முகம் விளக்குவது நகை;புத்தியை விளக்குவது நூல்- குமரேச சதகம்-8 ( Post.14,492)

Written by London Swaminathan

Post No. 14,492

Date uploaded in London –  9 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை — எட்டு

 குருபாததாசர் இயற்றிய குமரேசர் சதகத்திலிருந்து மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக் கொள்வோம். அத்தனையும் சத்தான, முத்தான பொன்மொழிகள் ; எளிய தமிழில் பெரிய கருத்துக்கள்!

ராமனைக் காட்டுக்குப் போ என்று கைகேயி உத்தரவிட்டபோதும் அவன் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போல் இருந்ததாம். இதனால்தான் உலகம் இன்றுவரை ராமனைப் போற்றுகிறது; ராமாயணம் அழியாத காவியமாகத் திகழ்கிறது 

இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? – யாரும்

செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;

ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட

அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா!

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்; அதைப் பின்பற்றியவன், இதிஹாஸப் புருஷர்களில் ராமன் ஒருவனே;

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில் — குறள் 621

பொருள்

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

அவனுக்கு அடுத்த படியாகத்தான் கிருஷ்ணனை வைக்கவேண்டும் ஏனெனில் கிருஷ்ணனின் சிரிப்பு விஷமச் சிரிப்பு; ராம பிரானின் சிறப்பு குழந்தைகள் சிரிக்கும் கள்ளமில்லாச் சிரிப்பு.

குருபாததாசர் முகத்துக்கு அழகு புன்னகை என்கிறார்.

பாட்டின் முழுப் பொருளையும் பார்த்துவிட்டு மேலும் சில  விளக்கங்களைக் காண்போம் :               

14. இதனை விளக்குவது இது

பகல்விளக் குவதிரவி, நிசிவிளக் குவதுமதி,

     பார்விளக் குவதுமேகம்,

பதிவிளக் குவதுபெண், குடிவிளக் குவதரசு,

     பரிவிளக் குவதுவேகம்,

இகல்விளக் குவதுவலி, நிறைவிளக் குவதுநலம்,

     இசைவிளக் குவதுசுதி, ஊர்

இடம்விளக் குவதுகுடி, உடல்விளக் குவதுண்டி

     இனிய சொல் விளக்குவது அருள்,

புகழ்விளக் குவதுகொடை, தவம்விளக் குவதறிவு,

     பூவிளக் குவதுவாசம்,

பொருள்விளக் குவதுதிரு, முகம்விளக் குவதுநகை

     புத்தியை விளக்குவது நூல்,

மகம்விளக் குவதுமறை, சொல்விளக் குவதுநிசம்,

     வாவியை விளக்குவதுநீர்,

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

பகற் பொழுதை விளக்குவது ஞாயிறு – இரவை ஒளிசெய்வது திங்கள்; நிலத்தைச் செழிப்பாக்குவது முகில்/cloud  wife ;

கணவனை விளக்கமுறச் செய்பவள் wife /பெண்ணாவாள்;

குடிகளைத் தெளிவுறக் காப்பவன் அரசனாவான்;

குதிரைக்கு விளக்கந்தருவது அதனுடைய விரைவு;

பகைமைக்கு விளக்கந் தருவது வலிமை;

ஒழுக்கம் விளக்குவது அழகு;

இசைக்கு இனிமை தருவது சுருதியெனும் இசைக்கருவி;

ஊரை அழகுறச் செய்வது குடிவளம்;

உடம்பை அழகு படுத்துவது உணவு;

இனிய சொல்லால் ஒளிபெறுவது அருள்;

புகழைப் பரப்புவது கொடுத்தலென்னும் பண்பு;

தவத்தைச் சிறப்புறக் காண்பிப்பது அறிவு;

மலரை விளக்குவது மணம்; செல்வத்தை

எடுத்துக்காட்டுவது செல்வரின் அழகு; (செல்வத்தை விளக்கமுறச் செய்வது திருமகளின் அருள் என்றுங் கூறலாம்.)

முகத்தை அழகாக்குவது மகிழ்ச்சி

அறிவையுண்டாக்குவது நூலைக் கற்றல்; வேள்வியை

ஒளிபெறச்செய்வது மறையோதுதல்: சொல்லுக்கழகு

உண்மை; பொய்கைக்கழகு நீர்   .

****

இடுக்கண் வருங்கால் நகுக

சிரிப்பு, புன்சிரிப்பு — ஆகிய இரண்டும் நல்ல பொருளிலும் ‘நகைப்பு’ என்பது கெட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இடத்தைப் பொறுத்தே வேறு பாடு வருகிறது.

வள்ளுவன் சொல்லுவதைக் கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமே. கஷ்டம் வரும்போது சிரியுங்கள் என்கிறார் வள்ளுவர்.

யாருக்கு கஷ்டம் வரும்போது? — என்று கேட்கத் தோன்றுகிறது. எனக்கோ என் குடும்பத்தினருக்கோ கஷ்டம் வந்தால் நான் சிரிக்க முடியுமா?

எனது எதிரிக்கு கஷ்டம் வந்தால் வேண்டுமானால் சிரிக்கத்தோன்றும்.

வீட்டிலோ, வெளியிலோ யாராவது வாழைப்பழத் தோலியில் சறுக்கி விழுந்தால் சிரிப்பு வரும்.

பொது மேடையில் யாருக்கேனும் ஆடை நழுவி விழுந்தால் சிரிப்பு வரும். இதே கஷ்டம் நமக்கு வந்தாலும் சிரியுங்கள் என்று வள்ளுவர் செப்புவார். அது அவரைப் போன்ற ரிஷிபுங்கவர், முனி புங்கவருக்குதான் சாத்தியம்

சிரிப்பு பற்றி வள்ளுவன் கூறும் குறள்கள் நிறையவே உள்ளன:

நக -187, 685, 829, 1173, 999, 824, 621, 784, 774, , 1094, 1095, 817

நகப்படுவர் (இகழப்படுவர்) -927, 1140, 271, 1040

இவ்வாறு குறைந்தது 16 குறள்களில் சிரிப்பு, நகைப்பு பற்றிப் பாடி இருப்பதால் தமிழர் வாழ்வில் சிரிப்பு எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருந்தது என்பது தெரியும்.

சம்ஸ்கிருத நாடகங்கள் எல்லாவற்றிலும் (விதூஷகன்) நகைச் சுவை நடிகர் உண்டு. முதல் காட்சியே சூத்ரதாரர் மற்றும் நகைச் சுவை நடிகருடந்தான் தோன்றும்

நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழில் நிறைய நாடகங்கள் வெளியாயின. அவற்றிலும் கூட முதல் காட்சி விதூஷகனுடனேயே துவங்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாடகம் எழுதிய பாஷா, காளிதாசன், சூத்ரகன் ஆகியோர் எந்த அளவுக்கு நகைச் சுவைக்கு மதிப்பு கொடுத்தனர் என்பதைக் காணும் போது வள்ளுவன் ஏன் இப்படிப் பல குறள்களில் குரல் கொடுத்தான் என்பது தெள்ளிதின் விளங்கும்.

****

புஸ்தகம் ஹஸ்த லக்ஷணம்

சம்ஸ்கிருதத்தில் அழகான ஒரு பொன் மொழி—“கைக்கு அழகு புத்தகம்!”– ஒருவன் படிக்கும் புத்தகத்தைக் கொண்டு அவன் யார் என்பதைக் கணித்து விடலாம். யாரையாவது ஒருவரின் ‘பெர்சனாலிட்டி’ என்ன என்று தெரிய வேண்டுமா? நீங்கள் நேரடியாக அவரைக் கேட்டால் அது இங்கிதமாக இருக்காது. பேச்சு வாக்கில் நீங்கள் படித்த ஏதாவது சில புத்தகங்களின் பெயரைச் சொல்லிவிட்டு, “உங்களுக்கு இது பிடிக்குமா? நீங்கள் கடைசியாக என்ன படித்தீர்கள்?”– என்று கேளுங்கள். அவருடைய குணநலன்களைக் கண்டுபிடித்து விடலாம்.

அவ்வையார் சொல்கிறார்:

நீரளவே யாகுமாம் நீராம்பல் தன் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (வாக்குண்டாம்)

ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது அவன் கற்ற நூல்கள்.

புராதன உலகில் அதிகமான புத்தகங்கள் உடைய நாடு இந்தியா? காகிதத்தின் நடுவில் கி.மு 1000 என்று எழுதி ஒரு கோடு போடுங்கள்! அதற்கு மேலாக எழுத வேண்டுமானால் வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் மட்டுமே இருக்கும். இப்போது நாம் பயன்படுத்தும் எந்த மொழி நூலும் அங்கே காணமாட்டாது! பைபிளின் பழைய ஏற்பாடு, மோசஸின் பத்து கட்டளைகள் முதலியன எழுத்து வடிவு பெற்றது கி.மு 945! கிரேக்க மொழியில் ஹோமர் ‘ஆடிஸி’, ‘இலியட்’ காவியங்களை எழுதியது கி.மு 800 ல்!. தமிழ் என்னும் குழந்தை, லத்தீன் என்னும் குழந்தை அப்போது பிறக்கக்கூட இல்லை!

ஜில்காமேஷ் போன்ற சுமேரியப் பிதற்றல்கள்—இப்போது பயன்பாட்டில் இல்லை; அவை ‘புத்தகம்’ என்னும் இலக்கண வரையரைக்குள் வாரா!

****

உடம்பை அழகு படுத்துவது உணவு

You are What You Eat

சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.

ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.

என்ன சரியான கணிப்பு!

தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.

முழு ஸ்லோகம்:-

 ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;

ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.

ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்

சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்

—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2

xxx

மலரை விளக்குவது மணம்

வள்ளுவனும் மணம் வீசாத மலரை இகழ்கிறான்:

தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.— குறள் 650:

****

கணவனை விளக்கமுறச் செய்பவள் wife /பெண்ணாவாள்;

குடும்ப விளக்கு

காளிதாசனும், மனுவும், வியாசரும், சங்க இலக்கியப் புலவர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதை ஒப்பிட்டு மகிழ்வோம்:-

புறநானூற்றில் (314) புலவர் ஐயூர் முடவனார்,

மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்

முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை

பொருள்:- இல்லத்தில் ஒளிசெய்யும் விளக்கைப் போல் தன் மாண்பால் விளக்கத்தைச் செய்யும் ஒளியுடைய நெற்றியுடையவளுக்குக் கணவனும்

ஐங்குறுநூற்றில் புலவர் பேயனார்

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர்போல

மனைக்கு விளக்காயினள் மன்ற கனைப்பெயல்

பூப்பல அணிந்த வைப்பின்

புறவணி நாடன் புதல்வன் தாயே–

ஐங்குறுநூறு 405

பொருள்: விளக்கு தலைவன் மனைக்கும் அதன் கண் நின்று எரியும் செஞ்சுடர் தலைவிக்கும் உவமை ஆயின.

அகநானூற்றில் (184) புலவர் மதுரை மருதன் இளநாகனார

கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய

புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்

இனிது ஆகின்றால்; சிறக்க நின் ஆயுள்!

பொருள்:- தெய்வத்தனமை பொருந்திய கற்புடன் குடிக்கு விளக்கமான மகனைப் பெற்ற புகழ்மிக்க சிறப்பை உடைய தலைவிக்கே அன்றி எனக்கும் இனிமையைத் தருகின்றது.உன் ஆயுள் ஓங்குக (தீர்க்காயுஸ்மான் பவ:).

இதே கருத்துகளை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனும், மனுவும், மஹாபாரத வியாசனும் செப்புவதைக் காண்போம்:-

மனுதர்ம ஸ்லோகம்

வீட்டிலுள்ள அதிர்ஷ்ட தேவதைகளுக்கும், குடும்பத்தின் விளக்குகளாக ஒளிரும் பெண்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. அவர்கள் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் புதல்வர்களைப் பெற்றுத் தருவதால் இறையருள் பெற்றவர்களாவர் — மனு 9-26

காளிதாசன் புகழுரை

ரகுவம்சத்தில் 8-38 பாடலில்  இந்தக் காலத் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை  நினைவூட்டுகிறான் காளிதாசன்:

அஜன் என்ற மன்னனின் மனைவி இந்துமதி திடீரென்று மயங்கி விழுந்தாள். அவரது அருகில் இருந்த அஜனையும் அவள் விழ்த்தினாள். இந்துமதி உடனே இறந்தாள். இதை வருணிக்கும் காளிதாசன் கவிதையில், இந்துமதி விளக்கின் சுடருக்கும், அத்துடன் சொட்டிய எண்ணைத் துளி அஜனுக்கும் உவமிக்கப்பட்டன.

****

15. பிறப்பினால் மட்டும் நன்மையில்லை

சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது

     தீஞ்சொல்புகல் குயிலாகுமோ?

திரையெறியும் வாவியிற் பூத்தாலு மேகொட்டி

     செங்கஞ்ச மலராகுமோ?

அங்கான கத்திற் பிறந்தாலும் முயலான

     தானையின் கன்றாகுமோ?

ஆண்மையா கியநல்ல குடியிற் பிறந்தாலும்

     அசடர்பெரி யோராவரோ?

சங்காடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான்

     சாலக்கி ராமமாமோ?

தடம்மேவு கடல்நீரி லேயுப்பு விளையினும்

     சாரசர்க் கரையாகுமோ?

மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு பதேசம்

     வைத்தமெய்ஞ் ஞானகுருவே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள் 

தூயதமிழை, அகத்திய முனிவருக்குக்

கற்பித்த உண்மையாசிரியனே!, மயிலேறி………..குமரேசனே! காகம் அழகிய மலர்ப் பொழிலிற் பிறந்தாலும் இனிமையாகக் கூவும் குயிலாய்விடுமோ?, கொட்டிமலர் அலைவீசும் பொய்கையிலே மலர்ந்தாலும் செந்தாமரை மலரைப்போற் சிறப்புறுமோ?, முயல் அழகிய காட்டிலே பிறந்தாலும் யானைக்கன்றைப்போல் மதிக்கப்படுமோ?,  பேதைகள், வீரம் பொருந்திய உயர்ந்த மரபிலே பிறந்தாலும் பெரியோராக நினைக்கப்படுவரோ?,  சங்குகள் உலாவும் பாற்கடலிலே தோன்றினாலும் நத்தையைச் சாலக்கிராமம்

என்பார்களோ  பரவிய கடலிலே உப்புத் தோன்றினாலும் இனிய சர்க்கரைபோல் இனிக்குமோ?

காகமும் குயிலும்

தமிழ்ப் புலவர் ஒருவரும் ஸம்ஸ்க்ருதப் புலவர் ஒருவரும் குயிலையும் காக்கையையும் வைத்து நமக்கு ஒரு நல்ல அறிவுரை வழங்குகிறார்கள் .

ஒருவருடைய தோற்றத்தை  அல்லது பிறந்த இடத்தை க் கண்டு அவரை எடை போடாதீர்கள்.

குயில்கள் ஒரு திருட்டுத் தனம் செய்கின்றன. முட்டைகளைக் காக்கையின் கூட்டில் விட்டுவிடும்; காக்கைகள் அவற்றைத் தன குஞ்சு போல அடைகாத்து குஞ்சு பொறிக்கும். இரண்டும் உருவத்தில்  ஒன்றாக இருக்கும்  வசந்த காலம் வருகையில் குயில்கள் கூவும்; காக்கைகள் கர்ணகடூரமாக கரையும்

 வாக்கு நயத்தாலன்றிக் கற்றவரை மற்றவரை

ஆக்கை நயத்தால் அறியலாகாதே – காக்கையொடு

நீலச் சிறுகுயிலை நீடிசையால் அன்றியே

கோலத் தறிவருமோ கூறு- –நீதி வெண்பா

பொருள்:-

காக்கையையும்   அதைப் போலவே கருநிறக் குயிலையும் இனிமை மிக்க இசைக்குரலால் அல்லாமல் உருவத்தினால் அவற்றின் பெருமையை அறியக்கூடுமோ, நீ சொல்! , அதைப் போலவே, படித்த பெரியவர்களையும், படிக்காத மற்றவர்களையும்,அவரவர்களின் பேச்சின் இனிமையினால் அல்லாமல், உடம்பு அழகினால் அறிய முடி இதைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் ஒரு பா உண்டு:-

காகஹ கிருஷ்ணஹ பிகஹ கிருஷ்ணஹ கோ பேதஹ பிககாகயோஹோ

வசந்த காலே சம்ப்ராப்தே காகஹ காகஹ பிகஹ பிகஹ

பொருள்:-

காகமும் கறுப்பு, குயிலும் கறுப்பு; பின்னர் குயிலுக்கும் காகத்துக்கும் வேறு என்னதான் வேறுபாடு?

வசந்த காலம் வந்துவிட்டால், காக்கை காக்கைதான், குயில் குயில்தான்! ( அதாவது அதன் வண்டவாளம் தெரிந்து விடும்.குயில் இனிமையாகப் பாடத் துவங்கும்; காகம் கர்ண கடூர சப்தம் உண்டாக்கும்)

****

உப்பும் வெள்ளை; சர்க்கரையும் வெள்ளை நிறம் ; ஆயினும் வெவ்வேறு இடத்தில்தான் அவைகளுக்கு மதிப்பு. இரண்டும் ஒன்றாகாது . சர்க்கரை இனிக்கும்; உப்பு கரிக்கும்.

***

நத்தைக்கூடும் அழகாகத்தான் உள்ளது ஆயினும் அதை சாளக்கிராமம்  போல பூஜையில் வைத்து இந்துக்கள்  வழிபடுவது  இல்லை .

****

அகத்தியருக்கு முருகக்கடவுள் செந்தமிழை அறிவித்ததாகப் புராணம் புகலும். தமிழுக்கு இலக்கணம் செய்த அகத்தியனைப் பாரதியார் வரைப் பலரும் பாடியதை அறிவோம்; அகத்தியறையும் குருபாததாசர் குமரேச சதகத்தில் முருகன் பாடலில் குறிப்பிட்டது பொருத்தமே.

–subham–

Tags- ஆராய்ச்சிக் கட்டுரை 8, முகம் , நகை, புத்தி, நூல்,  குமரேச சதகம் , புன்னகை, மனைவி , காகம் குயில் சங்கு நத்தை, பிறப்பு, உயர்வு

Leave a comment

Leave a comment