கோலாகலமான கோவள குதூகலம் (Post No.14,515)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,515

Date uploaded in London – –15 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!

சுற்றுலா பயண இடங்கள்

கோலாகலமான கோவள குதூகலம்

ச. நாகராஜன்

கோவளம் தரும் குதூகலம்!

தூய்மையான காற்று, மனதை மயக்கும் தென்னை மரங்கள் சூழ்ந்த இயற்கைச் சூழ்நிலை, அற்புதமான கடற்கரைகள், ஆகியவற்றைக் கொண்ட கோவளம் அனைவரது பட்ஜெட்டிற்கும் ஏற்ற ஒரு சுற்றுலா பயண இடமாகும்.

கேரளத்தில் அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி வெளி நாட்டோர் விரும்பி வரும் இடமாகும்.

கோவளம் என்றாலேயே மலையாள மொழியில் தென்னந்தோப்பு பகுதி என்றே பொருள்.

 இது திருவனந்தபுரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல டாக்ஸி, கார் வசதிகள் உண்டு.

.கலங்கரை விளக்கக் கடற்கரை, ஹவா கடற்கரை, சமுத்திரக் கடற்கரை ஆகிய மூன்று அடுத்தடுத்த பிறை போன்ற கடற்கரைகளை இது கொண்டுள்ளது

 டைவிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான இடமாகும்.

 இங்குள்ள ஏராளமான பீச் ரிஸார்ட்களில் ஏதேனும் ஒன்றில் தங்கி இருந்தால் நிச்சயமாக சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தில் மிளிரும் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

கோவளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் பீச் அனைவரும் செல்ல விரும்பும் பிரசித்தமான ஒரு கடற்கரையாகும். 118 அடி உயரமுள்ள லைட் ஹவுஸ் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. 140 படிகள் ஏறி பார்வையாளர்கள் பார்க்கும் இடத்தை அடைந்தால் அங்கிருந்து ரம்யமான காட்சியைப் பார்க்கலாம்.

 இங்குள்ள மணல் விசேஷ தாதுக்களில் கலவையினால் உண்டான ஒரு விதமான கருப்பு நிற மணலாகும்,

 கோவள கடற்கரைக்குப் போட்டி போடும் விதத்தில் விழிஞத்துக்கு அருகே அற்புதமான காட்சிகளோடு இருப்பது பூவார் கடற்கரையாகும்,.

இங்கு நெய்யாறு அரபிக் கடலில் கலக்கும் காட்சி கண்ணைக் கவரும் ஒன்று.

 ஆயுர்வேதத்திற்குப் பெயர் பெற்ற இடமான திருவனந்தபுரத்தில் சௌவாரா கடற்கரையில் மசாஜ் உள்ளிட்டவற்றைச் செய்து கொள்வதோடு பல வியாதிகளைப் போக்கும் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளலாம். ஆயுர்வேத மையங்கள் பல அமைந்துள்ள பகுதி இது.

 கடற்கரையில் காற்று வாங்கிய பின் நிம்மதியாக அருகிலுள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள பார்க்க வேண்டிய பல இடங்களுக்கும் செல்லலாம்.

 பத்மநாபஸ்வாமி ஆலயம்

 விஷ்ணு எழுந்தருளியுள்ள பத்மநாபஸ்வாமி ஆலயம் வழிபாட்டுக்குரிய இடமாக அமைகிறது.  

108 வைணவ திவ்ய தலங்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள பத்மநாபசுவாமியின் மூல விக்கிரகம் 12008 சாளக்கிராமங்களால் ஆனதாக குறிப்பிடப்படுகிறது. இவை நேபாளத்தில் உள்ள கந்தகி நதியிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.

கர்பக்ருஹத்தில் உள்ள ஒரு கல் மேடை மேல் அமைந்துள்ள மூல விக்ரஹம் 18 அடி நீளத்திற்கு உள்ளது.

மூன்று வெவ்வேறு வாயில்களிலிருந்து இதை தரிசிக்கலாம். முதல் வாயிலில் தலையையும் மார்பையும் தரிசிக்கலாம். இரண்டாவது வாயிலில் கைகளும் மூன்றாம் வாயிலில் பாதங்களும் தரிசிக்கலாம். இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகளும் ஓவியங்களும் மனதைக் கவர்பவை.

இந்தக் கோவிலில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. சமீப காலத்தில் இவற்றைத் திறந்து பார்த்த போது ஏராளமான தங்க நகைகள், வைர வைடூரியங்கள் உள்ள பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் அதிக பணமுள்ள கோவிலில் இதுவும் ஒன்று என்பதை இந்த பாதாள அறைகள் உறுதிப்படுத்துகின்றன.

 மிருகக்காட்சி சாலை

திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலை மிகவும் பழமையான ஒன்றாகும். இங்கு விலங்குகள் கூண்டில் அடைக்கப்படாமல் இருப்பதால் இவற்றைப் பார்ப்பது இயற்கைச் சூழ்நிலையில் இவற்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும்.

 நேபியர் மியூஸியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு அருங்காட்சியகமான இதில் வெங்கலச் சிலைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழலாம். தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது இது.

 சித்ரா ஆர்ட் காலரி

நேப்பியர் மியூசியத்தை ஒட்டி அமைந்துள்ள சித்ரா ஆர்ட் காலரி பாரம்பரியமான கலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் கலையகமாகும்.

ஆகப் பெரும் ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுள்ளன. ராஜபுதன பாணி, பாலினீசிய பாணி, தஞ்சாவூர் பாணி உள்ளிட்ட பல வகை ஓவியங்களை இங்கு பார்த்து பரவசம் அடையலாம்.

 கனகக்குன்னு அரண்மனை:

இது திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள நேப்பியர் அருங்காட்சியகம் அருகே உள்ள அருங்காட்சியகமாகும்.

இது பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும் இடமாகும். பாரம்பரிய கலை விழா நடக்கும் போது சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து இதில் கலந்ஹது கொள்கின்றனர்.

இதைக் கட்டியவர் ஶ்ரீ மூலம் திருநாள் ஆவார்.

 குதிரை மாளிகை அரண்மனை

இது திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான ஒரு அரண்மனையாகும்

 .பத்மநாப சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளது இது.  இந்த மாளிகையில் கூரைப் பகுதிக்குக் கீழே 22 குதிரைச் சிற்பங்கள் உள்ளதால் இது குதிரை மாளிகை என்று அழைக்கப்படுகிறது.

 எண்பது அறைகள் கொண்ட இந்த மாளிகையில் இருபது அறைகள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான படைக்கலங்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள் உள்ளவற்றை இங்கு காணலாம. கேரள வரலாற்றை நன்கு அறிந்து கொள்ளலாம். இங்குள்ள மாடத்திலிருந்து பத்மநாப சுவாமி கோவிலைப் பார்த்து மகிழலாம்.

 பிரதான சாலையான மகாத்மா காந்தி சாலை ஷாப்பிங் செய்ய உகந்த இடமாகும்.

 பசுமை நகரம் என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்ட திருவனந்தபுரத்தில் பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.

வேலி லகூன், கரமண நதி, வெள்ளயானி ஏரி, கவுடியார் அரண்மனை உள்ளிட்ட இடங்களை நமக்குள்ள நேரத்தைப் பொறுத்து திட்டமிட்டுப் பார்க்கலாம்.

 கேரளத்தின் இந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் ஒருவர் மனதில் தோன்றும் எண்ணம்: “சும்மாவா சொன்னார்கள் இதை கடவுளின் சொந்த நாடு” என்று!

***

Leave a comment

Leave a comment