இலந்தை உடலுக்குத் தரும் நன்மைகள்! (Post.14,482)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,482

Date uploaded in London – –7 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை 

போஜன குதூகலம்

இலந்தை உடலுக்குத் தரும் நன்மைகள்! 

ச. நாகராஜன்

போஜன குதூகலம் என்ற பழம் பெரும் நூல் உணவு பற்றிய பலவித உண்மைகளைத் தெளிவாக விளக்கும் நூல் 

அதில் இலந்தையைப் பற்றி வரும் பகுதி இது: 

இலந்தை இனிப்பும் சற்று கசப்பும் புளிப்பும் உள்ளது. நன்கு பழுத்தது இனிப்பும் புளிப்புமே உள்ளது.

கபத்தையும், வாயுவையும், அதிசாரம், இரத்த நோய், களைப்பு, வரட்சி ஆகியவற்றையும் போக்கும். நல்ல சுவை உள்ளதாகும்.

இவை இலந்தையின் பொதுவான தன்மைகளாகும்.

இராஜபதரம் எனப்படும் பெரும் இலந்தை குளிர்ச்சியுள்ளது.

தாகம், பித்தம், வாதம் ஆகியவற்றைப் போக்கும். காமத்தைக் கொடுக்கும். வீரியத்தை வளர்க்கும். வறட்சி, களைப்பு ஆகியவற்றைப் போக்கும். 

பூபதரம் என்னும் நில இலந்தை குளிர்ச்சியுள்ளது. இவ்விலந்தையின் சுவை இனிப்பும் புளிப்புமாகும். இதனால் கபம், வாதம் ஆகியவை அகலும். உடலுக்குப் பத்தியமானது. செரிமானத்தையும் பசியையும் தரும். சற்று பித்தத்தையும் இரத்தப் பெருக்கத்தையும் கொடுக்கும். நல்ல சுவையுள்ளதாகும்.

 சிறு இலந்தை இனிப்பும் புளிப்புமுள்ளது. பழுத்தது, கபத்தையும், வாதத்தையும் போக்கும். சுவை மிக்கது. பசையுள்ளது வயிற்றில் பூச்சியுண்டாக்கும். பித்தநோய், வாதம், வறட்சி ஆகியவற்றை அகற்றும்.

 இலந்தையின் இலை மேற்பூச்சுக்குப் பயன் பட்டால் காய்ச்சலையும் எரிச்சலையும் போக்கும். தோலில் தோன்றும் கொப்புளங்கள் கட்டிகளைப் போக்கும். இதன் விதை கண் நோய்க்கு நல்ல மருந்தாகும். 

ஆக இப்படி போஜன குதூகலம் விளக்கும் இலந்தைப் பழத்தின் விலை மலிவோ மலிவு.

கை வண்டியில் தள்ளிக் கொண்டு வீட்டிற்கே வரும் இலந்தைப் பழத்தை வாங்கி உபயோகித்தால், ஆஹா, எத்தனை பயன்கள்! 

இது போல அனைத்து கறிகாய்கள், பழங்கள், உணவு வகைகளை விளக்கும் நூல் போஜன குதூகலம்! 

இதை இயற்றியவர் இரகுநாதஸூரி என்னும் அறிஞர் ஆவார். வடமொழியில் அவர் இயற்றிய நூலின் ஒரு பகுதியான திரவியகுண தகனம் என்னும் பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு போஜன குதூகலம் என்ற பெயரில் சரஸ்வதி மஹால் வெளியீடாக வந்துள்ளது 

இரகுநாதஸூரி என்பவர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் குருவாக விளங்கிய சமர்த்த ராமதாஸருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். 

நூலில் 43 அத்தியாயங்கள் உள்ளன. அபூர்வமான விஷயகளை இந்த நூல் விளக்குகிறது. இவற்றைப் படித்தால் பிரமித்துப் போவோம்!

சைவ உணவு வகைகளோடு அசைவ உணவு வகைகளும் கூட இதில் விளக்கப்படுகின்றன! 

நூலின் இறுதியில் அட்டவணையில் சுமார் 700 உணவுப் பொருள்கள் பற்றிய பட்டியலைக் காண்கிறோம். இத்தனை உணவுப் பொருள்களை இந்த நூல் விளக்குகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயம் தானே! 

இதை சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்-லிருந்து பெறலாம். அல்லது https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008542/page/n1/mode/2up

என்ற இணையதளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 நூலைப் படியுங்கள்; பயனை அடையுங்கள்!

***

Leave a comment

Leave a comment