ஞானமயம் வழங்கும் 27 4 25 உலக இந்து செய்திமடல் (Post No.14,448)

Written by London Swaminathan

Post No. 14,448

Date uploaded in London –  28 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

collected from popular dailies and edited for broadcast.

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 27-ஆம் தேதி 2025-ம் ஆண்டு

முதலில் காஷ்மீர் செய்தி

காஷ்மீர் தாக்குதலால் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகள்

காஷ்மீரில்  பஹல்காம் என்னும் சுற்றுலாத் தலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் 28 இந்து சுற்றுலாப் பயணிகளை ஏப்ரல் 22 ஆம் தேதி தாக்கிக்கொன்ற சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது; சவூதி அரேபியாவுக்குச் சென்ற பிரதமர் பாதியில் பயணத்தைக் கைவிட்டு  நாடு திரும்பினார் . பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இதற்குக் காரணம் என்பதால் இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது ;பயங்கரவாதிகள் நடத்திய படுகொலையில் கடற்படை, விமானப்படை அதிகாரிகள் இருவரும் கொல்லப்பட்டனர் இந்து என்ற ஒரே காரணத்துக்காக புதிதாக கலயாணம் செய்து தேனிலவுக்கு வந்தவர்களையும் பயங்கரவாதிகள் சுட்டுத்தள்ளினார்கள்

நாடு முழுதும் கோவில்களிலும் மடாலயங்களிலும் இந்துக்கள் மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் இந்தப் படுகொலையைக் கண்டித்தது பாரத நாடு ஒன்றே என்பதை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியது . மத்தியக்கிழக்கிலுள்ள பயங்கரவாதிகளை இஸ்ரேல் வேரறுத்து வருவது போல இந்தியாவும் பாகிஸ்தானிய பங்களாதேஷ்  பயங்கரவாதிகளை வேரறுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் பத்திரிக்கைகளில் எழுதி வருகின்றனர் .

நாட்டிலுள்ள இந்துக் கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வார்கள். அங்கு இயற்கையாக உருவாகும் பனிலிங்கம் சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுவதே அதற்கு காரணம். யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இம்முறை அமர்நாத் யாத்திரை நடக்குமா என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கு அமைச்சர்  பதில் அளித்துள்ளார்  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 பயங்கரவாத தாக்குதல் இருந்த போதிலும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சுற்றுலா தொடங்கும். அந்த நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது. அமர்நாத் யாத்திரை இம்முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

திருப்பதியில் உச்சகட்ட பாதுகாப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து திருப்பதி மலையில் உச்சகட்ட பாதுகாப்பு பிறப்பிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி மலைப்பாதையின் இணைப்புச் சாலை அருகே அனைத்து வாகனங்களும், பக்தர்களின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

****

காஞ்சி சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி தேர்வு

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு/20 வயதான துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா திராவிட் தேர்வாகியுள்ளார் /ஆந்திர மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச ஷர்மா திராவிட்/2006ல் வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியை பெற்றவர் /ரிக்யஜுர்சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர் /தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வந்தவர்.


ஏப்ரல் முப்பதாம் தேதி அவருக்கு தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி தீட்சை வழங்குகிறார்.
*****

காஞ்சி சங்கராச்சார்யார் மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை நாளில் தீட்சை வழங்கப்படும் என்று சங்கர மடம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மாவுக்கு சன்யாச தீக்ஷை வழங்குகிறார்.

இந்த புனித சன்யாச தீக்ஷை கிமு 482 இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 வது ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது.

காஞ்சி மடத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆந்திராவின் அன்னவரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா திராவிட், 2006 ஆம் ஆண்டு வேதப் படிப்பில் ஈடுபட்ட காலத்திலிருந்தே,  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிகளையும் தொடர்ச்சியான அருளையும் பெற்றுள்ளார்., ரிக் வேதத்துடன் கூடுதலாக யஜுர் வேதம், சாமவேதம்,ஆறு அங்கங்கள் , தசோபநிஷத் ஆகியவற்றையும் முடித்து சாஸ்திரப் படிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் .

அவர் ஆந்திராவில் உள்ள துனியில் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர்  ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணிய தன்வந்திரி. தாயார்  பெயர் மங்காதேவி.

ஸ்ரீ சர்மா  வேதக் கல்வியை கர்நாடகாவின்  ரத்னாகர பட் சர்மாவிடமும் , சம்ஸ்க்ருத இலக்கணத்தை

 திருமலை திருப்பதி தேவஸ்தான வேத அறிஞரான பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடமும் படித்தார். ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரின் கீழ் வேத அர்த்தத்தையும் கற்றார்

வேதப் படிப்புகள் தவிர, அன்னவரத்தில்10–வது வகுப்பு தேர்வையும் முடித்துள்ளார்..

நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

****

பொன்முடி பதவி நீக்கம் : தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு, பொன்முடி, ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் முதலமைச்சர் குறித்துத் தெரிவித்த கருத்துகளை மனுவில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, வழக்கு மனுவில் திருத்தம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியது தொடர்பாக ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், பொன்முடிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

****

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க முடியாது: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளை அனுமதிக்க முடியாது,” என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்து உள்ளது

கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது மஹாராஷ்டிராவில், சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டும் என்றே அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நிரிபேந்திர பாண்டே என்பவர் உ.பி., நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் முறையீடு செய்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ராகுல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் அமர்வு கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மஹாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள்.

மஹாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களை தொடர்பு கொண்ட போது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்ற குறிப்பிட்டது ராகுலுக்கு தெரியுமா? அவர்களை புகழ்ந்து, ராகுலின் பாட்டி இந்திரா பிரதமராக இருந்த போது கடிதம் எழுதியது தெரியுமா?

சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். ஆனால், நீங்கள் இப்படி செயல்படுகிறீர்கள். சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்து பொறுப்பு அற்றது. சாவர்க்கரை மஹாராஷ்டிரா மக்கள் போற்றுகிறார்கள். அவருக்கு எதிரான இழிவான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

அடுத்த முறை இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பாட்டால், நாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்துவோம். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், ராகுல் மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தனர். மேலும் ராகுலின் மனு குறித்து பதிலளிக்கும்படி உ.பி., அரசு மற்றும் நிரிபேந்திர பாண்டேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.

*****

ஏப்ரல் 24 ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா தினம்; நியூயார்க் நகரம் பிரகடனம் செய்தது

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உலகளாவிய சேவை, சமுதாய நலப்பணிகள், கருணை, அமைதிப் பணிகளை கவுரவிக்கும் வகையில், நியூயார்க் நகரம் சிறப்பு பிரகடனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆதம்ஸ், ஏப்ரல் 24ம் தேதியை ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தினமாக பிரகடனம் செய்தார்.

பிரகடன அறிவிப்பை, மேயர் அலுவலக பிரதிநிதிகள் முன்னிலையில் துணை கமிஷனர் திலீப் சவுகான் வெளியிட்டார்.

இதன் மூலம் உலக அளவில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் அரசு கவுன்சில் நிர்வாகம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சத்ய சாய் குளோபல் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மேற்கொண்ட நற்பணிகள் குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது

****

இந்துக்களிடம் ஒரே கோயில்ஒரே கிணறுஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும் – மோகன் பகவத்

இந்துக்களிடம் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமூகத்தின் அடித்தளமான மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தார்மீக கொள்கைகளில் வேரூன்றிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இதற்காக ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கையை இந்துகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சந்தித்து தங்கள் வீடுகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற செய்திகளை அவர்களிடம் பரப்ப வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், தேசியவாதம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடித்தளங்களை வலுப்படுத்த பண்டிகைகளை கூட்டாக கொண்டாடுமாறும் மோகன் பகவத் அறிவுறுத்தினார்.

****

எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் – ஹெச்.ராஜா

எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் என பாரதீய ஜனதாக கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை ராஜவீதி தேர் நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மணி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஹெச்.ராஜா, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்க  வேண்டும் என கூறினார்.

1968-ம் ஆண்டு சேலத்தில் ஈ.வெ.ராமசாமிக்கு எதிரான வழக்கு நடந்த போது, இந்துக்கள் அந்த இடத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்களா என்று நீதிமன்றம் கேட்டது. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியதும் அந்தவழக்கை அவருக்கு சாதமாக தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.

மேலும், பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை, பொன்முடி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

*****

கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்

 கனாவில் லட்சுமி நாராயணன் கோவிலை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சுவர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் முதலில் தாக்கினர்.   இதைத் தொடர்ந்து   லட்சுமி நாராயணன்  கோவிலை சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து கனடாவில் உள்ள ஹிந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

காலிஸ்தானி பயங்கரவாதிகளால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் நடந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஹிந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

****

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த கேல் தாஸ் என்பவர் சிந்து மாகாணத்தில் மத விவகாரத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தாட்டா என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், அமைச்சர் காரின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

****

கடைசியாக ஒரு சுவையான செய்தி

கோயில் தேங்காயை விலை ரூ.10 லட்சம்


ஒரு தேங்காய் விலை ரூ.10 லட்சமா? ஆம். கோவா மாநில கோயில் தேங்காயைத்தான் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கி உள்ளார் ஒரு பக்தர்.


கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை வருடாந்திர திருவிழா நடைபெற்றது.ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பெர்னெம் நகரம் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

இவ்விழாவின் இறுதியாக, சுவாமிக்கு படைத்த தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது, ஒரு பக்தர் அந்த புனித தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். இதை அவர் தனது வீட்டில் வைத்து வழிபடுவார் என கூறப்படுகிறது.இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது, புனித தேங்காய் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் போனது.

திருவிழாவின்போது, தேங்காய் – பழங்கள் சுவாமிக்கு படைக்கப்படுவது வழக்கம். விழாவின் முடிவில் இவை அனைத்தும் கோயில் நிர்வாகக் குழுவினரால் ஏலத்தில் விடப்படும்.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

மே  மாதம் நான்காம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—-Subham—-

Tags- World Hindu News letter, Gnanamayam, 27 4 2025, Tamil news

Leave a comment

Leave a comment