பாரதியார் சொன்ன ஐந்து ஆடுகள் கதை;  குரு கோவிந்தர் (Post No.14,509)

Written by London Swaminathan

Post No. 14,509

Date uploaded in London –  13 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(11-5-2025 எழுதிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-9; குரு கோவிந்த சிம்மன் கதை (Post No.14,499) கட்டுரையின் தொடர்ச்சி)

மொகலாயர் காலத்தில் முஸ்லீம்கள் செயத கொடுமைகளை பாரதியார் சத்ரபதி சிவாஜி கவிதையில் கொட்டி முழக்கினார். ஆனால் அதை விட நீண்ட கவிதை  சீக்கிய மதத்தின் கடைசி குரு குருகோவிந்தர் மீது அவர் இயற்றிய கவிதை ஆகும்; மொத்த வரிகள் 204.

இந்தப்பாடலில் கடைசி வரிதான் முக்கியம்:

அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்

குருகோ விந்தக் கோமகன் நாட்டிய

கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது

ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி-204

முஸ்லீம் மன்னர்களில் மிகவும் கொடியவன் அவுரங்கசீப் ; சீக்கிய மத குருமார்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் உயிருடன் கொன்றவன்; சீக்கிய சிறுவர்கள் மீது உயிருடன் இருக்கும் போதே கல்லறை எழுப்பியவன். அவனுடைய ஆட்சிக்கு இருவர் சாவு மணி அடித்தனர் ஒருவர் சத்ரபதி சிவாஜி மற்றும் ஒருவர் குருகோவிந்தர்.

ஆகவே நீண்ட கவிதையின் நோக்கத்தைக் கடைசி வரியில் சொல்லிவிட்டார்

வெள்ளைக்காரர்களும் இபோதைய அரசியல்வாதிகளும் புகழும் கொடியவனுக்கு சாவு மணி அடித்தவர் குருகோவிந்தர்.

இதில் அவர் சுவையான கதை ஒன்றை பாடல் வடிவில் சொல்கிறார்.

குருகோவிந்த சிங் கதை

குருகோவிந்தர் , சீக்கிய  மதத்தில் முக்கிய கொள்கைகளை

அறிவித்தார்; இனி தனக்குப்பின்னர் குரு இல்லை ; சீக்கிய மத நூலான ஆதிக்கிரந்தமே குரு; மேலும் சீக்கியர்களுக்கு ஐந்து புனிதத் சின்னங்கள் உண்டு. (முந்தைய கட்டுரையில் கொடுத்துள்ளேன்).

கால்ஸா என்ற அமைப்பையும் நிறுவி சீக்கியர்களை பாதுகாத்தார். அந்த கால்ஸா அமைப்பு தோன்றிய கதைதான் ஐந்து ஆடுகள் கதை. இதை பாரதியார் கவிதை வடிவில் நமக்குத் தந்துள்ளார் ; இதோ அந்தக் கதை

கால்ஸா அமைப்பு தோன்றிய கதை

வைசாகி என்பது சீக்கிய புத்தாண்டு நாள்;

அன்றைய தினம் அவர் சீக்கியர் கூட்டத்தைக் கூட்டினார். பெரும் கூட்டமும் கூடியது தனக்கு மதத்தைக் காப்பாற்ற உயிர்ப்பு பலி  தேவைப்படுகிறது என்று அறிவித்து யாராவது தயாரா என்று கேட்டார் ; காளிக்குப் பலியிட வீர்கள் தேவை என்று அவர் அறிவித்தார் ஒருவர் முன் வந்தவுடன் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றுவிட்டு அவர் மட்டும் ரத்தம் சொட்டும் வாளுடன் திரும்பி வந்து இன்னும் ஒரு பலியைக் காளி கேட்கிறாள் என்றார் இன்னும் ஒருவர் முன் வந்தார்; இவ்வாறு ஐந்து பேர் முன்வந்தவுடன்   அவர்களை கூடாரத்திலிருந்து அழைத்து வந்து அவர்களை பஞ்ச பியாரே- அன்பிற்குரிய ஐவர் என்று அறிவித்தார் . அதுதான் கால்ஸா அமைப்பு.

அவர் மட்டும் ஐந்து முறை வெளியே வந்த போது அவரது கத்தியில் சூடான ரத்தம் வழிந்தோடியது ; கூட்டம்  முழுதும் ஒரே அதிர்ச்சி; ஆச்சர்யம் !திகைத்துப்போய் நின்ற கூட்டத்துக்கு முன்னர் கூடாரத்திலிருந்து ஐந்து வீரர்கள் சீக்கியர்களின் புனித உடையில் தோன்றினர் ; எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஏனெனில் குருகோவிந்தர் அழைத்துச் சென்ற ஐந்துபேரும் பலியிடப்படாமல் திரும்பி  வந்து இருந்தனர் அப்போது குரு கோவிந்தர் அறிவித்தார் தான் வெட்டிக்கொன்றது ஐந்து ஆடுகள் தான் என்றும் உயிர்த்தியாகம் செய்ய முன் வருவோரே மக்களைக் காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்தார் அதிலிருந்து சீக்கியர்கள் தங்களை சிங்கம் (சிம்ம- சிங்க- சிங்) என்று அழைத்துக்கொண்டனர். அவர்களுக்கு ஞான ஸ்நானம் வழங்க புதிய முறையையும் குருகோவிந்தர் உண்டாக்கினார் ; அமிர்தம் என்று சொல்லப்படும் இனிப்புக் கரைசலை செய்து அதில் இருபுறமும் கூர்மையுள்ள  வாளைத் தோய்த்து அந்த அமிர்தக கரைசலை சீக்கியர்கள் அருந்த வேண்டும் என்றார் . இவர் எழுப்பிய வீரப்படை காரணமாக மொகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது . 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் வெள்ளைக்காரன் உள்ளே நுழைந்து பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் 300 ஆண்டு ஆண்டான்; இதையும் பாரதியார் வேறு ஒரு பாடலில் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர்  ஆட்சி என்று சாடுகிறார் . முஸ்லீம்களையும் வெள்ளையக்கார கிறிஸ்தவர்களையும் பாரதியார் புரிந்து கொண்டது போல வேறு எவரும் புரிந்துகொள்ளவில்லை; பாரதி ஒரு தீர்க்கதரிசி மட்டுமில்லை. வரலாறு எழுதிய வரலாற்று ஆசிரியன் என்றாலும் மிகையாகாது..

****

பாரதியார் பாடல்- குருகோவிந்தர் 

{[குறிப்பு]: ‘குரு கோவிந்தசிம்ஹ விஜயம்’ — என்பது 1941ஆம் வருடப்

பதிப்பின் தலைப்பு ஆகும்.}

YEAR 1699

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு

விக்ரம னாண்டு, வீரருக் கமுதாம்

ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்

பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்

குலத்தினை வகுத்த குருமணி யாவான் 5

ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்

வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்

வீரர் நாயகன், மேதினி காத்த

குருகோ விந்த சிங்கமாங் கோமகன்

அவன்திருக் கட்டளை அறிந்துபல் திசையினும் 10

பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்

நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்.

ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்

வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்

15

கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும்

புன்னகை புனைந்த புதுமலர்த் தொகுதியும்

பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்

“நல்வர வாகுக நம்மனோர் வரவு” என்று

ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற

புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் 20

திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்.

“யாதவன் கூறும்? என்னெமக் கருளும்?

எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்

இன்புடைத் தாக்கும்?” எனப்பல கருதி,

மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே

25

ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்

தேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து

ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும்

ஆதிபத் தகைமையும் அமைந்ததோ உருவம்

விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் 30

திருமுடி சூழ்ந்தோர் தேசுகாத் திருப்ப

தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது

கூறநா நடுங்குமோர் கொற்றக் கூர்வாள்

எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி

வானின் றிறங்கிய மாந்திரிகன் முனர்ச் 35

சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்க்

மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்

வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்

திருவுள நோக்கஞ் செப்புவன். தெய்வச்

சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலைக் 40

குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி:

வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப

விரும்புகின் றேன்யான் தீர்கிலா விடாய்கொள்

தருமத் தெய்வந் தான்பல குருதிப்

பலிவிழை கின்றதால் பக்தர்காள்! நும்மிடை 45

நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்

வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப

யார்வரு கின்றீர்!” என்னலும் சீடர்கள்

நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்.

கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது 50

ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு

வீரன்முன் வந்து விளம்புவன் இஃதே:

குருமணி, நின்னொரு கொற்றவாள் கிழிப்ப

விடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து

இரையென மாய்வன் ஏற்றருள் புரிகவே.” 55

புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்

கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல

மற்றதன் நின்றோர் மடுவின்வந் தாலெனக்

குருதி நீர்பாயக் குழாத்தினர் கண்டனர்.

பார்மின்! சற்குரு பளீரெனக் கோயிலின் 60

வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்

முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய்

மின்னெனப் பாய்ந்து மீண்டு வந்துற்றனன்.

மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி தூக்கிப்

பின்வரு மொழிகள் பேசுவன் குரவர்கோன்: 65

மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்

சித்தம்நான் கொண்டேன் தேவிதான் பின்னுமோர்

பலிகேட் கின்றாள் பக்தர்காள்! நும்முளே

இன்னும் இங் கொருவன் இரத்தமே தந்துஇக்

காளியைத் தாகங் கழித்திடத்துணிவோன் 70

எவனுளன்?” எனலும் இன்னுமோர் துணிவுடை

வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.

இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி

இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்

குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். 75

இங்ஙன மீண்டுமே இயற்றிப்

பலியோ ரைந்து பரமனங் களித்தனன்.

அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட

மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்

அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80

வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்,

அவரே மெய்ம்மையோர் முத்தரும் அவரே

தோன்று நூறாயிரம் தொண்டர் தம்முள்ளே

அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே

தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் 85

கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்

அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்

ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார்

எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன்

வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து 90

சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும்

ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்

கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்!

ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்!

விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர்! 95

ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்

எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர்

அப்போழ் தின்னருள் அவதரித் தனையான்,

நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு

குறுநகை புரிந்து குறையறு முத்தர் 100

ஐவர்கள் தம்மையும் அகமுறத் தழுவி

யாசிகள் கூறி அவையினை நோக்கிக்

கடல்முழக் கென்ன முழங்குவன்: — “காணீர்!

காளியும் நமது கனகநன் னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள், 105

நடுக்கம்நீரெய்த நான் ஐம் முறையும்

பலியிடச் சென்றது, பாவனை மன்ற

என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்

ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்

நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே. 110

தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர்நீர்

என்பது தெளிந்தேன். என்கர வாளால்

அறுத்ததிங் கின்றைந் தாடுகள் காண்பீர்!

சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்

களித்ததென் நெஞ்சம் கழிந்தன கவலைகள்.” 115

குருகோ விந்தன் கொண்டதோர் தருமம்

‘சீடர்தம் மார்க்கம்’ எனப்புகழ் சிறந்தது

இன்றுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர்

காலசா’ என்ப ‘காலசா’ எனுமொழி்

முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது 120

முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று

ஐவரன் னோர்தமை அருளினன் ஆரியன்.

சமைந்தது ‘காலசா’ எனும்பெயர்ச் சங்கம்

பாரத மென்ற பழம்பெரு நாட்டினர்

ஆவிதேய்ந் தழிந்திலர், ஆண்மையிற் குறைந்திலர் 125

வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று

புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்.

அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர்

தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி

மண்மா சகன்ற வான்படு சொற்களால் 130

எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள்,

இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை

சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று

உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன்

ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த 135

முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து

சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்

சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம்

கொடுங்கோல் பற்றிய புன்கைக் குரிசிலர்

நடுங்குவ ராயினர். நகைத்தனள் சுதந்திரை. 140

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு

விக்கிர மார்க்க னாண்டினில், வியன்புகழ்க்

குருகோ விந்தன் கொற்றமார் சீடரைக்

கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன்

காண்டற் கரிய காட்சி! கவின்திகழ் 145

அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோ.

சூழ்ந்திருந்தனர் உயிர்த் தொண்டர்தா ஐவரும்

தன்திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி

மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்

கண்மணி போன்றார் ஐவர்மேற் கனிந்து 150

குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி

காண்டிரோ! முதலாங் `காலசா,” என்றனன்

நாடுந் தருமமும் நன்கிதிற் காப்பான்

அமைந்ததிச் சங்கம் அறிமின் நீர் என்றான்.

அருகினில் ஓடிய ஆற்றின் நின் றையன் 155

இருப்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து

வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி

மந்திர மோதினன் மனத்தினை அடக்கிச்

சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச்

சபமுரைத் திட்டான், சயப்பொருந் திருஅக் 160

கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்.

ஆற்றுநீர் தனையோ அடித்ததத் திருவாள்

அயர்ந்து போய்நின்ற அரும்புகழ் பாரதச்

சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி

நல்லுயிர் நல்கினன். நாடெலாம் இயங்கின. 165

தவமுடை ஐவரைத் தன்முனர் நிறுத்தி

மந்திர நீரை மாசறத் தெளித்து

அருள்மய மாகி அவர்விழி தீண்டினன்

பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால்

அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே 170

நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது!

சீடர்க ளனைவரும் தீட்சைஇஃ தடைந்தனர்.

ஐயன் சொல்வன், “அன்பர்காள்! நீவிர்

செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம்

அமிர்தம் என்று அறிமின்! அரும்பேறாம் இது 175

பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்.

நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்.

ஒன்றாம் கடவுள். உலகிடைத் தோன்றிய

மானிட ரெல்லாஞ் சோதரர் மானுடர்

சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர். 180

சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்

இக்கணந் தொட்டுநீர் யாவிரு ஒன்றே.

பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்.

ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி

வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும் 185

தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதியொன் றனையே சார்ந்தோ ராவிர்.

அநீதியும், கொடுமையும் அழித்திடுஞ் சாதி;

மழித்திட லறியா வன்முகச் சாதி; 190

இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும்

கையினில் வாளும் கழன்றிடாச் சாதி;

சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி;

அரசன் இல்லாது தெய்வமே யரசா

மானுடர் துணைவரா, மறமே பகையாக்

195

குடியர சியற்றுங் கொள்கையார் சாதி;

அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினைப் பொறுக்கிலீர் தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப்

புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!”

என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன் 200

அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்

குருகோ விந்தக் கோமகன் நாட்டிய

கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது

ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி.

—SUBHAM—

TAGS- அரங்கசீப் ஆட்சி, பாரதியார் பாடல், குருகோவிந்தர், குருகோவிந்த சிங் ,ஐந்து ஆடுகள் கதை,

Leave a comment

Leave a comment