WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,498
Date uploaded in London – –11 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை!
ட்ரோன் ஃபைட்!
(DRONE FIGHT!)
ச. நாகராஜன்
ராம் திகைத்து செய்வதறியாது உட்கார்ந்திருந்தார். பிரபல
ட்ரோன் சாம்ராஜ்ய மன்னர் என்று கர்வத்துடன் பீற்றிக் கொள்ளும் தனக்கா இந்த நிலை!
பத்தாயிரம் ட்ரோன்கள் ஆங்காங்கே ஆர்டர்களைத் தானே பெற்று மாநிலம் முழுவதும் டெலிவரி செய்து பணத்தைக் கச்சிதமாகப் பெற்று வங்கியில் டெபாசிட் செய்து விடும். தனது தொழில் போட்டி எதிரியான கிருஷ்ணாவுக்கு சரியான சவால் விடும் அவர் எங்கே என்னை முந்தி விடு என்று அடிக்கடி சொல்வது வழக்கம்.
கிருஷ்ணாவிடம் 9500 ட்ரோன்கள் தான் உள்ளன.
ஆனால் இன்று நடந்தது என்ன? மத்திய மாநில அரசுகள் அவரையும் கிருஷ்ணாவையும் கடுமையாக எச்சரித்து விட்டன.
ஆங்காங்கே கண்டபடி பறக்கும் ட்ரோன்களால் தங்களால் டேக் ஆஃப் செய்யவும் முடியவில்லை. லேண்டிங்கும் செய்ய முடியவில்லை; ஆகவே விமானப் பயணம் இனி நடக்கவே நடக்காது என்ற நிலை உருவாகி விட்டது என்று விமானிகள் கண்டிப்பாகக் கூறி விட்டனர்.
தனது தலைமை அதிகாரியை அழைத்து இதை தலைமை ட்ரோனிடம் சொல்லச் சொன்னார் ராம். சற்று எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்பது அவரது எண்ணம்.
அதற்கு பதிலாக தலைமை ட்ரோன், “போடா போ! எதிரி கம்பெனியின் ட்ரோன்களை ஒழிப்பது ஒன்றே லட்சியம். இது பெரும் போர்” என்று கூறி விட்டது.
ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று ஆஹா, ஓஹோ என்று கூவி அனைத்து வேலைகளையும் ட்ரோன்களிடம் தந்ததும், கெட்ட வார்த்தைகளைக் கூடக் கற்றுக் கொடுத்ததும் எவ்வளவு தவறு என்பதை இப்போது தான் அவர் புரிந்து கொண்டார்.
இதே நிலை தான் கிருஷ்ணாவுக்கும். அவரிடம் ட்ரோன்கள், “பேசாமல் இரு; எதையேனும் நிறுத்தி எங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தால் நூறு தற்கொலை ட்ரோன்கள் ஆங்காங்கே விமானங்கள் மீது மோதும்; மந்திரிகள் வீட்டில் விழுந்து அவர்களை அழிக்கும்; கேஸொலைன், ஜெட் ஃப்யூயல், டீஸல் ஸ்டாக் நிலையங்கள் மீது விழுந்து நகரையே எரிக்கும்” என்று எச்சரித்து விட்டனவாம். எதிரியான ராமின் ட்ரோன்கள் ஒழியும் வரை தங்கள் டெலிவரி அதிகமாகும்; தொடரும் என்றன கிருஷ்ணா கம்பெனி ட்ரோன்கள்!
அவர் ஓவென்று அழுதார்.
24 மணி நேர கெடு கொடுத்த அரசு அதிகாரிகளிடம் ட்ரோன்களின் இந்தத் தற்கொலைத் திட்டத்தைத் தெரிவித்த போது அவர்கள் அரண்டு விட்டனர். ராணுவம் கூட ஒன்று செய்ய முடியாத நிலை.
டெலிபோனிலும் கூட பேச முடியாத நிலை. ட்ரோன்கள் அதை ஒட்டுக் கேட்டு விடும். ஆகவே மாறுவேடம் பூண்டு செக்யூரிடி போல ராம் வர, டிரைவர் உடை அணிந்து கிருஷ்ணா வர ரகசியமாக நகர் ஒன்றின் ரெஸ்டாரண்டில் பாதாள அறையில் இருவரும் சந்தித்தனர்.
இரண்டு கூரிய மூளைகளும் முணுமுணுத்த குரலில் பேசித் திட்டம் ஒன்றைத் தீட்டின.. ‘யாருக்கும் எதையும் சொல்லாதே’ என்பது தான் அவர்களுடைய ரகசியத்தின் முக்கிய மையக் கருத்து!
மறுநாள் நகர் முழுவதும் மின்சாரம் நின்று விட்டது. நகரமே ஸ்தம்பித்த நிலையில் பஸ்கள், லாரிகள், ரயில்கள் ஓடவில்லை.
கேஸொலைன், ஜெட் ஃப்யூயல்,, டீஸல் பங்குகள் இயங்கவில்லை. விமானங்கள் பறக்கவில்லை.
ட்ரோன்களின் தலமை கோபத்துடன் கத்தியது. “என்ன ஆயிற்று? கேஸொலைன்,, டீஸல் இல்லை என்றால் பறக்க முடியாதா என்ன? சோலார் பவரில் செல்வோம். பாதி பேரை தரையில் இறக்கி விடுவோம். எங்களின் மூவ்மெண்ட் நிற்கவே நிற்காது.”
ராம் சிரித்துக் கொண்டார். இரவு ஆனது. இன்னும் மின்சாரம் வரவில்லை. மக்கள் கோபத்துடன் கத்தினர்.
ட்ரோன்கள் மீண்டும் அலறின: “இரவு நேரத்தில் சோலார் பவர் கிடைக்காது. இருந்த சக்தியும் தீர்ந்து விட்டது. தரை இறங்கப் போகிறோம்.”
தரை இறங்கிய ட்ரோன்களை கிடுகிடுவென்று நானூறு பேர்கள் அணுகினர். அதன் மூளை இயக்கப் பகுதியான ப்ரெயின் பாக்ஸை ட்ரோனிலிருந்து கழட்டி, எரியும் குழியில் போட ஆரம்பித்தனர். பேட்டரிகளும், ஃப்யூயல் டாங்குகளும் கழட்டி வீசி எறியப்பட்டன; அழிக்கப்பட்டன!
எல்லாம் முடிந்ததா? ராம் கிருஷ்ணனைக் கேட்க கிருஷ்ணன் ராமைக் கேட்க அரசு அதிகாரிகளும் போலீஸும் ராணுவமும் இருவரையும் கேட்க, “பிழைத்தோம் நாம்” என்று பதில் வந்தது!
பளீரென மின் வெளிச்சம் நகரெங்கும் பரவ டிவிக்கள் நடந்ததை ராம் மற்றும் கிருஷ்ணன் வாயிலாக ஒளிபரப்ப ஆரம்பித்தன.
அத்தோடு முக்கிய அறிவிப்பாக விமானிகள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ட்ரோன் டெலிவரியால் தங்கள் வணிகம் படுத்து விட்டது என்பதற்காக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவிருந்ததை ரத்து செய்ததாக வணிக சங்கங்கள் அறிவித்தன!
ராமும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்குவதற்காக லட்டு வாங்க இனிப்புக் கடைக்கு நடந்தே சென்றனர்!
ட்ரோன் டெலிவரி இனி எப்போதும் எங்கும் கிடையாது!
***