அமைதியின் உறைவிடம் பீஹார்! (Post No.14,534)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,534

Date uploaded in London – –20 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-5-25 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

அமைதியின் உறைவிடம் பீஹார்! 

ச. நாகராஜன் 

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம் பீஹார். பழைய காலத்தில் மகதம் என்று இது அழைக்கப்பட்டது. 

இந்துக்களுக்கு மிக முக்கியமாக அமைவது கயா  திருத்தலமாகும். இதுவே புத்தமதத்தினருக்கும், ஜைன மதத்தினருக்கும் கூட மிக முக்கியமான திருத்தலமாகவும் திகழ்கிறது.

 இத்திருத்தலம் பீகார் மாநிலத்தில் அதன் தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோ  மீட்டர் தெற்கில் உள்ளது. கல்கத்தா- வாரணாசி செல்லும் ரயில் பாதையில் கயா ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

 மூலவர் : கதாதரர்

தீர்த்தம் : ராமாயணத்தில் நிரஞ்சனா என்று குறிப்பிடப்படும் பல்குனி நதி

தல விருட்சம் : அட்சய வடம் எனப்படும் ஆலமரம்

இந்தத் தலத்தைப் பற்றிய முக்கியமான புராண வரலாறு ஒன்று உண்டு.

 முன்பொரு காலத்தில் கயாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மா, சிவன் ஆகியோருடைய சரீரங்களை விடத் தனது சரீரம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவன் வேண்டினான். அதன் படியே அவன் பரிசுத்தமாக ஆனான். இதனால் அவன் யாரைத் தொட்டாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைய ஆரம்பித்தனர். அவனால் பாவிகளும் கூட ஏராளமானோர் சொர்க்கத்திற்குச் செல்லவே தேவர்கள் விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தித்து இதற்கு ஒரு தீர்வைத் தருமாறு வேண்டினர். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா ஒரு யாகத்தை கயாசுரனின் சரீரத்தின் மீது செய்தார். யாகத்திற்கு பிரம்மாவும் சிவனும் வந்திருந்தனர்.

அக்னியின் சூடு அந்த அசுரனை ஒன்றும் செய்யவில்லை. யமனை அழைத்து அவனை எழுந்திருக்காதபடி செய்ய முயன்ற போதும் அவன் தலை ஆடியது. யமனின் மகன் அந்தத் தலை மீது காலால் அமுக்கியபோதும் உடல் அசைவு நிற்கவில்லை.

விஷ்ணு நேரில் பிரத்யட்சமாகி அசுரன் தலை மேல் தன் பாதத்தை வைத்தார். அத்துடன் அவன் தலை ஆடாமல் நின்றது. யாகமும் பூர்த்தியாயிற்று.

 இங்குள்ள கோவில் விஷ்ணுவின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதாளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவே இந்த விஷ்ணு பாதம் ஆகும்.

இது கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்கு உள்ளது. எண்கோண வடிவில் அமைந்த இந்த கோவில் 30 மீட்டர் உயரமும் எட்டு அடுக்குகளும் கொண்டதாகும்.

 அசுரனின் பிரார்த்தனையின் படி மும்மூர்த்திகளும் அனைத்து தேவதைகளும் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ள அட்சய வடத்தில் திதியை முடிப்பவர்களுக்கு முக்தி நிலையைக் கொடுக்க வேண்டும் என்ற கயாசுரனின் வேண்டுதலும் அருளப்பட்டது.

ஆகவே இங்கு சிரார்த்தம் செய்தால் ஏழு தலைமுறை பித்ருக்கள் மோக்ஷம் அடைவார்கள் என்பது ஐதீகம். ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் இங்கு வந்ததையும் ராமர் தசரதருக்கு பிண்ட தானம் கொடுத்ததையும் ராமாயணன் குறிப்பிடுகிறது

 இங்கு வருபவர்கள் காமம், கோபம், மோகம் ஆகிய மூன்றையும் விட வேண்டும் என்பது ஐதீகம். அட்சய வடத்தில் சிரார்த்தம் செய்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குப் பிடித்த ஒரு காய் அல்லது பழம் போன்ற எதையாவது விட்டு விடுதல் வேண்டும். இந்த உறுதி மொழியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.

இங்குள்ள அட்சய வடத்தின் வேர்ப்பகுதி பிரயாகையிலும் நடுப்பகுதி காசியிலும் உச்சி மரக்கிளை கயாவிலும் இருப்பதாக ஐதீகம். இதை மூலம் – மத்யம் – அக்ரம் என்று குறிப்பிடுவது வழக்கம்.

 இது உயரமான ஒரு இடத்தில் இருப்பதால் படிகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். அங்குள்ள கிணறு ஒன்றில் குளிக்கலாம்; கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

 புத்த கயா 

கயாவிலிருந்து புத்தகயா பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது

 புத்த மதம் தொடங்கிய இடம் புத்த கயா ஆகும். இங்குள்ள போதிமரத்தடியின் கீழ் அமர்ந்து புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்றார். புத்தர் ஞானம் பெற்ற நாள் புத்த பூர்ணிமா தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 புத்த கயாவில் போதி விருட்சம் எனப்படும் அரச மரம் உள்ளது.

இங்கிருக்கும் புத்தர் கோவில் 185 அடி  உயரம் கொண்டது. இங்குள்ள போதி விருட்சத்தின் அடியில் புத்த பிட்சுக்கள் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பது பாரம்பரியப் பழக்கமாகும். இந்த மரத்திலிருந்து உதிரும் இலைகளே இங்கு வழங்கப்படும் பிரசாதமாகும். இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மரப்பலகை மீது நமஸ்கரித்து அனைவரும் வணங்குகிறார்கள்.

இங்குள்ள பிரகாரத்தைச் சுற்றி மணி மகுட அமைப்புகள் உள்ளன. புத்தரின் வாழ்க்கை வரலாறு இங்கு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள உருளைகளைச் சுற்றினால் செய்த பாவம் போகும் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை.

இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தாய் மடாலயம், முச்சலிண்டா ஏரி, பல்கு நதி, பிரம்மயோனி கோவில், சங்கமனா, சீனக் கோவில். வியட்நாம் கோவில் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. இவற்றிற்கும் அனைவரும் செல்வது வழக்கம்.

நாலந்தா பல்கலைக்கழகம்

 கயாவிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நாலந்தா.

 800 வருடங்களுக்கும் மேலாக கல்வி அளித்து வந்த நாலந்தா பல்கலைக் கழகம் உலகெங்கிலுமிருந்து மாணவர்களை ஈர்த்த பிரம்மாண்டமான பழம்பெரும் கல்வி நிலையமாகும்.

 இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாகும்.

 இங்குள்ள நாலந்தா அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் புத்தமதம் சம்பந்தமான அனைத்து நூல்கள் உள்ளிட்டவற்றைக் காட்சிப் படுத்துகிறது.

 ஹுவான்சுவாங் நினைவகம்

பிரபல சீன யாத்ரீகரான யுவான் சுவாம் ஏழாம் நூற்றாண்டில் இங்கு வந்ததை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்த நினைவகம்.

 சூரியன் கோவில்

நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த இடத்திற்கு அருகில் சூரியனுக்கான கோவில் ஒன்று உள்ளது. கட்டிடக் கலையின் உன்னதத்தைக் காட்டும் சிதிலமடைந்த கோவில் இது.

 குண்டல்பூர்

 நாலந்தாவிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் குண்டல்பூர் அமைந்துள்ளது. இங்கு தான் ஜைன மத நிறுவனரான மஹாவீர் அவதரித்தார். 11 அடி உயரமுள்ள மஹாவீரரின் சிலை இங்கு அமைந்துள்ளது. கோவிலின் உயரம் 101 அடியாகும்.

இந்தக் கோவிலுக்கு இரு புறமும் ரிஷப்தேவ் கோவிலும் த்ரிகால் சௌபிசி கோவில்களும் உள்ளன.

 பாவாபுரி 

பாவங்களே இல்லாத நகர் என்ற பெயரைக் கொண்ட பாவாபுரி பாட்னாவிலிருந்து 95 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு தான் ஜைன மதத்தை நிறுவிய பகவான் மஹாவீர் சமாதி அடைந்தார். அழகிய குளமும், குளத்தின் நடுவில் கோவிலும் உண்டு. இங்கு மஹாவீரரின் பாதச்சுவடுகள் உள்ளன. 

சாரிபுத்திரர் ஸ்தூபி

நாலந்தா ரயில் நிலையத்தின் அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சரிபுத்ரா ஸ்தூபி. இதை நாலந்தா ஸ்தூபி என்றும் அழைப்பதுண்டு. இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாகும்.

பிரமிட் போல இதன் மேற்புறம் அமைந்துள்ளது. கிமு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னனால் நிறுவப்பட்டது இது.

 கௌதம புத்தரின் முக்கியமான பத்து சீடர்களுள் ஒருவர் சாரிபுத்திரர்.

 புத்தபிரான் மஹாநிரிவாணம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சாரிபுத்திரர் தான் பிறந்த நாலந்தாவிலேயே கார்த்திகை மாத பௌர்ணமி அன்று பரிநிர்வாணம் அடைந்தார். அவரது எலும்புகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏழு அடுக்கு கொண்டது இந்த ஸ்தூபி, இங்கு புத்த மதத்தின் புனித நூல்களின் உபதேசங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

 ககோலாட் நீர்வீழ்ச்சி

புத்த கயாவிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ககோலாட் நீர்வீழ்ச்சி. உலகெங்கிலுமிருந்து பயணிகள் விரும்பி வரும் இடம் இது. சுமார் 160 அடி உயரத்திலிருந்து விழும் நீர் கீழே ஒரு நீர்த்தேக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதைப் பற்றிய பழைய புராண வரலாறு ஒன்று உண்டு.

திரேதா யுகத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் மலைப்பாம்பாக போகும்படி சபிக்கப்பட்டான். அவன் இந்த நீர்வீழ்ச்சியில் வாழ்கிறான் என்பது ஐதீகம்.

 பாண்டவர்கள் வனவாச காலத்தில் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதனால் பாம்பாக இருந்த மன்னன் சாப விமோசனம் பெற்றான். ஆகவே இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பவர்கள் ஒருபோதும் பாம்பாக பிறவி எடுக்க மாட்டார்கள் என்று அந்த மன்னன் உறுதி கூறியதாகவும் வழிவழி கதை கூறுகிறது.

 இப்படி பீஹார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் சுமார் 150 சுற்றுலா இடங்கள் உள்ளன. பாட்னா உள்ளிட்ட இடங்களிலிருந்து சுற்றி உள்ள பல மாநிலங்கள் அருகிலும் இவை அமைந்துள்ளன என்பதால் முதலிலேயே நல்லதொரு சுற்றுலா திட்டத்தை வகுத்துக் கொள்வது இன்றியமையாதது.

 ஆன்மீக யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கயாவே மையத் தலமாக அமையும்.

**

Leave a comment

Leave a comment