ஆலயம் அறிவோம்! திருச்சிராப்பள்ளி திருத்தலம் (Post No.14,503)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14, 503

Date uploaded in London –12 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

11-5-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன் 

அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு

சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்லக் கேள்

திரிச்சிராப்பள்ளி என்றலும் தீவினை

நரிச்சு இராது நடக்கும் நடக்குமே

                 – திருநாவுக்கரசர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி திருத்தலமாகும். சோழநாட்டில் காவிரியின் தென்கரைத் தலங்களில் புகழ் பெற்ற பண்டைய தலமாகும் இது.

மூலவர் : செவ்வந்திநாதர், திருமலைக் கொழுந்தர், தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர்

இறைவி : மட்டுவார்குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை

தல விருட்சம் : மகிழ மரம்

தீர்த்தங்கள் : காவிரி, சிவகங்கை, சோமரோகணி என்னும் பிரம்ம தீர்த்தம், நன்றுடையான், தீயதில்லான் உள்ளிட்ட தீர்த்தங்கள்

திரிசிரன் என்ற அரக்கன் அரசாண்டு இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் இது திரிசிராப்பள்ளி என்ற பெயரைப் பெற்றது. இதுவன்றி, இம் மலையில் திரிசிரம் – அதாவது மூன்று சிகரங்கள் அமைந்துள்ளமையால் இது இப்பெயரைப் பெற்றது என்றும் கொள்ளலாம்.

பிரமனுடைய பெயரால் அமைந்ததால் பிரம கிரி எனவும் பார்வைக்கு ரிஷபம் போல உள்ளதால் ரிஷபாசலம் என்ற பெயரும் இதற்கு உண்டு. தென்கைலாயம் என இதைப் பக்தர்கள் போற்றுகின்றனர்.

சாரமாமுனிவர் என்ற முனிவர் செவ்வந்தி மலரால் பூஜித்த காரணத்தால் இறைவனுக்கு செவ்வந்திநாதர் என்ற பெயர் உண்டாயிற்று.

மலையின் கொழுந்தாய் இருப்பதால் திருமலைக் கொழுந்தர் என்ற பெயர் அமைந்தது.

ஒரு பெண்ணுக்காக தாயாக வந்து உதவியதால் தாயுமானவர் என்ற பெயர் உண்டாயிற்று.

கோவிலுக்கு மேற்கில் பிரம்மதீர்த்தமும் வடக்கில் சிவகங்கையும் கிழக்கில் நன்றுடையானும் தெற்கில் தீயதிலானும் அமைந்துள்ளன.

இவற்றுல் நன்றுடையான், தீயதிலான் ஆகிய தீர்த்தங்களை திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் முதல் பாடலில் காணலாம்.

மேற்கில் உள்ள தெப்பக்குளம் பதினாறாவது நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் அழகுற அமைக்கப்பட்டதாகும். இதில் பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகளும் சரித்திர சம்பவங்களும் உண்டு.

முன்பொரு காலத்தில் திருக்கைலாயத்தில் சிவபிரானை வணங்குவதற்காக தேவர்கள் அனைவரும் வந்திருந்தனர். அப்போது ஆதிசேடன் அவர்களைப் புகழ்ந்து கொண்டாடினான்.

இதைக் கண்ட வாயுதேவனுக்குப் பொறாமை உண்டாயிற்று. அவன் ஆதிசேடனை இகழ்ந்து பேசியதோடு தன் வலிமையைக் காட்டவும் முற்பட்டான்.

இதனால் ஆதிசேடன் தன் உடலால் கைலை மலையை இறுகப் பிணித்துக் கொண்டான். வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசத் தொடங்கவே உலகமெல்லாம் அதிரத் தொடங்கின. அப்போது கைலை மலையிலிருந்து மூன்று துண்டுகள் கிளம்பி ஒன்று திருக்காளத்தியிலும், மற்றொன்று திரிசிராமலையிலும் மற்றொன்று இலங்கையில் உள்ள திருகோணமலையிலும் விழுந்தன. ஆகவே இவை மூன்றும் தென்கைலாயம் என்ற பெயரைப் பெற்றன. திருக்காளத்திக்கும் திருக்கோணமலைக்கும் நடுவில் இது இருப்பதால் இதற்கு அதிக மகிமை உண்டு. சங்க நூல்களில் இந்த மலை குறிப்பிடப்படுகிறது.

 இன்னொரு வரலாறும் உண்டு. காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் ரத்தினகுப்தன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இறையருளால் இரத்தினாவதி என்ற மகள் பிறந்தாள். அவள் மணப்பருவத்தை அடைந்தபோது திரிசிராமலையில் வாழ்ந்த தனகுப்தன் என்னும் வணிகனுக்கு தன் புதல்வியை தன் இல்லத்தில் வைத்து மணமுடித்து அனுப்பினான். சிறிது காலத்தில் ரத்தினகுப்தன் இறந்தான்.

நாளடைவில் ரத்தினாவதி கர்ப்பவதியானாள். அவளது தாயாருக்கு இந்த செய்தி தெரியவே அவள் உடனே தன் மகளைப் பார்க்கக் கிளம்பினாள். ஆனால் வரும் வழியில் காவிரி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பிரசவ நேரத்தில் தாயை எதிர்பார்த்திருந்த ரத்தினாவதி இறைவனை வேண்ட, சிவபிரான் இரத்தினாவதியின் தாய்  வேடம் பூண்டு வேண்டிய சிகிச்சைகளைச் செய்தார். இரத்தினாவதியும் சுகமாகப் பிரசவித்து  ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அப்போது வெள்ளம் வடியவே அவளது நிஜத் தாயும் அங்கு வந்து சேர்ந்தாள். ஒரே உருவத்தில் இருந்த இரு தாயார்களைக் கண்டு ரத்தினாவதி பிரமித்தாள். தாயாக வந்த சிவபிரான் மறைந்து வானில் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அருளினார். தாயுமானவர் என்ற பெயரையும் அவர் பெற்றார். இந்த வரலாறு ஒவ்வொரு ஆண்டும் பிரம உற்சவத்தின் ஐந்தாம் திருவிழாவன்று நடத்திக் காட்டப்படுகிறது.

இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. சாரமா முனிவர் என்ற முனிவர் சிராமலைப் பிரானுக்கென ஒரு நந்தவனம் ஏற்படுத்தி, அங்கு மலர்ந்த செவ்வந்தி மலர்களால் இறைவனை பூஜித்து வந்தார். அப்போது உறையூரில் பராந்தக சோழன் அரசாண்டு வந்தான். அச்சமயத்தில் பூவியாபாரி ஒருவன் நந்தவனத்தில் புகுந்து செவ்வந்தி மலர்களைக் கவர்ந்து எடுத்துச் சென்று அரசனின் மனவிக்குக் கொடுத்து வரலானான். இதை மறைந்து நின்று கவனித்த முனிவர் அரசனிடம் இதைச் சொல்லி முறையிட்டார். அரசன் அவனைக் கண்டிக்கவில்லை. முனிவர் சிவபிரானிடம் முறையிட்டார். கிழக்குப் பக்கம் பார்த்திருந்த இறைவன் இதனால் மேற்கு முகம் திரும்பினார்.

பலத்த மேகங்கள் உறையூரில் மண்மாரிப் பொழிந்தன. அரசனும் கர்ப்பமுற்ற அவன் மனைவியும் ஊரை விட்டு வெளியே செல்ல ஊரும் அழிந்தது. மண்மாரி அரசனைப் பின் தொடரவே அவன் மாண்டான். காவிரியில் தப்பி வீழ்ந்த அவனது மனைவி ஒரு அந்தணனால் காப்பாற்றப்பட்டாள். அவளது குழந்தையே பின்னால் கரிகால் சோழன் என்ற புகழ் பெற்ற அரசனாக ஆனான்.

இங்கு மேற்கே நாகநாதஸ்வாமி கோவிலும், பூலோகநாதஸ்வாமி கோவிலும் தெற்கே கைலாஸநாதஸ்வாமி கோவிலும் உள்ளன. மேற்குப்புறம் நந்தி ஆலயம் உள்ளது.

இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. சாரமா முனிவரின் வனத்தின் அருகே வேட்டையாடச் சென்ற சோழ மன்னன் ஒருவன் அங்கு ஆதிசேடனின் புதல்வியரான நாக கன்னிகைகள் எழுவரைக் கண்டான். அவர்கள் செவ்வந்தி மலரை ஏந்தி சிவபிரானை பூஜிக்கச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை மணம் முடிக்க விரும்பிய சோழன் நாகலோகம் சென்று ஆதிசேடனின் அனுமதி பெற்று கன்னிகைகளில் ஒருத்தியான காந்திமதி என்பவளை மணந்தான். அவளும் தினமும் திரிசிராபள்ளி நாதரை வழிபட்டு வந்தாள்.

காலக்கிரமத்தில் கர்ப்பமுற்ற அவள் ஒரு நாள் சூரிய வெப்பத்தால் நடக்க முடியாமல் சோர்ந்து வழியில் கீழே விழுந்தாள். “இன்று இறைவனை தரிசிக்க முடியாமல் போயிற்றே” என்று அவள் வருத்தமுற, சிராமலை நாதர் அவ்விடத்திலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றி அவளுக்குக் காட்சி தந்தார். இதனால் அவருக்குத் தாந்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் தோன்றியது. இதனால் மகிழ்ந்த சோழன் சூரவாதித்தன் தாந்தோன்றீஸ்வரருக்குத் தனி ஆலயம் ஒன்று அமைத்தான். இதுவே திருத்தாந்தோன்றி  தலமானது. இத்தலம் உறையூருக்குச் செல்லும் வழியில் உள்ளது.

திரிசிராமலைக் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்கள் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சலவைக்கல்லால் அமைக்கப்பட்டது. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள சித்திர மண்டபத்தில் புராணத்தைச் சித்தரிக்கும் சித்திரங்களைக் காணலாம்.

மலைக்கோவிலின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை பூமியிலிருந்து 273 அடி உயரமுள்ளது. 417 படிகள் கொண்டது.

இத்தலத்தில் பிரம்மா, அகஸ்தியர், இந்திரன், உமாதேவி, ஜடாயு, சப்தரிஷிகள், ராமர். லக்ஷ்மணர், அநுமன், விபீஷணன், அர்ஜுனன் உள்ளிட்ட ஏராளமான ரிஷிகள், தேவர்கள் மற்றும் வீரர்கள் பூஜித்து அருள் பெற்றுள்ளனர்.

கோவிலைப் பற்றிய புலவர்களின் பல நூல்கள் உண்டு. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இங்கு ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை மட்டுவார்குழலம்மையும் தாயுமானவரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment