துக்காராம்! – 2 (Post No.14,457)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,457

Date uploaded in London – –1 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-4-2025 ஞான மயம் நிகச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை! இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

துக்காராம்! – 2 

ச. நாகராஜன்

இதே போல இன்னொரு சம்பவமும் உண்டு.

ஒரு நாள் ஏழைப் பெண்மணி ஒருத்தி துக்காராமைப் பார்த்து, ‘உடுத்திக் கொள்ள ஒரு துணியும் இல்லை. ஏதாவது ஒரு ஆடையைத் தாருங்கள்” என்று கெஞ்சினாள்.

மனம் இரங்கிய துக்காராம் வீட்டின் கொல்லைப்புறத்தில் உணர்த்தி இருந்த தன் மனைவி கமலாபாயின் புடவையை எடுத்துக் கொண்டு அவளிடம் கொடுத்தார். அவளும் அவரை வாழ்த்தியவாறே அதைப் பெற்றுக் கொண்டாள்.

வீட்டில் உலர்த்தி இருந்த தன் புடவையைக் காணாது திடுக்கிட்டுத் தேடிய கமலாபாய் அதைத் தெருக்கோடியில் சென்று கொண்டிருந்த ஏழைப் பெண் எடுத்துச் செல்வதைப் பார்த்துக் கோபம் கொண்டாள்.

அவளிடம் சென்று கேட்க அவளோ துக்காராம் தான் அதைக் கொடுத்தார் என்றாள்.

இதனால் மிகவும் கோபமுற்ற கமலாபாய் ஒரு அம்மிக் குழவிக்கல்லை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி ஓடினாள். ‘இதனால் கோவிலில் உள்ள பண்டரிநாதனின் திருவடிகளை நசுக்கி விட்டுத்தான் அடுத்த வேலை’ என்ற அவளது குமுறலைக் கேட்ட துக்காராம் திடுக்கிட்டார்.

கோவிலில் நுழைந்த கமலாபாயைக் கண்ட கிருஷ்ணன், ருக்மிணியைப் பார்த்து, “ஹே ருக்மிணி! ஏழைப் பெண் வேஷம் போட்டு புடவையை துக்காராமிடமிருந்து வாங்கி வந்தாயே. இதோ துக்காராமின் மனைவி கமலாபாய் ஓடி வருகிறாள். அவளுக்கு ஞானோபதேசம் செய்” என்றார்.

கமலா பாய் ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் கதவுகள் பலத்த மணி ஓசை எழுப்பி  தாமாக மூடிக் கொண்டன.

ருக்மிணி தேவி கமலாபாயின் புடவையை உடுத்திக் கொண்டு கமலாபாயின் முன்னே காட்சி அளித்தாள்

தன் கையிலிருந்த குண்டுக்கல் நழுவி விழ கமலாபாய் மனம் தெளிந்து ஞானம் பெற்றாள். வெளியே வந்த போது தன் உடலில் பட்டாடையும் பலவித ஆபரணங்களும் ஜொலிக்கக் கண்டாள்.

துக்காராமிடம் ஓடி வரவே, “ஆஹா! எனக்குக் கிடைக்காத தரிசனம் உனக்குக் கிடைத்து விட்டது! நீயல்லவோ பாக்கியசாலி! போயும் போயும் இந்தப் புடவையையா கேட்பது. மோக்ஷம் அல்லவோ கேட்க வேண்டும்” என்றார் அவர்.

கமலாபாயோ,” உங்களை வணங்கி நல்ல வாழ்வு வாழ்ந்தால் மோக்ஷம் தானே அல்லவா வரும். உங்களைப் பணிந்து வாழ்வதே எனக்குப் போதும்” என்று மனம் திருந்தி வாழலானாள்.

துக்காராமின் பக்திக்கு மெச்சிய விட்டலன் அவரிடம் அடிக்கடி வரலானான். விருந்தினனாக வருவான். உருவமற்றவனாக வருவான். கூட இருந்து சாப்பிடவும் செய்வான்.

இந்தச் செய்தி ஊரார் அனைவருக்கும் பரவியது. தேஹு கிராமத்திற்கு அருகில் கிஞ்சன்வாடி என்று அழகிய ஒரு சிறு கிராமம் இருந்தது. அங்கு விநாயகரை பூஜித்து வந்த பக்தர் ஒருவர் இருந்தார். அவர் துக்காராமுடன் பண்டரிநாதன் உணவு உண்பதைக் கேட்டு நாமும் தான் விநாயகரைப் பூஜிக்கிறோம்; நம்முடன் ஒருநாளும் விநாயகர் கூட இருந்து உண்ணவில்லையே” என்று பொறாமை கொண்டார்.

துக்காராமைச் சந்தித்து இதைப் பற்றி அவர் நேரடியாகவே கேட்க, அன்று துக்காராம் அவருடன் சாப்பிட உட்கார்ந்தார். ஒரு இலை பண்டரிநாதனுக்கும் இன்னொரு இலை விநாயகருக்காக அந்த பக்தரின் அருகிலும் போடப்பட்டன.

கணேச பக்தர் நெடுநேரம் காத்திருந்தும் விநாயகர் வரவில்லை. துக்காராம் அவரிடம், “இப்போதுதான் ஒரு அடியவரின் கப்பலை மூழ்காமல் காக்கச் சென்ற விநாயகர் அந்தப் பணியை முடித்து விட்டு இதோ உள்ளே வருகிறார்” என்றார்.

உடனே விநாயக பக்தர் உள்ளே ஓடிச் சென்று பார்த்தார். விநாயகர் ஈரம் சொட்டச் சொட்ட அங்கே உட்கார்ந்திருந்தார். அவர் உடலிலிருந்து உப்பு நீர் சொட்டிக் கொட்டிருந்தது. ஆனால் அவர் எதையும் எடுத்து உண்ணவில்லை.

அவர் துக்காராமிடம் ஓடி வந்தார். “ஸ்வாமி! நீங்கள் அழைத்தால் தான் அவர் உணவை எடுத்துக் கொள்வார்” என்று கூற துக்காராமும் அங்கு சென்று பாண்டுரங்கனையும் விநாயகரையும் வேண்ட அவர்கள் இலையில் இடப்பட்டவைகளை எடுத்து உண்ண ஆரம்பித்தனர்.

ஆனால் இலையில் இடப்பட்ட உணவுகள் மறைவது மட்டும் அனைவருக்கும் தெரிந்தன. துக்காராம் கண்களுக்கு மட்டும் அவர்கள் தெரிந்தனர்.

பிறப்பால் தாம் உயர்ந்தவர்கள் என்ற கர்வம் அங்கிருந்த அனைவருக்கும் நீங்கிற்று.

அவர்கள் துக்காரராமைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாட ஆரம்பித்தனர்.

இப்படி இன்னும் ஏராளமான அற்புத சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் உண்டு.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஶ்ரீ மஹாபக்த விஜயம் நூலில் உள்ள படி இங்கு தரப்படுகிறது.

துக்காராம் பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1937, 1938,1963,1973, 2012 ஆகிய ஆண்டுகளில் வெளி வந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் அமைந்திருந்தன; மக்களின் வரவேற்பையும் பெற்றன.

துக்காராமின் அபங்கங்களின் திரண்ட கருத்துடன் இந்த உரையை முடிக்கிறேன்.

இறைத்தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அதிலிருந்து ஒருபோதும் நழுவாதீர்கள்.

எனது அபங்கங்கள் பக்தியின் இரகசியத்தைக் கொண்டுள்ளது.

75 என்பது லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 75 என்பது ஏழு  மற்றும் ஐந்து ஆகியவற்றைக் கொண்டது.

ஏழு என்பது ஐந்து புலன்கள் மற்றும் மனம் மற்றும் புத்தியாகும் ஐந்து என்பது ஐந்து புலன்களாகும். இவற்றை வென்றால் துறவு ஏற்படும். .

சகுணமும் நிர்க்குணமும் ஒன்றே. இந்தப் புரிதல் துக்காராமுக்கு வந்தது.

துக்காராமின் இந்த அபங்கங்களை எவர் ஒருவர் தினமும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சொல்கிறாரோ அவர் அதுவாகவே ஆவர்.  எவர் ஒருவர் இதை அன்புடனும் பக்தியுடனும் தினமும் சொல்கிறாரோ அவர் ஆன்மீகப் பாதையில் நிலையாய் இருப்பர். அவர்களுக்கு ஒரு துன்பமும் வராது. இதைச் சொல்பவர்கள் எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருப்பர்.

துக்காராம் மஹராஜின் திருவடி போற்றி.

நன்றி வணக்கம்.

**

Leave a comment

Leave a comment