ஆலயம் அறிவோம்! சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மர் கோவில் (Post.14,445)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 445

Date uploaded in London –28 April 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27-4-2025 ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

எங்கும் உளன் கண்ணன் என்ற  மகனைக் காய்ந்து

இங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப

அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய

என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே

–    நம்மாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டிணம் அருகே சிம்மாசலம் மலையில் அமைந்துள்ள வராக லட்சுமி நரசிம்மர் கோவில் கொண்டுள்ள இடமாகும்.

இது விசாகப்பட்டிணம் கடற்கரையோரம் ரத்னகிரி மலையில் உள்ள வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. இது வைணவத் தலங்களுள் ஒன்றாகும்.

கடல்மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது.

மலையடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல ஆயிரம் படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே செல்ல வண்டி வசதிகளும் உண்டு.

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் உண்டு.

மஹா விஷ்ணு வசித்து வந்த வைகுண்டத்திற்கு காவல் காக்க இரு துவாரபாலகர்கள் இருந்தனர். விஷ்ணுவைத் துதிக்க வந்த முனிவர்களை இவர்கள் துன்புறுத்தவே அவர்களுக்கு விஷ்ணு சாபமிட்டார். முதல் துவாரபாலகன் இரண்யகசிபு என்ற அரக்கனாகவும் இன்னொரு துவாரபாலகன் அவன் தம்பி இரண்யாட்சன் என்ற அரக்கனாகவும் பிறந்தான்.

இரண்யகசிபு அனைத்து தேவர்களையும் கொடுமைப் படுத்தி, ‘தானே கடவுள்’, தன்னையே வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான்.

அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனே சிறந்த விஷ்ணு பக்தனான பிரகலாதன். நாரதரின் வளர்ப்பிலே வளர்ந்த பிரகலாதன் நாராயண நாராயண  என்று எப்போதும் விஷ்ணுவின் நாமத்தைக் கூறிக் கொண்டே இருந்தான்.

இதனால் கோபமுற்ற இரண்யகசிபு பிரகலாதனைப் பல விதத்திலும் கொடுமைப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ நாராயண நாமத்தை விடவே இல்லை.

கடைசியாக ஒரு நாள் இரண்யகசிபு, “சொல்! உன் நாராயணன் எங்கே இருக்கிறான்” என்று பிரகலாதனை அதட்டிக் கேட்க, பிரகலாதன், “நாராயணன் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார்” என்று பதிலளித்தான்.

“இதோ இந்தத் தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?” என்று கேட்டு இரண்யகசிபு அருகில் இருந்த தூணை எட்டி உதைக்க அதிலிருந்து ஆவேசமாக தூணைப் பிளந்து நரசிங்க ரூபமாக வந்த விஷ்ணு பகவான் அவனைத் தன் மடியில் வீட்டு வாசலில் வைத்து தன் கூரிய நகங்களால் அவன் வயிற்றைக் கிழிக்க அவன் மாண்டு போகிறான்.

ஒரு முறை பிரகலாதனைக் கடலில் வீசுமாறு இரண்யகசிபு ஆணையிட்ட போது விஷ்ணு பகவான் அந்த மலையின் மீது இறங்கி அவனைக் காப்பாற்றினார். ஆகவே தான் இது சிம்மாத்ரி என்ற பெயரைப் பெற்றது.

முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நரசிம்மராக அங்கேயே குடியிருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.

இந்தக் கோவிலில் உள்ள நரசிம்மர் சந்தன மேனியுடனேயே காட்சி அளிக்கிறார். இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

தந்தை இரண்யகசிபுவின் மறைவுக்குப் பிறகு  பிரகலாதன் அகோரருக்கு கோவில் ஒன்றைக் கட்டினான். யுக முடிவில் அது அழியத் தொடங்கியது. மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது.

அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூருவன் என்ற மன்னன் இந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு எடுத்து ஒரு கோவிலைக் கட்டினான். அந்தச் சமயத்தில் அசரீரி ஒன்று ஒலித்து விக்ரஹத்தின்  மேனியைச் சந்தனத்தால் பூசி மேனியைக் காண முடியாமல் செய்ய வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உண்மை உருவத்தைக் காண வேண்டும் என்று சொல்ல அப்படியே மேனி சந்தனத்தால் பூசப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வளர்பிறையில் மூன்றாம் நாள் நரசிம்ம மூர்த்தியின் தரிசனம் அனைவருக்கும் காட்சி தருமாறு சந்தனப் பூச்சு நீக்கப்படுகிறது. இது அட்சய திருதியை தினத்தன்று நடைபெறுகிறது.

இந்தக் கோவிலைப்  பற்றி பதினோராம் நூற்றாண்டு குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

கங்க மன்னர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலை விரிவாக்கியுள்ளனர்.

கோவிலில் உள்ள விக்ரஹம் வராக மற்றும் நரசிம்ம அவதாரங்களின் அடையாளத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

கோவிலின் நடுவே கர்பக்ருஹம் அமைந்துள்ளது. அதன் நடுவில் ஒரு சிறிய மேடையில் மூலவர் சந்தனப்பூச்சு பூசப்பட்டு லிங்கம் போலக் காணப்படுகிறார். வைகாசி மாதம் சந்தனப் பூச்சு நீக்கப்படும் சமயத்தில் அவர் தனது உண்மைத் தோற்றத்துடன் காட்சி தந்து அருள்கிறார். இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன் இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருகிறார். இரு பக்கங்களிலும் ஶ்ரீ தேவியும் பூதேவியும் உள்ளனர். ஆண்டாள், லக்ஷ்,மி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.

கர்பக்ருஹத்திற்கு இடது பக்கம் கப்பஸ்தம்பம் என்ற ஒரு தூண் மணிகளாலும் பட்டுத் துணியாலும் அலங்கரிப்பட்டுள்ளது. இந்தத் தூணிற்கு அடியில் சந்தான கோபாலரின் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த தூணைக் கட்டிக் கொள்ப்வர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.

கோவிலின் பிரதான வாயில் கலி கோபுரம் என்று அழைக்கப்படுகிறாது.

கோயில் ஒரிய பாணியில் அமைந்துள்ளது.

கோவிலில் பல முக்கிய விழாக்கள் உண்டு. கல்யாண உற்சவம் மற்றும் சந்தனயாத்திரோட்சவம் ஆகியவை சிறப்பு விழாக்களாக அமைகின்றன. ஏராளமான பக்தர்கள் சந்தன யாத்திரையில் பங்கு கொள்கின்றனர்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ  வராக லட்சுமி நரசிம்மர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment