பொன்முடியின் ஆபாச பேச்சு வழக்கு விவகாரம் (Post No.14,417)


Written by London Swaminathan

Post No. 14,417

Date uploaded in London –  21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 20-4-2025

COLLECTED FROM POPULAR DAILY NEWSPAPERS AND EDITED FOR BROADCAST.

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 20-ஆம் தேதி 2025-ம் ஆண்டு

*****

முதலில் தமிழ் நாட்டுச் செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து உயர் நீதி மன்றம் உத்தரவு

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

” ஆபாச பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: பொன்முடியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் பதவி வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? அவரது பேச்சு பெண்களை மட்டும் அல்லாமல், சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதற்கு மாலை 4:45 மணிக்குள் டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

பொன்முடியின் பேச்சு வில்லில் இருந்து விடுபட்ட அம்பை போல் மக்களை சென்றடைந்துவிட்டது. மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நன்றாக தெரிந்தே பொன்முடி பேசி உள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் காணப்படுகிறது. வேறு யாராவது பேசியிருந்தால் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாரும் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஊழலை போல் வெறுப்பு பேச்சை சகித்து கொள்ள முடியாது. பா.ஜ.,வின் ராஜா, நடிகை கஸ்தூரி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட பொன்முடி மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த சலுகையை தவறாக பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு உள்ளார். இந்த பேச்சுக்காக சலுகையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா இல்லையா என்பதை வீடியோ கான்பரன்ஸ் அல்லது அரசு வழக்கறிஞர் மூலம் டிஜிபி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மாலை 4:45 மணிக்கு ஒத்திவைத்தார்.

5 புகார்


இந்த வழக்கு மீண்டும் மாலை 4:45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடி பேச்சு தொடர்பாக 5 புகார்கள் வந்துள்ளன. ஏப்., 12ல் புகார் மனு பெறப்பட்டது எனத் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: ஒரு புகாரில் மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4, 5 வழக்குப்பதிவு செய்தால், விசாரணை நீர்த்து போய்விடும். புகார் இல்லாமல் போலீஸ் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அமைச்சராக இருப்பவர் கீழ்த்தரமாக பேசலாமா? இதுபோன்று மற்றவர்கள் பேசியிருந்தால் போலீஸ் அமைதியாக இருந்து இருக்குமா?

பொன்முடி பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.,23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

****

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் புகார்!

இந்துக்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிசத் தர்ம யாத்திரா பொறுப்பாளர் சிவலிங்கம், ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : அதிமுக வளர்மதி

இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

****

வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி


வேலூர்: வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் வசித்து வரும் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமம் உள்ளது. இங்கு 150 ஹிந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.


இவர்களது நிலத்தை, தங்கள் நிலம் என்று வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அங்குள்ள மசூதி மற்றும் தர்ஹாவின் பராமரிப்பாளர் சையத் சதாம் என்பவர், கிராம மக்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில், ஒட்டு மொத்த நிலமும் வக்ப் வாரியத்திற்கு சொந்தம். இதனால், அனைவரும் வாடகை கொடுக்க வேண்டும். அல்லது காலி செய்து வக்ப் வாரியத்திற்கு வாடகை கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆங்கில டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் என்பவர் கூறுகையில் இக்கிராம மக்கள் 3 – 4 தலைமுறையினராக வசிக்கின்றனர். நிலம் கிராம மக்களுக்கு சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் திடீனெர சர்வே எண் 333/1 வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கின்றனர். கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். மக்ளுக்கு பட்டா கொடுக்க வேண்டும்.. இது சட்டவிரோதம். கலெக்டர் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் கூறினார்.

****

விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் திறப்பு – போலீஸ் குவிப்பு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் உள்ள மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து கோவில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான கோவில். இந்த கோவில் அந்த ஊர் மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். அப்போது மற்றொரு பிரிவினை சேர்ந்தவர்கள் அவர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்தனர்.
நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. அதுவரை கோயிலும் மூடப்பட்டு இருந்தது. இரு தரப்பினரும் சுமூகமாக சாமி தரிசனம் செய்யும் வகையில் வருவாய்த்துறை சார்பிலும், போலீசார் சார்பிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்புடன் இன்று பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் அங்கு வந்து, பட்டியலின மக்களுக்காக இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தீர்கள்.. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மட்டும் ஏன் எங்களுக்கு வழங்க மறுக்கிறீர்கள் என்று கூறி கலாட்டாவில் ஈடுபட்டார். எனினும் அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

****

மருதமலையில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை

  மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். திருச்செந்தூர் கோயிலில் கடற்கரை பாதுகாப்பு பணி 30 கோடியில் மேற்கொள்ளப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.   இந்த சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது மருதமலையில் முருகனுக்கு 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்றார்.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கடற்கரை கடல் அரிப்பை தடுக்கும் பணி மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் கோயில்களின் சார்பில் 4 கிராம் தங்க தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி ஆயிரத்து 800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகவும், நடப்பாண்டும் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமயத்தினரின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருத மலை அறிவிப்பு வந்தது குறிப்பிட தக்கது; தமிழ் இந்துக்களின் கொதிப்பைக் கண்டு அஞ்சிய திராவிடர்கள் அடுத்த ஆண்டு தேர்தலை ஒட்டி மந்திர தந்திரங்களில் இறங்கிவிட்டனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர் 

****

சபரிமலையில் புதிய பஸ்ம குளம்: 6 மாதத்தில் பணி முடிக்க திட்டம்

சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது.

கேரள மாநிலம், சபரிமலை சன்னிதானத்தின் பின்புறம் பாரம்பரியமான பஸ்ம குளம் உள்ளது. பக்தர்கள் இந்த குளத்தில் குளித்த பின்னர், ஸ்ரீ கோவிலில் அங்க பிரதட்சணம் செய்துவிட்டு, மீண்டும் குளத்தில் குளித்து திருநீறு அணிந்து செல்வர்.

தற்போது கூட்டம் மிகவும் அதிகரித்துள்ளதால், சீசன் காலங்களில் அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி கிடையாது

சபரிமலை மாஸ்டர் பிளான் படி, கோவிலின் கிழக்கு பக்கத்தில் பஸ்ம குளம் அமைக்க நேற்று பூமிபூஜை நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பணியை துவங்கி வைத்தனர்.

மொத்தம், 15.72 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பஸ்ம குளம், 13 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது.

ஐந்தடி தண்ணீர் இருக்கும். தண்ணீரை சுத்திகரிக்க, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு இயந்திரங்கள் குளத்தின் பக்கத்தில் அமைக்கப்படுகின்றன.

ஆறு மாதத்தில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர் ஒருவரின் நன்கொடையில் குளம் அமைக்கப்படுவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

*****

பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு

பொது நுழைவுத் தேர்வில், மாணவர்கள் அணிந்திருந்த பூணூல் அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பொது நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு சில மாணவர்கள் பூணூல் அணிந்து இருந்தனர். அவர்களிடம் பூணூலை அகற்ற கோரி, தேர்வு அதிகாரி வற்புறுத்தி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2 hour(s) ago

இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதம் தொடர்பான அடையாளங்களை அகற்ற சொன்ன தேர்வு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் கூறியதாவது: இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிதர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்தும் இதே போன்று புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம்.

எந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் கூட, பூணூலை அகற்ற ஒருபோதும் அறிவுறுத்தப்படவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம், என்றார்.

*****

ஹிந்துக்கள் ஆயுதம் வைத்திருங்கள்: பா.ஜ., தலைவர் பேச்சு

மேற்கு வங்கத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம்,” என, அம்மாநில பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திலீப் கோஷ் அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் முர்ஷிதாபாத் உட்பட சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில், ஹிந்துக்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

 முர்ஷிதாபாத் வன்முறை சம்பவத்தை கண்டித்து சமீபத்தில் சார்பில் வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது:

 ஹிந்துக்கள் தங்கள் வீடுகளில் டிவி,  பிரிட்ஜ் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். ஆனால், இதுவரை தங்கள் வீடுகளுக்கு என எந்த ஆயுதத்தையும் வாங்கியது இல்லை.

 தங்கள் பாதுகாப்புக்கு, போலீசை அழைப்பது வழக்கம். தற்போது, எந்த போலீசாரும் உங்களை காப்பாற்ற மாட்டார்கள். எனவே, தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. திலீப் கோஷின் பேச்சுக்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

****

யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

 ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.

கடந்தாண்டு ராம்சரித்மனஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய 3 இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன.

இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், ஹிந்துக்களின் புனித நூலக கருதப்படும் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சர்வதேச அங்கீகாரம் இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது..

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையான தருணம் இது. யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது, நமது உயரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன,’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 *****

 அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியதையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து யாத்ரீகர்கள் பதிவு செய்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த யாத்திரைக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதால் ஏராளமான யாத்ரீகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனர்.

******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஏப்ரல் 27- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—subham—

TAGS- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 20-4-2025

Leave a comment

Leave a comment