ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post.14,504)

 Written by London Swaminathan

Post No. 14,504

Date uploaded in London –  12 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLLECTED FROM POPULAR NEWS PAPERS AND EDITED FOR BROADCAST.

ஞானமயம் வழங்கும்  உலக இந்து செய்திமடல்  (11-5-2025)

****

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மே 11- ஆம் தேதி 2025-ம் ஆண்டு

*****

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ் பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இது என்றும் இந்த நடவடிக்கையால் நாட்டின் சுயமரியாதையும், மன உறுதியும் மேம்பட்டுள்ளது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை நம் நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது, தவிர்க்க முடியாதது என்று கூறியவர்,  இந்த நெருக்கடியான நேரத்தில் ஒட்டு மொத்த நாடும் ராணுவத்துக்கு உறுதுணையாக நிற்கும் என்று  மோகன் பகவத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மோகன் பகவத் இந்த சவாலான நேரத்தில் அரசின் அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் இந்திய ராணுவ நடவடிக்கையை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி நடத்தினார். அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சியும் இந்திய ராணுவத்தை ஆதரித்து பேரணிகளை நடத்தியது. அனைத்துக் கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுதும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன .

இதற்கிடையில் நாடு முழுதுமுள்ள கோவில்களில் இந்தியாவின் வெற்றிக்காக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதீனங்களின் தலைவர்களும் , மடாதிபதிகளும், இந்து மத தலைவர்களும் ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

எல்லை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், காஷ்மீர் ஆகியவற்றில் போர்க்கால சூழ்நிலை நிலவுகிறது . பயங்கரவாதிகளின்  இலக்குகளை மட்டும் இந்தியா தாக்கி வருகிறது ; ஆகையால் உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

*****

இன்று மே மாதம் பதினோராம் தேதி குருப்பெயர்ச்சி நடப்பதால் தமிழ் நாட்டில் பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும், யாக யக்ஞங்களும் நடக்கின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும்  குருப்பெயர்ச்சி நடக்கிறது;

குரு என்னும் வியாழன் கிரகம் ஆண்டு தோறும் இடம் பெயரும். இப்பொழுது ரிஷப ராசியிலிருந்து  மிதுன ராசிக்கு குரு பகவான் செல்கிறார்.

****

மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவின் முக்கிய  நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஒரு லட்சம் பேருக்கு இலவச சாப்பாடு  வழங்கப்பட்டது. ஆறுவகையான உணவுகளை தயாரிக்க ஐநூறு தொண்டர்கள் உதவி செய்தார்கள்.

வெள்ளிக்கிழமை நடந்த தேரோட்டத்தில் கலந்து கொள்ளப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சித்திரை மாதத்தில் தமிழ்நாடெங்கும் பல்வேறு கோவில்களில் தேரோட்டமும், கல்யாண வைபவங்களும் நடப்பது வழக்கம். அதன்படி பல இடங்களில் தேரோட்டம் நடந்த செய்திகளும் வந்துள்ளன

**********

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்திற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை!

தூத்துக்குடி மாவட்டம்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்திற்குக் கோயில் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின், ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 300 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள கோயில் தீட்சிதர்கள், நிழல் விழாத சுபமுகூர்த்த நேரமான நண்பகல் 12 மணிக்குக் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

xxxx

ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரி மலைக்கு வருகிறார்

சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலையில் மே 14ல் நடை திறக்கப்படுவதால், 15 முதல் 19 -வரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மே 18 அல்லது 19ல் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் சென்று, அங்கிருந்து காரில் பம்பைக்கு செல்கிறார். அங்கிருந்து நடந்தோ அல்லது டோலி மூலமாகவோ அவர் சபரிமலை சன்னிதானம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த இடங்களை உயர் போலீஸ் அதிகாரிகள், இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.சன்னிதானம் விருந்தினர் மாளிகையில், கூடுதல் வசதிகளுடன் அறை தயாராகிறது. அந்த இரு நாட்களுக்கு, பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முர்மு, சபரிமலை வரும் பட்சத்தில், பதவியில் இருக்கும்போது, இங்கு வரும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

****

சிலை தடுப்புப் பிரிவு அதிரடி..! கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்…!

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின் துரித நடவடிக்கையால், நெதர்லாந்து நாட்டில் பழமையான கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடப்படுவது கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த விலை மதிக்க முடியாத உலோகச் சிலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இந்த சிலை, தற்போது நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடப்பட இருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், நெதர்லாந்து நாட்டு காவல்துறைக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் அவசர மின்னஞ்சல் மூலம் தகவலைத் தெரிவித்தனர். சிலையின் பழமை மற்றும் அது திருடப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பினர்.

தமிழ்நாடு காவல்துறையின் துரித நடவடிக்கையின் பலனாக, நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள் ஏலத்தை உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டனர். தற்போது அந்த கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

சிலையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயிலில் கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை கடந்த 2010-ஆம் ஆண்டு திருடப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்தச் சிலை, 64 செ.மீ. உயரம், 23 கிலோ எடை கொண்டதாகும்.

**** 

உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்ட காவல்துறை – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு! 

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து தொடர்பாக காவல்துறை உண்மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் விபத்து தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை கூறுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த அடுத்த நிமிடமே 100 எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் விபத்து தொடர்பாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்ற காவல்துறையின் அறிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறியுள்ள மதுரை ஆதீனம், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தனது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர் தரப்பு வாகனம் பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதை மறைக்கும் வகையில், தாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல எனக்கூறியுள்ள அவர், முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

****

சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்லஆன்மா சார்ந்தது : ஜெ.பி.நட்டா

சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்லஆன்மா சார்ந்தது என மத்திய அமைச்சரும்பாரதீய ஜனதாக கட்சியின்

தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்வி நிறுவன வளாகத்தில், 6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய ஜெ.பி.நட்டா, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு எனக்கூறி உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தருமபுரம் ஆதீனம் மிகவும் தொன்மையானது எனத் தெரிவித்தார். கோயில்கள், புலவர்கள் என பல்வேறு சிறப்புகளைத் தமிழ்நாடு பெற்றிருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.

இதையடுத்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ரவி, சனாதன தர்மத்தால் தான் பாரதம் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

திருமுறை, தேவாரம் ஆகிய தலைசிறந்த படைப்புகளை சைவ சித்தாந்தம் வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், சைவ சித்தாந்தத்தைப் பிரதமர் மோடி பின்பற்றுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உயர்கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்

இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்திருந்த அனைவரையும் தமிழ் மொழியில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து சிவபெருமானை அவர் தமிழில் போற்றி வணங்கியபோது கூடியிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

****

வேதகிரீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற  வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவின் 3-ஆம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, 63 நாயன்மார்களும் சுவாமியை வணங்கியபடி ஊர்வலமாகச் செல்ல, முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது. மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் சுவாமி வீதியுலா செல்ல, பக்தர்கள் சுவாமியை வணங்கியபடி கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

******

ராமர் ஒரு புராண கதாபாத்திரமா? – ராகுல் காந்திக்கு பா.ஜ.க கண்டனம்!

ராமர் ஒரு புராண கதாபாத்திரம் என கூறிய ராகுல் காந்தியின் கருத்துக்கு பாரதீய ஜனதாக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, புத்தர், குருநானக், காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என கூறியதாகவும், ராமர் போன்ற புராண கதாபாத்திரங்களும் அதைதான் போதித்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, இந்துக்களையும், ராமரையும் அவமதிப்பது காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராமருக்கும், இந்துக்களுக்கும் எதிரானவர்களை
மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதிகாசம் என்பது வரலாறு; ஆகவே மகாபாரதமும் ராமாயணமும் உண்மையில் நடந்த சம்பவங்கள் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் அப்படியிருக்க இதை புராணம் என்று ராகுல் கூறியதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .

****

சுஹாஸ் ஷெட்டி கொலைக் குற்றவாளிகள் கைது


கர்நாடக மாநிலம்தட்சிண கன்னட மாவட்டத்தில் பதட்டமான சூழலை உருவாக்கிய இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக மங்களூரு நகர காவல்துறை இரண்டு பேரை கைது செய்து, எட்டு சந்தேக நபர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கலாசாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் விசாரணையில் அவர்கள் மங்களூரை சேர்ந்த பிரபல சஃப்வான் கும்பலுக்கு உதவி செய்து வந்தது தெரியவந்துள்ளது.


தற்போது, ​​வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், மங்களூரு போலீசார் எட்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்,

****

சம்ஸ்கிருத மொழி மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்திய மொழிகள் பலவற்றிற்கு சம்ஸ்கிருதம்தான் தாய் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 1008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்றும், பிரதமா் மோடியின் தலைமையிலான ஆட்சியில் சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலகின் புகழ்பெற்ற மொழி அறிஞா்கள் பலரும் சம்ஸ்கிருதத்தை மிக அறிவியல்பூா்வ மொழியாக அங்கீகரித்துள்ளதாக கூறிய அவர், சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறி கிடக்கும் கையெழுத்து பிரதிகளை சேகரிக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என கூறினார்.

****

ஹிந்துக்கள் வெளியேற  கனடாவில் காலிஸ்தான் பேரணி

கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் கனடாவில் காலிஸ்தான் பேரணி நடத்தினர்.
சமீப காலமாக ஹிந்து கோவில்கள் மீது சில மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.


தேர்தல் முடிவு வெளியான சில நாட்களுக்குள் மே 5- ன்று காலிஸ்தான் அமைப்பினர் டோரடண்டோவில் உள்ள மால்டன் குருத்வாரா அருகே நகர் கிர்தான் பகுதியில் பேரணி நடத்தினர். இதில் 8 லட்சம் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பேரணியில் டிரக்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரது உருவ படத்தை கையில் விலங்கிட்டவாறு கூண்டுக்குள் நிற்பதுபோன்று சித்தரித்து இருந்தனர்.

இந்த பேரணிக்கு கனடிய ஹிந்து சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்தான செயலை அனைத்து தலைவர்களும் கண்டிக்க வேண்டும். என்று ஹிந்து அமைப்பு கூறியுள்ளது. இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த ஏறக்குறைய 18 லட்சம் பேர்  அங்கு வசிக்கின்றனர். இதில் 8 லட்சம் பேர் ஹிந்துக்கள் ;

xxxx

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

மே மாதம் 18-ஆம் தேதி

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—SUBHAM—-

Leave a comment

Leave a comment