WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,422
Date uploaded in London – –22 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
ஜெய் ஜெய்பூர் – 2
ச. நாகராஜன்
நகார்கர் ஃபோர்ட்
நகார்கர் கோட்டை ஆரவல்லி மலையில் அமைந்துள்ள இன்னொரு கோட்டையாகும். நகார்கர் என்றால் புலி என்று பொருள். இது முதலில் சுதர்ஷன்கார்க் என்று அழைக்கப்பட்டது. ஜெய்பூரின் வலிமை வாய்ந்த அரணாக இது திகழ்கிறது. அரசர்கள் ஒரு காலத்தில் நடந்த இந்த இடத்தில் பயணிகள் இன்று நடந்து உத்வேகம் பெறுகின்றனர்!
காலே ஹனுமான்ஜி ஆலயம்
இது ஜெய்பூர் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஹனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தக்ஷிணை தர விழைந்தார்.
சூரிய பகவான் ஹனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தக்ஷிணையாகும் என்றார்.
தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான் குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஹனுமானிடம் கூறினார்.
ஹனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஹனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.
சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். . தன்னை வழிபடுவோர் ஹனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் ஹனுமானுக்கு வழங்கினார்.
அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட ஹனுமான் கறுப்பு நிறமானார்.
காலே ஹனுமான் என்றால் கறுப்பு ஹனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள ஹனுமானை காலே ஹனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.
எப்போதும் பொதுவாக ஹனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.
கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த ஹனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.
சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் ஹனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.
ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர். விட்டது வியாதி; போனது தோஷம் என்பது இங்கு வந்து தொழும் பக்தர்களின் நம்பிக்கை வாக்கு!
பிர்லா மந்திர்
பிர்லா மந்திர் என்று அழைக்கப்படும் லட்சுமிநாராயணன் கோவில் 1988ல் பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோவிலாகும். வெண்மையான சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கொவிலில் லட்சுமி தேவியும் நாராயணரும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர்.
சாந்தம், அழகு, இறை வழிபாட்டின் பலன் – இவை அனைத்தையும் ஒருங்கே தருவது பிர்லா மந்திர்!
ஜல் மஹால்
ஜல் மஹால் என்றால் நீர் அரண்மனை என்று பொருள். இது ஜெய்பூரில் மான் சாகர் ஏரியின் நடுவில் அமைந்துள்ள அழகிய ஒரு அரண்மனையாகும். இதை சவாய் பிரதாப் சிங்க் 1799ல் கட்டினார். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த அரண்மனை முழுவதும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது, ஏரியில் நீர் முழுமையாக நிரம்பும் சமயத்தில் இதில் உள்ள நான்கு அடுக்குகள் நீரிலே மூழ்க ஐந்தாவது அடுக்கு மட்டும் காட்சி அளிக்கும்.
ஜல்மஹால், வானம் நீரைத் தொடும் இடம்; சரித்திரம் கவிதை பாடும் இடம்!
சிசோடியா ராணி அரண்மையும் தோட்டமும்
கூட்டத்தைத் தவிர்த்து அமைதி நாடும் வரும் இடம் இது. ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இது.
மன்னர் சவாய் ஜெய் தனது உதய்பூர் இளவரசியான தனது இரண்டாவது மனைவிக்குப் பரிசாக 1728ம் ஆண்டு கட்டியது இது. இந்த ராணி சூரிய வமிசத்தின் வழி வந்த சிசோடியா பரம்பரையைச் சேர்ந்தவர். பசுமை வாய்ந்த மரங்களும் மலர்ச் செடிகளும் ஒருபுறம் இருக்க பல அடுக்குகள் கொண்ட அரண்மனையை இன்னொரு புறம் காணலாம்.
டக் டக் ரைட் (டக் டக் சவாரி)
ஜெய்பூரில் எல்லா இடங்களுக்கும் செல்ல வசதியாக டக் டக் என்று அழைக்கப்பட்டும் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இந்த டக் டக் சவாரி மூலம் இதன் டிரைவரே திட்டமீட்ட பாதை வழியே ஜெய்பூர் முழுவதையும் சுற்றிக் காட்டி விடுவார். ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என்று நமது வசதிக்குத் தக்கபடி இந்த சவாரியை நாம் அமைத்துக் கொள்ளலாம். இதில் பயணம் செய்வோர் அனைவரும் இதைப் பொதுவாக ரசிக்கவே செய்கின்றனர்.
ஜெய்பூர் என்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டி விடக் கூடாது. வீரம் வாய்ந்த ராஜபுதன அரசர்களின் பரம்பரைக்கே உரித்தான ஏராளமான அரண்மனைகள், அழகிய மாளிகைகள், பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், இறைவழிபாட்டுத் தலங்கள் என்று இன்னும் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆங்காங்கே உள்ள அருங்காட்சியகங்கள் பழமையான சிறப்பு வாய்ந்த வரலாறை நமக்கு விளக்கமாகத் தெரிவிக்கும். ஜெய் ஜெய்பூர்!
***