Post No. 14,487
Date uploaded in London – –8 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
26-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை
வெற்றி பெற மோடிவேஷன்! (உணர்வூக்கம்!) தேவை!
ச. நாகராஜன்
வாழ்க்கையில் வெற்றிபெற உணர்வூக்கம் எனப்படும் மோடிவேஷன் தேவை.
எங்கிருந்து உத்வேகம் பெற்றாலும் அது நல்லது தான்.
முதலில் நாம் குறிக்கோளை நிர்ணையித்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கி நடை பயில வேண்டும்.
அப்பர் பெருமானே (திருநாவுக்கரசர்) “குறிக்கோளின்றிக் கெட்டேனே” என்கிறார்.
ஆலிஸ் இன் வொண்டலேண்டில் (Alice in Wonderland) ஒரு அற்புதமான காட்சி.
பாதைகள் இரண்டாகப் பிரிகின்றன.
செஷைர் கேட்டை நோக்கி ஆலிஸ் கேட்கிறாள் (Alice and Cheshire cat)
: “பாதைகள் இரண்டாகப் பிரிகின்றனவே. எந்தப் பாதையில் செல்வது?”
அதற்கு செஷைர் கேட் கூறுகிறது; “ அது நீ எங்கு செல்ல வேண்டும் என்பதைப் பொறுத்திருக்கிறது. (It depends upon where you want to get into!)
ஆலிஸ் : நான் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியாதே!
(I don’t know where I want to get into!)
செஷைர் கேட்: அப்படியானால் நீ எந்தப் பாதையில் போனாலும் பரவாயில்லை!
(Then it does not matter in which way you go!)
அற்புதமான இந்த உரையாடல் குறிக்கோளின்றிச் சென்றால் போகும் பாதை எங்கு கொண்டு போய் விடும் என்பது நமக்குத் தெரியாது என்பதைத் தான்!
டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன் கூறியதை நினைவில் இருத்த வேண்டும். அவர் கூறினார். “எப்போதெல்லாம் ஒரு மனிதனிம் மனம் சாதனையைச் செய்ய நிர்ணயிக்கிறதோ அப்போதெல்லாம் அது வெற்றி பெறுகிறது!”
குறிக்கோளுடன் செல்லும் போது சின்னச் சின்ன வெற்றிகள் ஏற்படும். அப்போது அவற்றைக் கொண்டாடி உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டு இன்னும் அதிக ஊக்கம் பெறுங்கள்.
எவரெஸ்டில் ஏறி வெற்றி கொண்ட டென்சிங் ஒவ்வொரு அடியாகத் தான் முன்னேறினார். வெற்றி பெற்றார்.
ஏன் இந்தக் குறிக்கோள் எனக்கு முக்கியம் என்பதை அடிக்கடி கேட்டு பதிலைப் பெற்றால் வேறு பலவற்றில் மனம் செல்லாது; நேரமும் சக்தியும் திறமையும் வீணாகாது!
ஆக்கபூர்வமான சிந்தனை மிக முக்கியம். அத்துடன் நேரத்தையும் வேலைகளையும் ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதும் மிக முக்கியம்.
ஒவ்வொரு திறமையும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட திறமையே தான்! அது யாரிடம் இருந்தாலும் சரி, இது தான் உண்மை!
உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்!
உங்களுடைய கருவிகள், நேரம், கருத்துக்கள் அனைத்தையும் மட்டுமே மனதில் கொண்டு அவற்றை உரிய முறையில் பயன்படுத்தினால் தேவையற்றவை உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தாது. வெற்றி பெற முடியாதோ என்ற பயத்தை ஏற்படுத்தாது.
வெற்றி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அவர்கள் வெற்றி பெற்றது எப்படி என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலே கூறியவற்றை நன்கு புரிந்து கொள்ள அது உதவும்!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
***