Post No. 14,531
Date uploaded in London – 19 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய அதர்வண வேதம்! வேத விற்பன்னருக்கு சிறைத் தண்டனை !
Shripad Damodar Satwalekar (19 September 1867 – 31 July 1968)
श्रीपाद श्रीदामोदर सातवळेकर
101 ஆண்டுகள் வாழ்ந்து வேதத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஸ்ரீபாத அம்ருத சாத்வலேகர் பற்றிய சில சுவையான செய்திகளைக் காண்போம்.
இவர் இந்தி மொழியில் இந்து மத வேதங்களைப் பற்றி பல நூல்களை எழுதினார் ; சொற்பொழிவுகள் மூலம் சாதாரண மக்களுக்கும் வேதத்தின் சாரம் தெரியவேண்டும் என்று பாடுபட்டார் ; வெறும் வேத அறிஞர் மட்டுமல்ல ஓவியரும் கூட .
வேதங்களைப் பற்றி அவர் பத்திரிக்கைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்; அதர்வண வேதத்தில் பூமி சூக்தம் என்ற அற்புதமான கவிதை உள்ளது ; உலகில் வேறு எந்த மொழியிலும் இதற்கு நிகரான தேச பக்திக் கவிதை இல்லை! அதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ! தாய் நாடு -தேச பக்தி பற்றி எவ்வளவோ கவிதைகளை- குறிப்பாக பாரதியார் போன்றோர் கவிதைகளை நாம் இன்று படிக்க முடிகிறது . சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமித் தாயை வணங்கிய முதல் மனிதர் அதர்வண வேதப் பூமி சூக்தத்தை எழுதியவர்தான்! (பூமி சூக்தம் பற்றி பல தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளை இந்த ‘பிளாக்’கில் நான் எழுதியுள்ளேன்).
****
சாத்வலேகர் , நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதர்வண வேத பூமி சூக்தத்தை வெளியிட்டு அதற்கு விளக்கங்களையும் இந்தி மொழியில் எழுதியிருந்தார் . இதன் மொழிபெயர்ப்பினை அறிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் நடுங்கினர் . பாரதி பாடல்களைக் கண்டு நடுங்கியது போல் ! உடனே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் . ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர் .
பின்னர் அன்னி பெசன்ட் அம்மையார் போன்ற பலர் தலையிட்டு சாத்வலேகரை விடுதலை செய்தனர் . வாழ்நாளில் பெரும்பகுதியை வேதம் பற்றி பாமர மக்களுக்கு சொல்வதையே தம் பணியாகக் கொண்டார் . பிரிட்டிஷாரின் தொல்லைக்கு அஞ்சி நகரம் நகரமாக ஓடி ஒளிந்து வாழ நேரிட்டது ; இதிலும் இவர் நம்மை பாரதியாரை நினைவுபடுத்துகிறார்.
பாரதி பாடல் புஸ்தகக்ங்களை பிரிட்டிஷார் கைப்பற்றியவுடன் அனல் பறக்கும் சொற்பொழிவினை மதராஸ் மாகாண அசெம்பிளியில் அறிஞர் சத்திய மூர்த்தி ஆற்றிய உரையை முன்னரே இங்கே எழுதியுள்ளேன் .
****
அறிஞர் சாத்வலேகரின் வாழ்க்கைக் குறிப்பினைக் காண்போம்:
பிறந்தது — மகாராஷ்டிரத்தில் கோல்காவன் என்னும் இடம் .
தந்தையின் பெயர்- தாமோதர பட்ட, தாயின் பெயர் லட்சுமி பாய். தாமோதர பட்ட ரிக்வேத அறிஞர், புரோகிதர்; அவரிடமிருந்து சாத்வலேகரும் சிறு வயதிலேயே வேதம் கற்கத் துவங்கினார் .இவர் வாழ்நாளில் பாகிஸ்தானின் லாகூர், மூல்தான் முதல் பம்பாய், ஹைதராபத், ஆமதாபாத் பரோடா, நாசிக் மஹாராஷ்டிரத்தின் பல்வேறு நகர்கள் வரை வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்தார்.
வேதத்தில் உள்ள ஒரு மந்திரத்தை பிராமணர்கள் தினமும் சொல்கிறார்கள்; அதில் நூறு ஆண்டுக் காலம் வாழ்க என்று வரி உள்ளது; வேத வாழ்வைக் கடைப்பிடித்த சாத்வலேகர் அதன்படி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார் . நானூறு புஸ்தகங்களுக்கு மேல் எழுதினார்; கைப்பட எழுதிய பெரிய அளவு காகிதங்கள்- 60,000 பக்கங்கள்!

Satvalekar painting
****
ஆர் எஸ் எஸ் தலைவர்
ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த சரஸ்வதியால் ஊற்றுணர்ச்சி பெற்ற இவர் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சேர்ந்து பதினாறு ஆண்டுகளுக்கு அவுந்த் நகர (சதாரா ஜில்லா, மஹாராஷ்டிர மாநிலம்) சங்கசாலக் பொறுப்பில் இருந்தார் ; இவரது நூற்றா ண்டு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கர் கலந்து கொண்டார்.
எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் சாத்வலேகரின் சம்ஸ்க்ருத, வேத, ஆயுர்வேத, யோகாசன தொண்டினைப் பாராட்டி அவர் இருப்பிடத்துக்கு வந்தனர். திருமதி இந்திராகாந்தி ,மொரார்ஜி தேசாய் உள்படப் பலரும் வந்தனர்; அவர் சுவாத்தியாய மண்டல் என்ற அமைப்பினை நிறுவி இந்தப் பணிகளைச் செய்தார்; வேத மந்திர் என்ற கோவிலைக் கட்டி எல்லா மத நூல்களையும் அங்கே வைத்தார்.
இவருக்கு நிறைய நிறுவனங்கள் டாக்டர் பட்டத்தை அளித்தன. அரசாங்கத்தின் பத்ம பூஷன் விருதும் கிடைத்தது .
இவர் வெளியிட்ட முக்கிய நூல்கள் – ரிக்வேத சம்ஹிதை, சுபோத பாஷ்ய, சம்ஸ்க்ருத ஸ்வயம் சிக்ஷக் , இந்தி மொழி உரையுடன் அதர்வண வேதம், பகவத் கீதை பேருரை, மஹாபாரத மொழிபெயர்ப்பு .
இவர் வெளியிட்ட சம்ஸ்க்ருத ஸ்வயம் சிக்ஷக் நூலும் பகவத் கீதை உரையும் இன்று வரை வரவேற்பினைப் பெற்று வருகிறது.
குஜராத்தில் கில்லாபார்தி என்னும் இடத்தில் வேத ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்தார்; அதைத் துவக்கும் போது அவருடைய வேண்டுகோளுக்கிணங்கக நாடு முழுதும் கோடி காயத்ரீ மந்திரத்தை மக்கள் உச்சரித்தனர் அவரும் காயத்ரீ ஹோமத்துடன் தனது நிறுவனத்தைத் துவக்கினார் .
சம்ஸ்க்ருதத்தில் சாயனர் எழுதிய வேத பாஷ்யத்தைத்தான் பெரும்பாலோர் பின்பற்றுகின்றனர்; அதே போல இந்தி மொழியில் 4 வேதங்களுக்கு சாத்வலேகர் எழுதிய உரையும் புகழ் பெற்றது.
****
ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்
அதர்வ வேத பூமி சூக்த உரைக்காக இவர் சிறையில் இருந்தபோது ஒரு ஆங்கிலேய அதிகாரி சிறையை மேற்பார்வையிட வந்தார் . விலங்கும் சிறைக்கு கம்பிகளும் உங்களைத் துன்புறுத்துகின்றனவா? என்று பேச்சுவாக்கில் கேட்டார் . அவை என் உடம்புக்கு அப்பால்தானே இருக்கின்றன எப்படி துன்புறுத்த முடியும்? என்று சாத்வலேகர் பதில்கொடுத்தார் ஆங்கிலேய அதிகாரி அப்படியே திகைத்து நின்றார். சாத்வலேகர் ஒரு யோகியாக வாழ்ந்தார்.
புருஷார்த்த போதினி என்று ஆங்கில மொழியில் இவர் வெளியிட்ட பகவத் கீதை உரை இன்றுவரை மிகவும் வாசிக்கப்படுகிறது
குஜராத்தி, மராத்தி, இந்தி, ஆங்கில மொழி களில் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதினார் .ஓவியங்களுக்காக இரண்டு முறை தங்கப்பதக்கமும் பெற்றார்
இவரது வேத விளக்கங்கள் ஆணித்தரமாகவும் தர்க்கரீதியிலும் பாமர மக்களுக்குப் புரியும் விதத்திலும் உள்ளது
—SUBHAM—
TAGS-
அதர்வண வேதம், பூமி சூக்தம், ராஜத் துரோகம் சிறைத் தண்டனை, சாத்வலேகர், ஸ்வாத்யாய மண்டல் ,வேத மந்திர்