கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 2 (Post.14,507)

SPEAKER S NAGARAJAN, BANGALORE

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,507

Date uploaded in London – –13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

11-5-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது. 

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்! – 2

ச. நாகராஜன் 

பிரச்சினைகளையும் அவற்றைப் போக்க ஓத வேண்டிய கந்த புராணப் பாடல்களையும் அழகுறத் தொகுத்து பிரார்த்தனை நூலாக ‘கவலைகள் போக்கும் கந்தபுராணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. 

61 பாடல்கள் அடங்கியுள்ள 12 பக்கம் உள்ள இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

குழந்தைகள் கல்வியில் முன்னேற

புத்திரபாக்கியம் பெற்றிட

பதவி கிடைத்திட

பயம் நீங்க

நோய்நொடிகள் நீங்க

அரசு பயம் நீங்க

சத்ரு பயம் நீங்க

பூமி மனை அடைய

மரண பயம் நீங்க

பெண்கள் மனதில் இடம் பெற

காவல் தெய்வம் துணை நிற்க

அச்சம் நீங்கிட

எதிரிகள் நீங்கிட

திருமண பாக்கியம் பெற்றிட

சிவப்பரம்பொருளைச் சரணடைய

தொழில் லாபம் ஏற்பட

கர்வம் நீங்க

சிவபரத்துவம் உணர

வெற்றி, புகழ் அடைந்திட

செல்வ வளம் பெற

மன அமைதி பெற

ஆகிய தலைப்புகளில் துதிக்க வேண்டிய பாடல்கள் தரப்பட்டுள்ளன.

இத்துடன் கிருத்திகை விரத முறையும் அதன் பலனும், ஸ்கந்த சஷ்டி விரத முறையும் அதன் பலனும், கந்தபுராண பாராயண பலன் ஆகியவையும் நூலில் தரப்பட்டுள்ளன.

கந்தபுராணம் படித்தால் கைமேல் பலன் என்பது அனுபவ வாக்கு.

இப்படிப்பட்ட அரும் நூலைத் தொகுத்து அதை இலவசமாகவும் பக்தர்களுக்கு விநியோகித்து வருகிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவஶ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள்.

இதுமட்டுமின்றி ஶ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம், கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள், கந்தபுராணக் கட்டுரைகள் (இரு தொகுதிகளாக உள்ள ஆய்வுக் கட்டுரைகள்), கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள், கந்தபுராணத்தில் சிவபரத்துவம், கலிதோஷம் போக்கும் கந்தபுராணம் உள்ளிட்ட நூல்களும் கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606202 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலின் விலை ரூ 50 முதல் 150 வரை நூலின் பக்கம் மற்றும் விவரங்களுக்குத் தக்கபடி அமைந்துள்ளது.

இலவச நூலைப் படித்து அதில் உள்ளபடி பாராயணம் செய்து புத்திரபாக்கியம் பெற்ற அன்பர்கள் பரவசம் அடைந்ததை அறியும் போது ஆனந்தம் அடைகிறோம். விரும்புவோர் திரு கார்த்திகேயசிவம் அவர்களிடமிருந்து தேவையான நூலைப் பெறலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9751848933.

கச்சியப்பர் கந்தபுராணத்தை அரங்கேற்றிய மண்டபம் கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் என்ற பெயரில் வெளிப்புற மண்டபமாக இன்றும் கோவில் வளாகத்தில் இருந்து வருகிறது. அங்கு இப்போதும் கூட மயில்கள் குவிந்து தோகை விரித்து நடனம் ஆடுவதைக் காணலாம்.

எந்தப் பொருளும் கந்த புராணத்தில் என்பது பழமொழி.

ஆகவே இதன் பெருமையையும் அருமையையும் முற்றிலுமாக உரைத்தல் என்பது முடியாது.

சில முக்கியமான விஷயங்களை இங்கு காண்போம்.

தேவர்களுக்கு முருகப்பெருமான் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார்.

அதை விளக்கும் பாடல் இது:

எண்திசையும் ஈரெழு திறத்து உலகம் எண் கிரியும் ஏழு கடலும்

தெண்டிரையும் நேமி வரையும் பிறவும் வேறு திரிபாகி உளசீர்

அண்ட நிரையானவும் அனைத்துயிரும் எப்பொருளுமாகி அயனும்

விண்டும் அரனும் செறிய ஓருருவும் கொண்டனன் விறற் குமரன்

இதன் பொருள்:

எட்டுத் திசைகளும் பதினான்கு வகையான உலகங்களும் எட்டு மலைகளும், ஏழு கடல்களும் இவை போன்ற பிற பொருட்களும் மாறுபட்ட தோற்றங்களை உடைய அண்டங்களின் வரிசையாகவும் அனைத்து உயிர்களாகவும் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானும் தன்னுள் அடங்கிய ஒப்பற்ற வடிவாக குமரன் தோன்றினார்.

மேல் ஏழு உலகங்களாவன: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம், சனலோகம், மகர்லோகம், சத்தியலோகம்

கீழ் ஏழு உலகங்களாவன : அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்.

எட்டு மலைகளாவன: இமயம், ஏமகூடம், கந்தமாதனம், கயிலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம்

ஏழு கடல்களாவன: உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய்,, கருப்பஞ்சாறு, தேன்

முருகப்பெருமானின் பேருருவத்தில் மண்ணுலகம் முதல் பாதாளம் முடிய உள்ளவை காலாகவும். திசைகளின் எல்லைகள் பெரிய தொள்களாகவும், விண்ணுலகம் முழுவதும் தலையாகவும், ஒளிதரும் சுடர்கள் அனைத்தும் கண்களாகவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி உடலாகவும், இசை பொருந்திய வேதங்கள் வாயாகவும், அறிவு முழுவதும் செவிகளாகவும்,பிரம்மாவும் திருமாலும் வலம் இடம் என இரு பக்கங்களாகவும் உமையம்மை மனதில் எழும் எண்ணமாகவும் , ஐந்தொழில் புரியும் சிவபெருமானே உயிராகவும் ஆகி காட்சி அளித்தார்.

சிவபிரானுக்கு எட்டு விரதங்களும், அம்பிகை, விநாயகர், முருகன், பைரவர் ஆகியோர் ஒவ்வொருவருக்கும் மூன்று முக்கிய விரதங்களையும் அனுஷ்டிக்குமாறு நமது அற நூல்கள் கூறுகின்றன.

கந்த புராணத்தில் முருகப்பெருமானுக்குரிய சுக்கிர வார விரதம், கிருத்திகை விரதம், ஸ்கந்த ஷஷ்டி விரதம் ஆகியவை விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்படுகின்றன.

சரி கந்தபுராணத்தை ஓதுவதால் என்ன பயன்?

பெறுதற்கரிய முக்திப் பேறு கிடைக்கும் என்பதே பயனாகும்.

வற்றா அருள் சேர் குமரேசன் வண்காதை தன்னைச்

சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகள் உறாமே

கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்

உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே;

கச்சியப்ப சிவாசாரியாரது காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

ஒப்பறு சூர் முதல் உடலங் கீறிய

மெய்ப்படு வேற்படை வீரன் மாக்கதை

தப்பறு தமிழினால் தந்த சீர்க்கச்சி

யப்ப சற்குரு பதம் அகத்துள் போற்றுவாம்

என்று கூறி கூறி விடைபெறுகிறேன்.

அனைவருக்கும் நன்றி வணக்கம்.

***

Leave a comment

Leave a comment