீழாத கோட்டை இது; இதன் வீர உணர்வு ஒருபோதும் குறைந்ததே இல்லை!
சிடி பாலஸ் (நகர அரண்மனை)
மகாராஜ சவாய் ஜெய்சிங் உருவாக்கிய இந்த அரண்மனை வாஸ்து சாஸ்திரப்படி உருவாக்கப்பட்டது. இங்கு முபாரக் மஹால், சந்திர மஹால், மகாராணியின் அரண்மனை ஆகியவற்றைப் பார்ப்பதோடு மகாராஜா சவாய் மான்சிங் அருங்காட்சியகத்தையும் பார்க்கலாம்.
ஜெய்பூரின் இதயம் துடிக்கும் இடம் இது தான்
என்கின்றனர் பயணிகள்!
ஜந்தர் மந்தர்
திறந்த வெளிக் கோளரங்கமான இதில் மிகப் பெரிய சூரிய கடிகாரம் உள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் கோள்களைப் பற்றிய ஆய்விற்காக செய்யப்பட்ட பல இயந்திரங்களை இங்கு பார்க்கலாம். இது 1734ல் கட்டப்பட்டது.
எதிர்காலம் இறந்தகாலத்தைச் சந்திக்கும் அற்புத இடம் இதுவே என்கின்றனர் அறிஞர்கள்!
பாபு பஜார்
ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும். பிங்க் சிடி என்று ஜெய்பூருக்கு ஒரு பெயர் உண்டு. இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனைத்துக் கட்டிடங்களும் இங்கு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு பிங்க் சிடி என்ற பெயர் வந்தது. இங்கு கைவினைப் பொருள்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கலாம். ஒரு பை நிறைய பாபு பஜாரில் வாங்கும் பொருள்கள் ராஜஸ்தானைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லும்!
to be continued………………………