குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-9; குரு கோவிந்த சிம்மன் கதை (Post No.14,499)

Written by London Swaminathan

Post No. 14,499

Date uploaded in London –  11 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது

தூயநிறை தவறாகுமோ- என்று குமரேச சதகத்தில் குருபாததாசர் பாடினார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று அவ்வையார் பாடினார் . எவ்வ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பெரியோர்கள் மாற மாட்டார்கள் ; அவள் குணம் தங்கம்போல சுடச் சுட ஒளிரும்

வள்ளுவரும் இதையே சொன்னார்

குறள் 267:

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்..

இங்கு தவம் என்பதை ஒரு குறிக்கோளுடன் வாழ்பவர் என்றும் பொருள் கொள்ளலாம் . இதற்கு முன்னுதாரணமாக விளங்கிய பலர் இருந்தாலும் சீக்கிய குருவான குருகோவிந்த சிம்மன் வாழ்வில் நடந்த சம்பவத்தைப்  பார்க்கலாம்.

17. தாம் அழியினும் தம் பண்பு அழியாதவை

தங்கம்ஆ னது தழலில் நின்றுருகி மறுகினும்

     தன் ஒளி மழுங்கிடாது,

சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமே

     தன் மணம் குன்றிடாது,

பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே

     பொலிவெண்மை குறைவுறாது,

போதவே காய்ந்துநன் பால்குறுகி னாலும்

     பொருந்துசுவை போய்விடாது,

துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும்

     துலங்குகுணம் ஒழியாதுபின்

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது

     தூயநிறை தவறாகுமோ

மங்கள கல்யாணிகுற மங்கைசுர குஞ்சரியை

     மருவு திண் புயவாசனே

மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

அழகிய நலம்பெற்ற வேடர்குல வள்ளியும் வானவர் குடிவிளங்குந்

தெய்வயானையும் தழுவும் வலிமைமிக்க தோள்களை யுடையவனே!,மயிலேறி……குமரேசனே!

தங்கம் நெருப்பிலே கிடந்து உருகித் துன்புற்றாலும்

அதன் ஒளியிலே குறையாது;  சந்தனக்கட்டை தேய்ந்து மெலிந்தாலும் அதன் மணத்திலே மாறாது;  உயர்வுபெற்ற சங்கு சிவந்த நெருப்பில் வெந்தாலும் அழகிய வெண்மை விலகாது;  நல்ல பால் மிகவும் காய்ந்து குறைந்தாலும் அதனிடமுள்ள இனிமை குறையாது; உயர்ந்த மாணிக்கம் சாணையிலே தேய்வுற்றாலும் ஒளிமிகும் பண்பு விலகாது;  பழைமையான சான்றோர்கள் இறக்க நேர்ந்தாலும் அவர்களது நல்லொழுக்கம் இழிவுற்றுக் கெடுமோ?

****

இதைத் தமிழ்த் திரைப்படப் பாடலிலும் காணலாம்:

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?”

என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை

****

ஸம்ஸ்க்ருதப் புலவர் பர்த்ருஹரியும் இதையே செப்பினார்

பர்த்ருஹரி நீதி சதகம் -ஸ்லோகம் 34-

சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.

ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு

ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.–4     மூதுரை (அவ்வையார் அருளியது)

Good people never change

4.Though the milk be boiled it doesn’t lose taste; though enemies move very sociably, they are enemies. Though the noble hearted be reduced in circumstances they are ever noble. The conch or the chank sea shell, though burnt, is white nevertheless.

****

குருகோவிந்த சிங்

குரு கோவிந்த சிம்மன் கதை

சீக்கிய மதத்தின் கடைசி குரு கோவிந்த சிம்மன் .

இவரது தந்தையான குரு தேஜ்  பகதூர் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். டில்லியில் சிறையிலிருந்த  தனது தந்தை குருதேஜ் பகதூருக்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங்.

குருகோவிந்த சிங் 1675 CE முதல் சாகும்  வரை சீக்கியர்களின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் ஔரங்கசீப்புடன்  மோதியதால்,  தர்மம் காக்கும்  போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார்.

இவரது தந்தையும், ஒன்பதாவது சீக்கிய குருவுமான குரு தேஜ் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால்,  துண்டு துண்டாக வெட்டப்பட்டு,  குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். “நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல”  என்று அவர் தனது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது.

சீக்கியர்களை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயத்தினராக மாற்றினார். தனது இயக்கத்திற்கு  ‘கால்ஸா’ (தூய்மை) என்று பெயர் சூட்டினார்.  இதில் சேருபவரை ‘அகாலி’ என்று அழைத்தார். அகாலி என்ற சொல்லுக்கு அமரத்தன்மை வாய்ந்தவன் என்று பொருள். தனக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.

ஒவ்வொரு சீக்கிய ஆணும் கடவுளின் பிள்ளைகள் என்று உணர்வதற்காக தலைப்பாகையும் ஐந்து ‘க’ வை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தி மொழியில்  ‘பஞ்ச்’ என்றால் ஐந்து. க- எனும் எழுத்து ஐந்து ககர எழுத்துக்களை முதன்மையாகக் கொண்ட செற்களைக் குறிக்கின்றது. கேஸம் (நீண்ட தலை முடி, தாடி): கங்கம் (சீப்பு): கிர்பான் (குத்துவாள்): கச் (அரைக்கால் சட்டை); கர (எஃகு காப்பு):

குரு கோவிந்த சிங் தனது வாழ்வு முழுவதும் அன்னிய ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். தனது  குடும்பமே அழிந்தபோதும், அவர் நிலைகுலையவில்லை. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பையே சீக்கிய மதத்தின் குருவாக்கினார்

இந்த மாவீரர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நான்டெட்- நகரில் 1708 அக்டோபர் 7-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். 

குரு கோவிந்த சிம்மனுடைய தாயார் மாதா குஜ்ரியுடன் இளைய புதல்வர்களான ஜோராவர் சிங்கும் (9 வயது) ஃபத்தே சிங்கும் (6வயது) முஸ்லிம் ஆளுனரான வாசிர் கானால் கைது செய்யப் பட்டார்கள். பச்சிளம் பாலகர்களானாலும் அவர்கள் சிங்கத்தின் குட்டிகள். முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்துவிட்டதால் உயிருடன் சுவரெழுப்பிக் கொல்லப் பட்டார்கள் அதைத் தாங்க முடியாத குருவின் தாயார் அன்றே உயிரை விட்டுவிட்டார்.

தந்தை தாய் புதல்வர்கள் எல்லோரையும் பறிகொடுத்தும் குரு கோவிந்த சிங்,  சிங்கமாக விளங்கினார்

சீக்கியர்களில் கடைசி குருவான குரு கோவிந்த சிங் மொகலாயப் பேரரசன் அவுரங்க சீப்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் அவைகளைத் துச்சமாக மதித்தவன். அந்த குரு கோவிந்த சிம்மன் ஒரு சிட்டுக் குருவியைக் கூட பருந்தாக்கிக் காட்டுவேனென்று வீர முழக்கம் செய்தார். அவர் கூறிய வாசகங்களை பாரதியார் குரு கோவிந்த சிம்மனைப் பற்றி பாடிய பாடலில் ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்று சிம்ம கர்ஜனை செய்கிறார்.

குரு கோவிந்தன் உண்மையிலேயே இப்படிச் செய்து காட்டினார். அவர் கால்சா வீரர்களுக்காக செய்த அமிர்தம் ஒரு சில துளிகள் கீழே சிந்திவிட்டன. அதைச் சுவைத்த குருவிகள் உடனே வீறு கொண்டெழுந்து வானில் சீறிப் பாய்ந்தன. கழுகுகளை ஓட ஓட விரட்டின. இதைக் கண்ட வீரர்கள் குருவின் மகத்தான சக்தியை உணர்ந்தனர்.

இன்னும் ஒரு சம்பவம்

கோவிந்த சிம்மன் எப்போதும் ஒரு வெள்ளைப் பருந்தை வைத்திருந்தார். ஒரு முறை அவர் ஒரு முஸ்லீம் கனவானின் தோட்டத்துக்குப் போனார். அந்த ஆள் ஒரு கறுப்பு பருந்தை வைத்திருந்தார். கோவிந்த சிம்மனின் வெள்ளைப் பருந்தின் மீது ஆசை வந்தது. ஒரு தந்திரத்தின் மூலம் அதைக் கைப்பற்ற எண்ணினான். இரண்டு பருந்துகளுக்கும் போட்டிவைப்போம். தோல்வி அடைந்தவர் அவரது பருந்தை மற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டார்.

குரு கோவிந்தருக்கு எதிராளியின் உள்நோக்கம் புரிந்தது. உடனே பருந்து என்ன? குருவிகளை அனுப்புகிறேன் அதனோடு உங்கள் பருந்து போடியிடட்டும் என்றார். அந்த முஸ்லீம் கனவானோ உம்முடைய குருவிகள் என் பருந்துக்கு உணவாகிவிடும் என்று சொல்லிச் சிரித்தார்.

கோவிந்த சிம்மன் மரத்தில் இருந்த இரண்டு சிறிய குருவிகளைப் பிடித்து பருந்தை விரட்ட அனுப்பினார். இரண்டு குருவிகளும் பருந்தை படுகாயப் படுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு விரட்டிச் சென்றன. படு காயம் அடைந்த பருந்து கீழே விழுந்து இறந்தது. அப்போது குரு கோவிந்தர் சொன்ன சொற்கள் சீக்கியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சொற்களாகும்.

சிட்டுக் குருவிகளைப் பருந்துகளாக்கி சண்டையிட வைப்பேன். அப்போதுதான் என்பெயர் கோவிந்த சிம்மன். ஒன்றே கால் லட்சம் பேர் வந்தாலும் அவை எதிர்த்துப் போராடும் என்றார்:

சிடியான் சே பாஜ் பனாவோ

சவா லாக் சே ஏக் லடாவோ

தப் குரு கோவிந்த நாம் சுனாவோ

இதையே சீக்கிய குரு கூறிய சொற்களிலேயே காணலாம்:

சிரியோன் சே மே பாக் லராவுன்

தபே கோவிந்த சிம் நாம் கஹாவுன்

பெரியோர்கள் கஷ்டப்பட்டாலும் இறக்க நேரிட்டாலும் குணத்திலிருந்து மாறுபடமாட்டார்கள் !

பாரதியார் பாடலில் குருகோவிந்த சிங் பற்றிய இன்னுமொரு சம்பவம் வருகிறதுஅதைத் தனியே காண்போம்.

–subham—

Tags- மேன்மக்கள் , குருகோவிந்த சிங், குமரேச சதகம், கட்டுரை-9, பாரதியார் பாடல் , சிட்டுக்குருவி, பருந்து

Leave a comment

Leave a comment