WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,491
Date uploaded in London – –9 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
29-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
சூஃபி துறவி வசாலி! ராமரின் பக்தர்!!
ச. நாகராஜன்
ஸாஹா ஜலாலுதீன் வசாலி மிகப் பெரிய சூஃபி துறவி. ஈரானின் வடகிழக்குப் பகுதியான குராஸானாவிலிருந்து அவர் இந்தியாவிற்கு வந்தார்.
ராமரின் கதையைக் கேட்டு மெய் சிலிர்த்த அவர் ராம பக்தரானார். அவருக்கு ராமரின் தரிசனம் கிடைத்தது.
அவர் (இப்போது பாகிஸ்தானில் இருக்கும்) முல்தான் நகருக்கு வந்த போது அவருக்கு பண்டிட் தேகாசந்த்ஜி என்ற புராண இதிஹாஸங்களை அற்புதமாகச் சொல்லும் பௌராணிகரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அற்புதமாக தேகாசந்த்ஜி ராமாயணத்தை நாள் தோறும் சொல்ல தவறாமல் தூரத்தில் இருந்து அதைக் கேட்கலானார் வசாலி.
வசாலியின் ராம பக்தியை உணர்ந்த தேகாசந்த்ஜி அவருக்கு ராமரின் தரிசனம் கிடைத்ததையும் உணர்ந்தார்.
அவரைச் சந்த்தித்து மூன்று வரங்களைக் கேட்டார் தேகாசந்த்ஜி.
முதல் வரம் : தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும்
இரண்டாவது வரம்: தனக்கு இறக்கும் நிலை வந்தால் வலி இல்லாமல் திடீரென்று இறக்க வேண்டும். மூன்றாவது ராமரின் தரிசனம் கிடைக்க வேண்டும்.
முதல் இரண்டு வரங்களையும் தந்ததாகக் கூறிய வசாலி மூன்றாவது வரத்தை மட்டும் தன்னை அடுத்து பார்க்கும் போது தருவதாகச் சொன்னார்.
வசாலி கூறிய படியே தேகாசந்த்ஜிக்கு ஒரு மகன் பிறந்தான்.
பின்னர் அயோத்யா சென்ற தேகாசந்த்ஜி அங்கு வழக்கம் போல ராமாயண பிரவசனத்தை ஆரம்பித்தார்
அங்கு வசாலி வந்து நின்றார்.
அவரைக் கண்ட தேகாசந்த்ஜி அவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு ராமரின் தரிசனத்தைத் தந்து அருள வேண்டும் என்று வேண்டினார்.
“சரி, பீர் மரத்திற்கு அருகில் வா” என்று கூறி விட்டு வசாலி அகன்றார்.
தேகாசந்த்ஜியும் பீர் மரத்திற்கு அருகில் சென்றார்.
அங்கு வசாலியின் அருளினால் அவர் ராம தரிசனத்தைப் பெற்றார்.
அந்தக் கண முதல் அவர் பெயர் வாலிராமா என்று மாறியது.
வசாலி தான் எந்த மரத்தின் அருகில் வசித்து வந்தாரோ அங்கே தனது உடலை உகுத்தார். அங்கேயே அவரது சமாதி இன்றளவும் இருக்கிறது.
இதே போல கிருஷ்ண பக்தராகத் திகழ்ந்தவர் இன்னொரு முஸ்லீம் துறவியான அப்ராஹிமா சாபாஜி என்பவர்.
அராபியாவிலிருந்து வந்த அவர் கிருஷ்ணரின் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார்.
அயோத்தி அருகில் உள்ள இடத்தில் அவர் கிருஷ்ணரின் புகழ் பாடி வந்தார்.
அறுபத்தி நான்கு நாட்கள் எதையும் உண்ணாமல் உபவாசம் இருந்தார் அவர்.
கடைசியில் அவருக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்தது.
அயோத்தியில் வாழ்ந்த அவர் தனது 101ம் வயதில் உடலை உகுத்தார்.
ஆதாரம் : ஆங்கில மாத இதழான கல்யாண் கல்பதரு (KALYAN KALPATARU – BHAKTHI SPECIAL. 2017). இப்போது இந்த பத்திரிகை நின்று விட்டது.
**