தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்னு! அதை அறியாதவன் வாயில மண்ணு!(Post.14,508)

Written by London Swaminathan

Post No. 14,508

Date uploaded in London –  13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-1

மூன்று பெரும் புலவர்கள் என்ன சொன்னார்கள் ?

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவபெருமானிடம் பிறந்தவை ; இரண்டும் சமமானவை .

யார் அந்த மூன்று முனிவர்கள் ?

நமது காலத்தில் வாழ்ந்த சித்தர் , முனிவர் பாரதியார் (1882-1921)  ; அவருக்கு முன் வாழ்ந்த சிவஞான முனிவர் (1753 – 1785); அவர்களுக்கு எல்லாம் முன்னர் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் .

மூவரும் ஸம்ஸ்க்ருதமும் தமிழும் கற்றுத் தேர்ந்தவர்கள் ; அவர்களின் படைப்புகளில் இதைக் காண்கிறோம் .

மூவர் சொன்னதையும் கால வரிசைப்படி காண்போம்.

1

21. தமிழ்த்தாய்; பாரதியார் (1882-1921) பாடல்

தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்

(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,

ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.

****

2

சிவஞானசுவாமிகள்- காஞ்சிப் புராணத்தில்

   ‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்

தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

சிவஞான முனிவர் (1753 – 1785)

*****

3

திருவிளையாடல் புராணத்தில் பாணினி ,அகத்தியர்

பரஞ்சோதி முனிவர் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.

விடை உகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேல்                                                      நாள்

வட மொழிக்கு உரைத் தாங்கி அயன் மால் மாமுனிக்கு

திடம் உறுத்தி அம் மொழிக்கு எதிர் அக்கிய தென்                                                    சொல்

மட மகட்கு ஆங்கு என்பது வழுதி நாடு அன்றோ.    56

 திருவிளையாடல் புராணம்

****

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

உரை

இடபவாகனத்தைச் செலுத்துகின்ற சிவபெருமான், முன்னொரு காலத்திலே, பாணினி முனிவனுக்கு சமஸ்கிருத மொழிக்கு வியாகரண சூத்திரத்தை அருளிச் செய்ததுபோல, பொதியின் மலையிலுள்ள பெருமை பொருந்திய அகத்திய முனிவனுக்கு, தமிழிலக்கணத்தைத் திடம்பெற அறிவுறுத்தி,  தென்மொழியாகிய தமிழ்  நங்கைக்கு, நடனசாலையென உணர்ந்தோரால்

புகழ்ந்து கூறப்படுவது, பாண்டி நாடு அல்லவா

அகத்தியர் சிவபெருமானிடத்தே தமிழ் கேட்டதனை,

உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்

வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி

நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்

தழற்புரை சுடர்க்கடவு டந்ததமிழ் தந்தான்”

என்று கம்பருங் கூறியுள்ளார்.

****

கண் நுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண் உறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந் தமிழேனை

மண் இடைச் சில இலக்கண வரம்பு இலா மொழி போல்

எண் இடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.   57

திருவிளையாடல் புராணம்

நெற்றியிற் கண்ணையுடைய முதற் கடவுளாகிய சிவபெருமானும்,

சங்கத்தின்கண் வீற்றிருந்து, செப்பமுற, ஆராய்ந்து தெரிந்த, இப் பசிய

தமிழ்மொழியானது, மற்றை நிலங்களிலுள்ள, இலக்கண வரையறை இல்லாத, சிலமொழிகளைப்போல, அமையக் கிடந்ததாக

நினைக்கவுங் கூடுமோ (கூடாது)

****

     சிவபெருமான் கழகமோடமர்ந்து தமிழாராய்ந்ததனை “தலைச்

சங்க மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்

கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும்,

நீதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்

தொன்பதின்மர் என்ப” என்னும் இறையனாரகப்

பொருளுரையானும், இப் புராணத்தின் சங்கப்பலகை கொடுத்த

படலத்தில்,

பொன்னின் பீடிகை யென்னும் பொன்னாரமேல்

துன்னு நாவலர் சூழ்மணி யாகவே

மன்னி னார்நடு நாயக மாமணி

என்ன வீற்றிருந் தார்மது ரேசரே”

நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன்

பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம்

முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை

மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள்”

என வருதலானும், நம்பி திருவிளையாடற் புராணத்தானு மறிக.

சேக்கிழார்குரிசிலும் திருத்தொண்டர் புராணத்தில்,

“சென்றணைந்து மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள்

அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்”

எனவும், “திருவாலவாயில், எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது”

எனவும் கூறியருளினார்.

****

பல மொழிகள் பேசப்படும் இடங்கள்

சிங்களஞ் சோனகஞ் சாகஞ் சீனந் துளுக்குடகம்

கொங்கணங் கன்னடங் கொல்லந்தெ லுங்கங்க லிங்கம்வங்கம்

கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம்

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே”

என்னுஞ் செய்யுளாலறிக.

****

என் கருத்து

மாக்ஸ்முல்லர் கும்பல் சொன்னதும் கால்டுவெல் கும்பல் சொன்னதும் தப்பு என்பதை, மூவர் சொன்னதை நம்புவோர் அறிவார்கள்; ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லரும், திராவிடர்கள் மத்த்தியதரைக்கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று கால்டுவெல்லும் கூறினார்கள் ; இந்துக்களோவெனில் இரு மொழிகளையும் இரண்டு கண்களைப் போல பாதுகாத்து இரண்டும் சிவபிரான் தந்தவை என்று நம்புகின்றனர். இந்த பூமியில் பிறந்து வளர்ந்ததாக நம்புகின்றனர் . இதை பாரதியாரும் சொன்னார்:

பாரதியாரின் தேசிய கீதங்கள்

9. எங்கள் தாய்

(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம் எங்கள் தாய்.

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த

ளாயினு மேயங்கள் தாய் – இந்தப்

பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்

பயின்றிடு வாள்எங்கள் தாய்.

****

சம்ஸ்க்ருத மொழியின் சப்தங்கள் சிவபிரானின் உடுக்கையிலிருந்து எழுந்தவை என்று பாணினி கூறுகிறார்; அதை மகேஸ்வர சூத்திரங்கள் என்று சொல்லுவார்கள் ; இன்று வரை பிராமணர்கள், பூணுல் மாற்றிக்கொள்ளும் ஆவணி வட்டச் சடங்கில் – உபாகர்மா சடங்கில்–  அதைச் சொல்லி வருகின்றனர் அன்று வேத ஆரம்பக் கல்வியை மீண்டும் புதுப்பிக்க சம்ஸ்க்ருதம் தேவை என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு .

மூவர் சொன்னதிலும் சம்ஸ்க்ருதமும் தமிழும் இணையானவை என்ற சொல் இருப்பதை அடிக்கோடு இடவேண்டும்  ஆகவே இரண்டும் ஒரே காலத்தில் பிறந்த உலகின் மிகப்பழைய மொழிகள் என்பதே இந்துக்கள்நம்பும் கொள்கை.

இலக்கிய வடிவில் கிடைப்பதும், எழுத்து வடிவில் கல்வெட்டுகளில் கிடைப்பதும் வேண்டுமானால் வேறுபடலாம் பருவ காலமும் மக்களின் உதாசீனமும் ஏராளமான நூல்களை அழித்தன. வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களால் நாளந்தா, காஞ்சீபுர பல்கலைக்கழக நூலகங்கள் அழிந்தன . ஆகவே சமய நூல்களில் உள்ளதை நம்புவது நம் கடமை!

சம்ஸ்க்ருதம் வாழ்க!  தமிழ் வெல்க!

–subham—

Tags-தமிழும் சம்ஸ்க்ருதமும்,  ஒன்னு,  அறியாதவன் வாயில மண்ணு, பாரதியார், பரஞ்சோதி முனிவர் , சிவஞான முனிவர், திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சி  கட்டுரை-1

Leave a comment

Leave a comment