Post No. 14,430
Date uploaded in London – 24 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8.பாண
ஹர்ஷ மாமன்னனின் அரசவைப் புலவர் பாண .
ஹர்ஷ சரித என்ற புஸ்தகத்தில் ஹர்ஷரின் வாழ்க்கையைத் தந்தார். காதம்பரி என்னும் காதல் காவியத்தையும் எழுதினார். சம்ஸ்க்ருதத்தில் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் வரிசையில் இவரே சிறப்பான இடத்தைப் பெற்றவர் .
காலம் – ஏழாம் நூற்றாண்டு.
****
9.பாரவி
பல்லவர் காலத்தில் வாழ்ந்த பெரிய ஸம்ஸ்க்ருதப் புலவர். கிராதார்ஜுனியம் என்னும் காவியத்தைப் படைத்தவர். பிற்காலப் புலவர்களின் பாராட்டினைப் பெற்றவர்; ஐஹோல் கல்வெட்டில் 634 CE காளிதாசனுடன் இவரையும் புகழ்ந்துள்ளனர் ; காலம் ஆறாம் நூற்றாண்டு.
****
10.பர்த்ருஹரி
சதகத்ரயம் என்ற முன்னூறு நீதிநெறிப்பாடல்களைப் பாடியவர் . நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்காரசாதகம் , ஆகிய மூன்று பிரிவுகளை உடையது இது. இவை மூன்றும் திருக்குறளுக்கு இணையான நீதி நூல் . காலம் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டு.
****
11.அனந்த
இவரது காலம் பத்தாம் நூற்றாண்டு. காஷ்மீரை ஆண்ட மன்னர்களில் ஒருவர். சார்ங்கத்தர பத்ததி என்ற நூலில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது சாரங்கத்தரன் என்ற ஆசிரியர் 280 கவிஞர்களின் கவிதைகளை 1363-ல் தொகுத்தார் ; அந்த நூலில் ஹடயோகம் பற்றிய முக்கியக் குறிப்புகள் உள்ளன.
****
12.பட்ட நாராயண
மஹாபாரதப் போரை வருணிக்கும் வேணி சம்ஹார என்ற நாடகத்தை எழுதினார் . கூந்தலை முடித்த கதை என்பது இதன் பொருள் . திரவுபதியின் துகிலை உரித்து அவமானப்படுத்தியபோது அவள் கூந்தலை முடிப்பது பற்றி எடுத்த சபதத்தையும் பீமனின் சபதத்தையும் விவரிக்கும் நாடகம் இது. காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
13.பவபூதி
காளிதாஸருக்குப் பின்னர் வந்த முக்கிய சம்ஸ்க்ருத நாடகாசிரியர்; இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.
இவர் எழுதிய உத்தர ராம சரிதம் , மாலதி மாதவம் என்ற இரண்டு நாடகங்களும் மிகச் சிறந்த படைப்புகள். இவர் நாடக ஆசிரியர் மட்டுமில்லை; பெரிய கவிஞரும் ஆவார்
****
14.போஜதேவன்
தாரா என்ற நகரிலிருந்து ஆண்ட மிகப் புகழ்பெற்ற மன்னன்.
இந்த மன்னன் எழுதாத விஷயமே இல்லை ; தாமஸ் ஆல்வா எடிசனைவிட அதிக கண்டுபிடிப்புகளையும் லியர்னாடோ டா வின்சியைவிட அதிக சப்ஜெக்டுகளையும் — விமான சாஸ்திரம் உட்பட– எழுதியவன். பெரும் கவிஞன் ; புலவர்களின் புரவலன் . எண்ணற்ற நூல்கள் இவன் பெயரில் உள்ளன .காளிதாசன் காலத்தில் வாழ்ந்த போஜனுக்கு நிகரனாவன் . கவிதை / யாப்பு இலக்கண நூலையும் எழுதினான் காலம் 11-ஆம் நூற்றாண்டு.
****
15.பில்ஹண/ன்
காஷ்மீர் புலவர்; செளர பஞ்சசிகா என்ற காதல் கவிதைத் தொகுப்பினையும் மேலைச் சாளுக்கிய மன்னரின் பிரதாபங்களைக் கூறும் விக்ரமாங்கதேவ சரித என்ற நூலையும் எழுதினார்.
ஒரு மன்னரின் மகளான யாமினி பூர்ண திலகாவைக் காதலித்ததால் அந்த மன்னன் புலவரைச் சிறையில் அடைத்தான்; அவரது கதி என்ன என்று காஷ்மீர் சுவடிகள் கூறவில்லை; ஆனால் தென் இந்திய சுவடிகள் தமிழ்த் திரைப்படங்களைப் போல சுபமாக முடிக்கின்றன . ஸம்ஸ்ருத இலக்கணம் கற்கப்போன இடத்தில் காதல் வலையில் சிக்கிய இந்தப் புலவனின் காதல் கவிதைகள் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. காலம் 11-ஆம் நூற்றாண்டு.
****
16.தண்டி/ன்
காஞ்சிபுர பல்லவர் காலப் புலவன். ஸம்ஸ்க்ருதத்தில் உரைநடை நூலையும் படைத்தவன் ; கவிதை யாப்பு இலக்கணத்தைக் கூறும் காவ்ய தரிசன நூலின் ஆசிரியர் ; உரை நடையில் தச குமார சரிதம் என்ற காதல் கதைகளை எழுதினார் ; மனிதனின் குணாதிசயங்களையும் மாயாஜாலத்தையும் வருணிக்கும் கதைகள் அவை ; தச குமார சரிதத்தைத் தழுவி ஜியோவன்னி பொக்காஸியோ டெகாமரன் கதையை எழுதினார் என்பார்கள் காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
17.தாமோதர குப்த
காஷ்மீர் மன்னன் ஜெயாபிடனின் மந்திரி; வேசிகள் தாசிகள் கதைகளைக் கவிதை வடிவத்தில் கூறும் நாவலை -புதினத்தை எழுதினார்; நாவலின் பெயர் குட்டனிமதம் ; ஆயிரம் கவிதைகளுக்கு மேலுள்ள இந்த நூல் விலைமாதர்களைப் பற்றி எச்சரிக்கும் நீதி நூலாகவே கருதப்படுகிறது. காலம் 8-ஆம் நூற்றாண்டு.
TO BE CONTINUED…………………….
TAGS- தாமோதர குப்த ,.தண்டி, பாராவி, பர்த்ருஹரி, பில்ஹண , போஜன், பாண, பவபூதி , அறுபது சம்ஸ்க்ருத புலவர்கள் , பகுதி 2