
Goddess Meenakshi coming out of Yaga Kunda.
Post No. 14,526
Date uploaded in London – 18 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-5
யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்
யாகம் செய்தால் குழந்தை பிறக்கும் என்ற செய்தி குறைந்தது மூன்று பெரிய நிகழ்ச்சிகள் மூலம் நமக்குத் தெரிகிறது
1.தசரத மாமன்னனுக்கு புத்திரப்பேறு இல்லாதபோது புத்ர காமேஷ்டி யாகம் செய்து ராமலெட்சுமண பரத சத்ருக்குனன் என்ற நான்கு குழந்தைகளை மூன்று மனைவியர் மூலம் பெற்றார் .
2.பாஞ்சால மன்னனான த்ருபதனுக்கு குழந்தைகள் இல்லாதபோது யாகம் செய்து திரவுபதியையும் சகோதரன் த்ருஷ்டத்யும்னனையும் பெற்றார்.
3.இதே போல பாண்டியநாட்டினை ஆட்சிசெய்த மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் குழந்தை இல்லாமல் தவித்தபோது ரிஷி,முனிவர்களின் சொற்படி யாகத்தைச் செய்தார்கள்; அந்தத் தடவில், அதாவது யாக குண்டத்திலிருந்து, மீனாட்சி என்ற பெண் அவதரித்தார் . அந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் ஒரு புதிய பிரச்சனையும் தோன்றியது ; பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று முலைகள் இருந்ததைக் கண்டு ராஜாவும் ராணியும் கவலையுற்றனர்; அப்போது ஒரு அசரீரி கேட்டது; இவள் மணம் முடிக்கும்போது — அதாவது உரிய கணவனைக் காணும்போது – மூன்றாவது முலை மறைந்துவிடும் என்று அசரீரி கூறியது .
****

Draupdi coming out of Yaga Kunda
அதை பரஞ்சோதி முனிவர் பாடிய பாடல்களில் காணலாம் :
மனு நீதிப்படி ஆட்சி ; தமிழ் சம்ஸ்க்ருதப் புலமை
மனுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு ணைக்குறையுள் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.
பொருள்
மலயத்துவசனென்பான், மனுதருமமானது மகிழந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன்; வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன்; சுவை முதிர்ந்த அமுதத்தைப் போலும், அருளுக்குத் தங்குமிடமானவன்; காண்டற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன்; வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் கடந்தவன் .
“தென்சொற் கடந்தான் வடசொற்கடற் கெல்லை தேர்ந்தான்”
எனக் கம்பர் ராமாயணத்தில் கூறுவது இங்கு நோக்கற் பாலது.
*****
சூரசேன மன்னன் புதல்வி காஞ்சனமாலா
வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமட வார்கள் பதி னாயிரிவ ருள்ளான்
வானொழுகு பானுவ வந்தொழுகு சூர
சேனன்மகன் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.
வேனிற்காலத்து வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்; காமப் பயிர் விளைகின்ற பூமியாகிய,
காமக் கிழத்தியர்கள் பதினாயிர வரை உடையவன்; வானிற் செல்லாநின்ற,சூரியன் மரபில் தோன்றி, அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, புதல்வியாகிய காஞ்சனமாலையை மணஞ்செய்தவன்.
நன் பொருள் விரும்பினை அதற்கு இசைய ஞாலம்
இன்புறு மகப்பேறு மகத்தினை இயற்றின்
அன்பு உறு மகப் பெறுதி என்று அமரர் நாடன்
தன் புலம் அடைந்திடலும் நிம்ப நகுதாரான்.
நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தால் தனது பதவி போய்விடுமென்று அஞ்சிய இந்திரன் மன்னனிடம் வந்து மகப்பேறு யாகத்தைச் செய்க என்றான்.
ஆசற மறைப் புலவர் ஆசிரியர் காட்டும்
மாசு அறு சடங்கின் வழி மந்திரம் முத்தாத்த
ஓசை அனுத்தாத்த சொரிதந்து அழுவ ஓதி
வாசவன் இருக்கையில் இருந்து எரி வளர்ப்பான்.
வைதீகர்கள் சொல்லியபடி உதாத்தம், அநுதாத்தம் ஒலிகளுடன் மந்திரங்களைச் சொல்லி நெய்யும் பொரியும் சமித்துகளும் தீயில் வார்த்து யாகம் செய்தான்.
வள்ளல் மலையத் துவசன் மீனவன் வலத்தோள்
துள்ள மனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ள எழு கொங்கைகள் ததும்ப நிமிர் தீம்பால்
வெள்ள மொழுகக்கு அரிய வேல் கணிட ஆட. 11
அந்த வேள்வியில் புகை ஆகாசமும் பூமியும் திசைகளும் பரவி போர்வை போல மறைத்தது. பின்னும் குடம் குடமாக நெய்யும் பொரியும் சமித்துக்களும் தேவர்க்குப் ப்ரீதியாக தேவாமிர்தம் போல ஆகுதி கொடுத்தான் . பரமசிவன் திருவாய் மலர்ந்தருளிய வாக்கியப்படியே நெய் நிரம்பப்பெய்து அக்கினியை அதிகப்படுத்தியபோது; காஞ்சனமாலா கொங்கைகள் ததும்பித் தீம்பால் வெள்ளம் பெருக்கவும் இடக்கண் துடித்தது .
530. இவ்வுலகம் அன்றியும் உலகு ஏழும் மகிழ்வு எய்தச்
சைவ முதல் ஆயின தவத் துறை நிவப்ப
ஓளவிய மறம் கெட அறம் குது கலிப்பத்
தெய்வமறை துந்துபி திசைப் புலன் இசைப்ப. 12
பாண்டிய நாடு மட்டுமின்றி எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி பெருகியது. சைவம் முதலிய தவ மார்க்கங்கள் உயர்ந்தன ; பாபங்கள் கெட்டு புண்ணியங்கள் வளர்ந்தன. தெய்வ வேதங்களும் தெய்வ துந்துபியும் திசை எல்லாம் முழங்கின. தேவ அரம்பையர் ஆடினார். மதுரை நகரில் உள்ளோர் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
531. மைம் மலர் நெடும் கண் அர மங்கையர் நடிப்ப
மெய்ம் மன மொழிச் செயலின் வேறு படல் இன்றி
அம்மதுரை மா நகர் உளர் ஆக மகிழ்ச்சி
தம்மை அறியாதன தலைத்தலை சிறப்ப. 13
Yaga Devata coming out of Putra Kameshti Yaga in Ramayana.
532. மாந்தர் பயின் மூவறு சொல் மாநில வரைப்பில்
தீம் தமிழ் வழங்கு திரு நாடது சிறப்ப
ஆய்ந்த தமிழ் நாட அரசளித்து முறை செய்யும்
வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை எய்த. 14
18 பாஷைகள் வழங்குகின்ற நாடுகளில் தமிழ் நாடு சிறப்படைய மூவேந்தர் ஆளும் நாடுகளில் பாண்டியநாடு மென்மேலும் பெருமை அடைந்தது. அக்கினிதேவன் இதுவரை செய்த தவத்தின் பயனை அடைந்தான்.
533. நொய் தழல் எரிக் கடவுள் நோற்ற பயன் எய்தக்
கொய் தளிர் எனத் தழல் கொழுந்து படு குண்டத்
தைதவிழ் இதழ்க் கமலம் அப்பொழுது அலர்ந்து ஓர்
மொய் தளிர் விரைக் கொடி முளைத்து எழுவது என்ன. 15
534. விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை
வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்
கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை
சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப. 16
535. தீங்கு தலை இன் அமுதம் மார்பின் வழி சிந்தி
ஆங்கு இள நிலா ஒழுகும் ஆர வடம் மின்ன
வீங்கு உடல் இளம் பரிதி வெம் சுடர் விழுங்கி
வாங்கு கடல் வித்து உரும மாலை ஒளி கால. 17
536. சிற்றிடை வளைந்த சிறு மென் துகில் புறம் சூழ்
பொன் திரு மணிச் சிறிய மேகலை புலம்ப
வில் திரு மணிக் குழை விழுங்கிய குதம்பை
சுற்று இருள் கடிந்து சிறு தோள் வருடி ஆட. 18
537. தெள் அமுத மென் மழலை சிந்து இள மூரல்
முள் எயிறு அரும்ப முலை மூன்று உடையது ஓர் பெண்
பிள்ளை என மூ ஒரு பிராய மொடு நின்றள்
எள் அரிய பல் உயிரும் எவ் உலகும் ஈன்றாள். 19
538. குறும் தளிர் மெல் அடிக்கிடந்த சிறு மணி நூபுர சதங்கை குழறி ஏங்க
நறும் தளிர் போல் அசைந்து தளர் நடை ஒதுங்கி மழலை இள நகையும் தோன்றப்
பிறந்த பெரும் பயன் பெறு பொன் மாலை மடி இருந்து ஒரு பெண்பிள்ளை ஆனாள்
அறம் தழுவு நெறி நின் றோர்க்கு இகம் போகம் வீடு அளிக்கும் அம்மை அம்மா. 20
மாந்தளிர்போல நெருப்பு வீசுகின்ற அந்த யாக குண்டத்தில் நெருங்கிய தளிர்களுடைய ஒரு வாசனைக்கொடி அநேக இதழ்களுடைய தாமரை மலர் முளைத்தெழுந்தது போல அம்மையார் தோன்றினார். தரும வழியில் செல்வோருக்கு இகபர சுகம் தரும் அவள் கொண்டையுடன் தோன்ற அதில் தொங்கிய முத்துமாலை சந்திரன் ஒளி போல இருந்தது . அவள் அணிந்த பவள மாலை சூரியப் பிரகாசத்தை வென்றது. இடையில் சிற்றாடையும் நவரத்தின மேகலையும் அசைந்தாடின ; காதிலணிந்த குண்டலமும் குதம்பையும் இருளை போக்கினை. அமுதம் போல மழலை சிந்த மூன்று வயதுள்ள பெண்பிள்ளை மூன்று ஸ்தனங்களுடன் தோன்றினாள். மெல்லடியில் அணிந்த சதங்கையும் சிலம்பும் ஒலித்தன ; உமையே பெண்ணாகத் தோன்றினாள்.
—subham—-
Tags– யாக குண்டம், மீனாட்சி, திரவுபதி , திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-5