ஞானமயம் வழங்கும்(18-5-2025) உலக இந்து செய்திமடல் (Post.14,532)

ஞானமயம் வழங்கும்(18-5-2025) உலக இந்து செய்திமடல்  (Post.14,532)

Written by London Swaminathan

Post No. 14,532

Date uploaded in London –  19 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

(Collected from Popular newspapers and edited for broadcast.)

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மே 18- ஆம் தேதி 2025-ம் ஆண்டு

*****

முதலில் வெளிநாட்டுச் செய்திகள்

கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்

வட அமெரிக்க நாடான கனடாவில் புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.

கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவை களமிறங்கியது. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

கனடா பிரதமர் மார்க் கார்னி, புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.

அனிதா ஆனந்த் பகவத் கீதை மீது கை வைத்து பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்(  57).

அனிதா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம்.

அனிதா ஆனந்த் கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா பஞ்சாபி சரோஜ்,  மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.

2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனார்.

* 2021ல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்தார்.

* இவர் குயீன்ஸ் பல்கலையில், இளநிலை அரசியல் கல்வி, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை சார்ந்த படிப்பு, டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டப்படிப்பு, டொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். இவர் 2019ல் அரசியலில் நுழைந்தார். இரண்டு சகோதரிகள் உள்ளனர்; அவர்களுடைய பெயர்கள் சோனியா, கீதா.

****

இனி வெளி மாநிலச்  செய்திகள்

10 லட்சம் முறை கோவிந்தா நாமம் – திருப்பதி திருமலையில் 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம்!

திருப்பதி திருமலையில் 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வந்த இளம் பெண் உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.

இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின் மீதான பக்தியை வளர்க்கவும், 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வரும் 25 வயதுக்குட்பட்ட பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் எனத் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்தா நாமம் எழுதி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டுள்ளது.

****

ராகுலுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் அண்மையில் உரையாற்றிய ராகுல் காந்தி ராமர் ஒரு புனைக்கதை கதாப்பாத்திரம் என்று கூறினார்.

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து மத நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தியதாகப் பலரும் குற்றம் சாட்டினர்.

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் MAY 19-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

*****

இனி தமிழ்நாட்டுச் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத நிறைவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்திரை மாத நிறைவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினார்கள்.

பின்னர் அவர்கள் அங்கு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்த புரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை அடைந்தார்கள்.அங்கு பஜனை, பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மீக சொற்பொழிவைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் ரேகா தவே குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.

***

கோனேரிராஜபுரத்தில் பரதம் ஆடி உலக சாதனை

மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 பரதநாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்து நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்தனர்.

நடராஜர் ஆலயம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜர் கோவில் தான். ஆனால் நடராஜர் சுயம்புவாக, உயிரோட்டமுள்ள திருமேனியாக காட்சி தரும் தலம் ஒன்று உள்ளது. அது தான் கோனேரிராஜபுரம். பலரும் அறிந்திடாத இந்த கோவிலில் நடராஜரின் திருமேனி, உளி கொண்டு செதுக்கப்படாதது. இதில் நகரங்கள், ரோமங்கள், நரம்புகள் உள்ளிட்டவைகள் மனித உடலில் இருப்பது போலவே காட்சி தரும். அதே போல் மன்னர் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்பும் நடராஜரின் வலது காலில் இன்றும் இருக்கும்.

இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலம்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள கோனேரிராஜபுரம் திருக்கோவில். இங்கு, தில்லை அம்பலம் என்ற பெயரில் மே 12ம் தேதி மாலை 4 மணிக்கு, மாபெரும் பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடைபெற து.

இங்கு ஐந்து உயர ஐம்பொன்னாலான நடராஜர் அருள்பாலிக்கிறார். 

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சி மொரைஸ் நகரில் இதேபோன்ற பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

****

ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் பண்பு பயிற்சி முகாம்

செங்கல்பட்டு அருகே ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

ராஷ்டிர சேவிகா சமிதி சார்பில் இந்து மகளிருக்குப் பண்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டு அண்ணா நகரில் இயங்கி வரும் சுனிலால் ஜெயின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஏப்ரல் 30ஆம் தேதி பண்பு பயிற்சி முகாம் தொடங்கியது.

15 நாட்களாக நடைபெற்ற முகாமில் 16 பிராந்தியங்களைச் சேர்ந்த 75 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

இறுதி நாள் நிகழ்ச்சியில் பெண்கள் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைச் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை சாரதா ஆசிரமம் பூஜினிய ஸவாமினி கிருஷ்ண பெரியாம்பா, மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

****

கண்ணகி கோயில் தொடர்பாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை

கண்ணகி கோயில் தொடர்பான பிரச்னை குறித்து இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், கூடலூர் அருகே விண்ணேற்றிப்பறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி முழுநிலவு திருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

வண்ணத்திப்பாறை பகுதிக்கு இரு மாநிலம் உரிமை கொண்டாடுவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், கண்ணகி கோயில் பிரச்சனை தொடர்பாக இருமாநில அரசும் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

****

கோபியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்கள் பயிற்சி முகாம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங்கள் பண்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற இளைஞர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை நிர்வாகிகள் முன்னர் செய்து காண்பித்தனர்.

கோபிசெட்டிபாளையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இளைஞர்களுக்கான பஜ்ரங்கள் பண்புப் பயிற்சி முகாமும், பொறுப்பாளர்களுக்கான பரிஷத் முகாமும் தொடங்கியது.

இதில் பங்கேற்ற இளைஞர்களுக்கு தியானம், பிரார்த்தனை, சிலம்பம், கராத்தே, யோகா, வில்வித்தை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் நிறைவு நாளான புதன்கிழமையன்று விஷ்வ இந்து பரிஷத்தின் வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, வட தமிழக பஜ்ரங்கள் பொறுப்பாளர் கிரண், மாநில அமைப்பு செயலாளர் ராமன் ஆகியோர் முகாமுக்கு வருகை தந்தனர். அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.

******

சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்

சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக இரு தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், மண்டல ஐஜி மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் சாதிய பாகுபாடு தொடர்பாக எந்தவித புகார்களும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாவது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன் இந்த விவகாரத்தில் அரசு அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து இதே நிலை தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் எனவும்,  விரைவில் இந்த வழக்குகளில் உரிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

****

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.

அப்போது சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் ஏன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் மற்றும் சம்பவம் நடந்த இடத்தின் மே 4 முதல் 7-ம் தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

******

பிரதமர் மோடி, இந்திய ராணுவம் நலமுடன் இருக்க சிறப்பு பிரார்த்தனை!

.பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி கோட்டி விஷ்ணு நாம பாராயண கமிட்டி சார்பில் கோவையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி, விஷ்ணு நாம பாராயண  கமிட்டி சார்பில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.

மேலும் இதில் முன்னாள் கர்னல் சதீஷ்குமார் மற்றும் ராணுவத்தில் பங்காற்றியவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

*****

மதுரை சித்திரைத் திரு விழா நிறைவு ;அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்!


திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் என்னும் கள்ளழகர்.,   திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார்.

சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றில் எழுந்தருள மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10ஆம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 13ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

மே 14ல் மோகன அவதாரத்தில் பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. மே 15ல் பூப்பல்லத்தில் எழுந்தருலினார்

பின்னர் கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இந்த விழாவில் ,ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் நேற்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார்.

கள்ளர் திருக்கோலத்தில் அழகர்கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு வண்ணமலர்கள் தூவி வரவேற்பு அளிக்கபப்ட்ட தோடு, கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றி 21 திருஷ்ட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் மீனாட்சி கோவிலில் பத்து நாட்களுக்கு நடந்த விழாவில் மீனாட்சி கல்யாணம், தேரோட்டம் முதலியன நடந்தன. ஆக சிவன் , விஷ்ணு கோவில் இரண்டிலும் நடக்கும் விழாவினை சித்திரைத் திருவிழா என்று அழைப்பார்கள்

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் முதல் தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

மே மாதம் 25ஆம் தேதி ஒளிபரப்பு இல்லை என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறோம்.

வணக்கம்.

—SUBHAM—-

Tags, Gnanamayam News, 18 5 25, Broadcast ஞானமயம், உலக இந்து செய்திமடல் .

Leave a comment

Leave a comment