Post No. 14,477
Date uploaded in London – –6 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
27-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள சிறு கதை!
யூனிபார்மில் சிவப்புக் கறைகள் இருக்கலாமா?
ச. நாகராஜன்
அசோசியேஷனே அல்லோலகல்லோப் பட்டது!
பெரிய விழாவின் மத்தியில் ஒரு திருட்டு! எல்லோரும் ஸ்டேஜைப் பார்த்து இருந்த போது, அசோசியேஷன் ஆபீஸ் விழாக் கோலத்தில் திறந்திருக்க, உள்ளேயிருந்த ஆறு லட்ச ரூபாயைக் காணோம்.
செக்ரட்டரி அலறி விட்டார்.
ஆபீஸ் அருகில் இருந்த ஒரு வீடும் திறந்திருந்தது. அதில் பூஜை அறையில் இருந்த வெள்ளி விளக்கையும் காணோம்.
வட்டமான காம்ப்ளெக்ஸைச் சுற்றி இருந்த நான்கு கேட்டுகளையும் மூடச் சொல்லி விட்டார் செக்ரட்டரி.
வருடாந்திர விழா முடிந்து பரிசு கொடுக்கும் சமயத்தில் நடந்த இந்த திருட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? விழாவில் அனைவரும் தந்த கலெக்ஷன் பணம் போய் விட்டதே!
திடீரென்று மேடையின் மீது ஏறினார் ஒரு டிராஃபிக் கண்ட்ரோல் ஆபீஸர். அவரது யூனிபார்மே அனைவருக்கும் ஒரு தைரியத்தைத் தந்தது. யங் அண்ட் எனர்ஜடிக்!
“யாரும் பயப்பட வேண்டாம்! திருடனை உடனே கண்டுபிடித்து விடலாம்”. என்ற அவர் டிராபிக் அதிகமாக இருந்ததால் தான் உள்ளே வந்ததாகவும் அப்போது இதைக் கேள்விப்பட்டு சங்கடப்படுவதாகவும் கூறினார்.
இங்கிருந்து வெளியே போன ஒரு ஆளின் மீது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவன் கொஞ்ச தூரம் கூடப் போயிருக்க மாட்டான். யாராவது ஒரு ஸ்கூட்டரில் என் கூட வந்தால் பிடித்து விடலாம் அவனை” என்றார் அவர்.
அனைவரும் ஓகே, பலே, சபாஷ் என்றனர். பலரும் கூட வரத் தயாராயினர்.
அந்தச் சமயம் பார்த்து மேடையில் ஏறினான் டிராபிக் கண்ட்ரோலில் ஆபீஸராக வேலை பார்க்கும் சீனு.
அவனைப் பார்த்த ஆபீஸர், “கூட வருகிறீர்களா?‘வாருங்கள்” என்றார்.
மேடை மீது ஏறிய சீனு அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
அவன் கண் ஜாடை காட்ட கீழே இருந்து வந்த இன்னும் இரண்டு பேர் அவரைப் பிடித்துக் கொண்டனர்.
“இப்படி நமக்கு உதவி புரிந்த இந்த ஆபீஸருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அதோ அவர் ஓரத்தில் வைத்திருக்கும் பேக் பேக்கைத் திறந்து பாருங்கள் என்றான் சீனு.
அவசரம் அவசரமாக அங்கிருந்தோர் அதைத் திறந்து பார்க்க ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டு பன்னிரெண்டும் பார்ட் பார்ட்டாக பிரிக்கப்பட்ட குத்துவிளக்கும் இருந்தன.
‘ஆஹா’ என்று கூவினர் அங்கிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர்கள்.
சீனு கொடுத்த கயிறால் செக்ரட்டரி அந்த டிராபிக் ஆபீஸர் கையைக் கட்டினார்.
“எப்படிப்பா கண்டுபிடிச்சே, இவன் தான் திருடன்னு?”
“சார்! அவன் போட்டிருக்கிற யூனிபார்ம் என்னோடது. அதில் இருக்கும் இரண்டு சிவப்புக் கறைகளைப் போக்க லாண்டரியில் தர வீட்டு வாசலில் வைத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் லாண்டரிக்காரர் வந்து எடுத்துப் போவார். இங்கு ஒரே களேபரமாக இருக்கவே, அதைப் பயன்படுத்தி சாதகமாக என் டிரஸைப் போட்டு நாடகமாடி ஸ்கூட்டரில் தப்பிப் போகத் திட்டமிட்டு விட்டான் இந்த பலே திருடன். எனது சிவப்புக் கறைகள் இரண்டு இவனைக் காட்டிக் கொடுத்து விட்டன” என்ற சீனுவை அனைவரும் கை தட்டிப் பாராட்டினர்.
யாரோ ஒருவர் கூப்பிட்டதால் போலீஸ் வேன் கேட் வாசலில் வந்து நிற்க செக்ரட்டரி அதை அவசரமாகத் திறக்கச் சொன்னார்.
‘போலீஸ் நிஜமான போலீஸா என்று பாருங்கள்’ என்று அனைவரும் சொல்ல ஒரே சிரிப்பு!
திருடனைப் போலீஸ் கைது செய்ய, சீனுவை சூபர் ரியல் ஆபீஸர் என்றனர் அனைவரும்!
**