சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 6

Written by London Swaminathan

Post No. 14,450

Date uploaded in London –  29 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

56. பாணினி 57.பதஞ்சலி

உலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி (Seventhu Century BCE). ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச்  சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக்  கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் /வரருசி என்பவர் விளக்க உரை எழுதினார்.  இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான்.

அதிலுள்ள சில நயங்களை பர்த்ருஹரி தந்தார்.

ப்ராயேன ஸம்க்ஷேப ருசினான் அல்பவித்யா பரிக்ரஹான்

ஸம்ப்ராப்ய வையாகராணான் ஸங்க்ரஹே சமுபாகதே

க்ருதே ச பதஞ்சலினா குருணா தீர்த்த தரிசினா

ஸர்வேஷாம் ந்யாய பீஜானாம் மஹாபாஷ்யே நிபந்தனே––பர்த்ருஹரி

“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால், நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச்  சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார்

பதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீயக்  காட்சிகள்  , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.

பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது.

58.பரதமுனி

பரதமுனி எழுதிய நூல் நாட்டிய சாஸ்திரம் . அதில் ஆறாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதினார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் முடிவான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன . நாட்டிய சாஸ்திரத்தை ஏன் எழுதினேன்?, எப்படி எழுதினேன்? என்று பரத முனிவரே சொல்லுவது முதல் அத்தியாயத்தில் உள்ளது . சொர்க்கத்தில் மட்டுமே பயன்பட்ட நாட்டிய சாஸ்திரம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை கடைசி அத்தியாயம் சொல்கிறது

அவர் நாட்டியம், நாடகம், நாடக மேடை அமைப்பு என ஏராளமான விஷயங்களை எழுதியுள்ளார் ; காலம் –

59.வாத்ஸ்யாயனர்

உலகின் முதல் செக்ஸ் புஸ்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் ; நூலின் பெயர் காமசூத்திரம். இதிலும் மனு தர்ம சாஸ்திரத்திலும் ரிக் வேதத்திலும் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி சொல்லவில்லை . காமசூத்திரம் பொதுவான அழகு சாதனைக் குறிப்புகள் பற்றியும் சொல்கிறது; மிக வியப்பான விஷயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கான சிலபஸை- பாட திட்டத்தையும் சொல்கிறது .

சிலப்பதிகாரத்திலும், கம்பன் பாடல்களிலும், லலிதா சஹஸ்ரநாமத்திலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்திலும் அறுபத்து நான்கு கலைகள் பற்றிப் படிக்கும்போது உடம்பில் புல்லரிக்கிறது! ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்று உலகமே எண்ணியிருந்த காலத்தில் 64 கலைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பெண்ணும் அதைப் பயிலவேண்டும் என்று எழுதிய பெருமை வாத்ஸ்யாயனரையே சாரும்! பிற்காலத்தில் இது அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் ஆகியோர் அனைவருக்கும் பாட திட்டமானதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அன்று வாத்ஸ்யாயனர் எழுதியதை இந்தியர்கள் பின்பற்றி இருந்தால் இன்று உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா ஓங்கி வளர்ந்திருக்கும்.

காம சூத்திர நூலில் வாத்ஸ்யாயனர் எழுதியது, வெறும் காகித திட்டமா? அல்லது செயல்முறையில் பின்பற்றப்பட்டதா என்று ஒரு கேள்வி எழக்கூடும். ரிக் வேதத்தில் உள்ள இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்க இலக்கியத்தில் வந்த இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் பார்க்கையில் இது காகித திட்டம் அல்ல. உண்மையில் அறிவாளிகளை உருவாக்கிய திட்டம் என்றே உறுதியாகக் கூறலாம்.

 60.வராஹமிஹிரர்

மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனி நகர் அருகில் வாழ்ந்த வராஹ மிஹிரர் இரண்டு உலகப் புகப்பெற்ற நூல்களை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்; அவரே சொல்லிவிட்டார்:  இவை அவருக்கும் முன்னால் எழுதப்பட்ட நூல்களின் சம்மரி SUMMARY / சுருக்கமான தொகுப்பு என்று!

ஜோதிடம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் ஜாதகம் என்று பெயர்; விஞ்ஞானம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் சம்ஹிதா  என்று பெயர். பிருஹத் சம்ஹிதா ஒரு என்சைக்ளோ பீடியா ; அதில் வான, பூமி, , மனித, பிராணி, நவரத்தின  சாஸ்திரங்கள் உள்ளன

பெண்களைக் குறைகூறுவோருக்கு எதிர்க் கேள்வி போடுகிறார் வராஹமிஹிரர் . பல ஜோதிட, வான சாஸ்திர நூல்களை எழுதிய இந்த அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்.”உண்மையைச் சொல்லுங்கள் ! பெண்கள் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் ஆண்களிடத்தில் இல்லையா? பெண்களிடம் கூடுதல் குணங்கள் இருந்த போதும் ஆண் அகந்தையால் பெண்களைக் குறை கூறுகிறான் ; .திருமண உறுதிமொழியை ஆண்கள் மீறினாலும் பெண்கள் மீறினாலும் பாவம் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் ஆண்கள் இந்த விதிகளை மதிப்பதில்லை; பெண்களே மதிக்கிறார்கள் ஆகையால் பெண்களே மேல் என்று பெண்களை பாராட்டுகிறார்.

61.மனு நீதி நூல்

மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647; மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12

வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு. என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.

உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.

‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)

‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)

‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)

‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)

‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)

மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).

இவர் இயற்றிய சட்டங்கள் தொடாத விஷயமே இல்லை

62.கங்கா தேவியின் மதுரா விஜயம்

மதுரை மீனாட்சி கோவில்—  துலுக்கர்கள் ஆட்சிக் காலத்தில் 40 ஆண்டுகள் மூடிக்கிடந்தபோது விஜய நகர மாமன்னர்கள் இந்து மதத்தைக் காப்பாற்ற குமார கம்பண்ண என்ற நாயக்க மன்னர் தலைமையில் படைகளை அனுப்பினர். அவன் மாபெரும் வெற்றி கண்டு தமிழகம் எங்குமுள்ள கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். அவன் படை எடுத்த போது அவனுடன் கூடவே வந்தாள் அவனுடைய மனைவி மஹாராணி கங்காதேவி. அவள் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல தான் கண்டவற்றை அப்படியே  சம்ஸ்கிருதக் கவிதையாகப் பொழிந்து தள்ளினார். இந்த நூலின் பெயர் மதுராவிஜயம். உலகில் போர் பற்றிய முதல் நேரடி வர்ணனை இந்த நூலில்தான் உள்ளது— மற்ற நூல்கள் போர் முடிந்தபின் எழுதியவை..

63.முத்துசுவாமி தீட்சிதர்

சம்ஸ்க்ருத மொழியில் வேறு எவரும் செய்யாத அதிசயங்களை செய்து காட்டியவர் ! ஒரே  வேற்றுமையை – விபக்தியைப்— பயன்படுத்தி கிருதிகள் இயற்றினார்; உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அதிசயம் இது.

அரிய தகவல் 1: இவர் ஒவ்வொரு பாடலிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையோடு பாடலின் ராகத்தையும் இணைத்துக் கூறுகிறார்.

தகவல் 2: கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான இவர் செய்த ‘வாதாபி கணபதிம் பஜே’ என்ற ஹம்சத்வனி ராக பாடலைத் தான் முதலில் கற்பிப்பார்கள். இவர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரான சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோர் காலத்தவர்.

தகவல் 3: இவர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

தகவல் 4: சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த  மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன.

தகவல் 5: பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்.

தகவல் 6: இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார்.

தகவல் 7: இவர் பாடல்களில் வரும் புராண, இதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்..

64.வேதாந்த தேசிகன் / வேதாந்த தேசிகர் (1269-1369)

வேதாந்த தேசிகர் காஞ்சிபுரத்தில் பிறந்தார். தந்தையார் – அனந்தசூரி, தாயார்- தோத்தாத்ரி அம்மையார். இயற்பெயர் திருவேங்கடமுடையான் .   

தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும்  நூல்கள் எழுதி வைஷ்ணவத்தை வளர்த்தார். வடகலை சம்பிரதாயத்த்தினர் இவரைப் போற்றி வருகின்றனர். இறைவனுக்கு மொழி வேறுபாடு இல்லை என்பதை நிலைநாட்டியவர் . உபாயவேதாந்த – இரு மொழியில் வல்லவர் — என்ற வழக்கினை நிலைநாட்டினார் .

நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார் என்பது சம்பிரதாயம் .இவர் திருமாலின் மணியின் அவதாரம் என்பதும் நம்பிக்கை .

120- க்கும் மேலாக இவரெழுதிய நூல்களில் பெரும்பாலானவை சம்ஸ்க்ருதத்தில் உள்ளன அருணகிரிநாதரின் சந்தததமிழ் போல சம்ஸ்க்ருத சந்தக் கவிதைகளை இவர் பாடல்களில் காணலாம். சொல் விளையாட்டுச் சித்தர். இவர் நான்கு மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்றவர்.

ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர்

நாள்தோறும் காலையிலிருந்து இரவு வரையிலுள்ள நேரத்தைஒழுங்குபடுத்தி இவர் அமைத்திருந்த வேலைத் திட்டம் ‘தினசரியை’ என வழங்கப்பட்டது. இது வைணவரின் நித்திய கரும  வழிகாட்டியாகக் கருதப்படுகிறது.

****

Last Part —மூககவி , வால்மீகி, வியாசர்  ,சுபாஷித ஸ்லோகங்கள், கல்வெட்டுக் கவிஞர்கள், அமரசிம்மனின் அமரகோஷம் ஆகியன பற்றியும் அடுத்துக் காண்போம்

To be continued………………

Tags- வேதாந்த தேசிகர் முத்துசுவாமி தீட்சிதர்,கங்கா தேவி, மனு நீதி நூல் ,வராஹமிஹிரர் ,வாத்ஸ்யாயனர் ,பரதமுனி ,பாணினி பதஞ்சலி

Leave a comment

Leave a comment