
Post No. 14,539
Date uploaded in London – 21 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மலைகளில் சிறந்தது மேரு, மனிதர்களில் சிறந்தோர் பிராமணர்: பரஞ்சோதி முனிவர்-6
பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி!
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-6
திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் புதிய செய்திகளையோ , மேற்கோள்களையோ நமக்கு அளிக்கிறார்; மூர்த்தி விசேஷப் பகுதியில் உயர்ந்தது எது என்று சொல்லி விட்டு சிவனை எந்த நேரத்தில் தரிசித்தால் நல்லது ? என்ன என்ன கிடைக்கும்? என்று ஒரு பட்டியல் தருகிறார் . பின்னர் எதை எதைக் கொண்டு பூஜித்தால் என்ன என்ன பலன் கிடைக்கும் என்று இன்னும் ஒரு பட்டியல் தருகிறார்; இறுதியில் மதுரையிலுள்ள சிவ பெருமானுக்கு என்ன என்ன பெயர்கள் என்ற பட்டியலையும் தருகிறார் .
இதோ அந்த செய்திகள்.
பட்டியல் 1
பொருப்பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடூமி
மேரு
தருக்களிற் றலைமை சாருந் தண்ணறுந் தெய்வ தாரு
விருப்புறு வேள்வி தம்முண் மேம்படும் புரவி மேதம்
அருட்படு தானந் தம்முள் விழமிதா மன்ன தானம்.
பொருள்
நீண்ட சிகரங்களையுடைய மலைகளுக்குள் ,
பொன்னாகிய மேரு மலையானது முதன்மை உடையது;
மரங்களுள் குளிர்ந்த கற்பகத்தரு. முதன்மை பெறும். ; வேள்விகளுள், அஸ்வமேத யாகம் உயர்வாகும்;
தானங்களுள், அன்னதானம் சிறந்ததாகும்
****
மனிதரி லுயர்ந்தோ ராதி மறையவர் தேவர் தம்மிற்
பனிதரு திங்கள் வேணிப் பகவனே யுயர்ந்தோன்
வேட்டோர்க்
கினிதருள் விரதந் தம்மு ளதிகமா மிந்து வாரம்
புனிதமந் திரங்க டம்முட் போதவைந் தெழுத்து மேலாம்.
பொருள்
மக்களுள் முதன்மையான மறையவர் மேலோராவர்; தேவர்களுள், குளிர்ந்த சந்திரனை யணிந்த சடையை யுடைய, சிவபெருமானே
உயர்ந்தவன்; விரும்பினவர்களுக்கு, நலத்தைச் செய்கின்ற, விரதங்களுள், சோமவார விரதம் சிறந்தது ஆகும்; தூய மந்திரங்களுள், ஞானத்திற்கு ஏதுவாகிய திருவைந்தெழுத்தாகிய நமசிவாய மந்திரம் மேன்மையுடைய தாகும்’
*****
மின்மைசான் மணியிற் சிந்தா மணிவரம் விழுப்ப நல்கும்
தன்மைசா லறங்க டம்மின் மிகுஞ்சிவ தரும மென்ப
இன்மைசா னெறிநின் றோருக் கேற்குநற் கலங்க* டம்மின்
நன்மைசான் றவரே முக்க ணாதனுக் கன்பு பூண்டோர்.
பொருள்
ரத்தினங்களில் சிந்தாமணி மேன்மையானது; உயர்வைக் கொடுக்குந் தருமங்களுள், சிவதருமம் உயர்ந்தது; இல்லற நெறியில் நின்ற நல்லவர் – முக்கண் இறைவனிடத்தில் (சிவன்) அன்பு பூண்டவரே. (சிந்தாமணி – சிந்தித்தவற்றைத் தரும் மணி)
****
தீயவாங சுவைப்*பா லாவிற் றேவரா வதிகம் பல்வே
றாயமா தீர்த்தந் தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம்
மாயமா சறுக்க வெல்லாத் தலத்திலும் வதிந்து மன்னுந்
தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும்.
பொருள்
இனிமையான சுவையையுள்ள பாலையுடைய பசுக்களுள்,
காமதேனு உயர்ந்தது; பல வேறு வகையாகிய, தீர்த்தங்களுள், பொற்றாமரை சிறந்தது; பந்தமாகிய பற்றினை நீக்கவல்ல சிவலிங்க மூர்த்திகளுள், சோம சுந்தரக் கடவுள் சிறந்தவன் .
****
இத்தனிச் சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ
மெல்லாங்
கொத்தழற் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோற் கோப மூள
மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு
நோய்போல்
உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல்.
****
எந்த நேரத்தில் சிவ பெருமானை வழிபடவேண்டும்?
புலரியிற் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால்
அலைகட னான்குட் பட்ட வவனிமா தானஞ் செய்த
பலனுறுங் கதிகா லுச்சி வைகலிற் பணியப் பெற்றால்
கலைஞர்பா பத்துக் கபிலைமா தானப் பேறாம்.
பொருள்
விடியற்காலையில், சோமசுந்தரக் கடவுளை, தரிசனம் செய்தால், பெரிய பூமியைத் தானம் கொடுத்த பலன் கிடைக்கும் ; உச்சிப் போதில், வணங்கினால் வேதம் முதலிய கலைகளை யுணர்ந்த அறிஞர்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தானஞ் செய்தபலன் கிடைக்கும்.
****
விண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கு
மெல்லை
அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறாம்
பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்
வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும்.
பொருள்
சூரிய தேவன், மேலைக் கடலில் மூழ்கும் அந்திப்பொழுதில், சோமசுந்தரக் கடவுளைப் பணிந்தால், கோடி பசுக்கூட்டங்களைத் தானஞ்செய்த பயன் எய்தும்; தேவர்கள் வணங்கும் அரையிருளில், (அர்த்தஜாம பூஜை) வணங்கினால் அஸ்வமேத வேள்வியைச் செய்த பலன் கிடைக்கும்
*****
சிவன் பெயரைக் கேட்டால், சொன்னால்……..
அறவுருவ னாலவா யானாமஞ்
செவிமடுத்தா லடைந்த பத்துப்
பிறவிவினை யறுநினைந்தா னூறுபெரும்
பவப்பாவப் பிணிபோங் கூடல்
இறைவனையின் றிறைஞ்சுதுமென் றெழுந்து
மனைப்புறம்போந் தாலீரைஞ் ஞூறு
மறமுறுவெம் பவத்திழைத்த பாதகவல்
வினையனைத்து மாயு மன்னோ.
பொருள்
தரும வடிவினனாகிய திருவாலவாய்க் கடவுளின்
பெயரைச் செவியிற் கேட்டால்,10 பிறப்புக் களிலெய்திய வினைகள் கெடும்; சிந்தித்தால், 100 பிறவிகளிற் செய்த,
பெரிய பாவமாகிய நோய் ஒழியும்;
மதுரையில் எழுந்தருளிய கோவிலுக்கு வந்தால்,
1000 கொடிய பிறவிகளிற் செய்த வினைகளெல்லாம் அழியும் .
****
புழைக்கைவரை தொலைத்தானைத் தரிசித்தோ
ராயிரவாம் புரவி வேள்வி
தழைத்தபெரும் பயன்பெறுவ ருருத்திரசூத்*
தம்மதனாற் றவவா னோர்கள்
தொழற்கரியான் றனைத்துதித்தோர் கணத்துக்கா
யிரராச சூய யாகம்
இழைத்தபெரும் பயன்பெறுவர் சமட்டிவடி
வாகியவவ் விலிங்கந் தன்னை.
பொருள்
யானையைத் தொலைத்த (கஜ சம்ஹாரம்) சோம சுந்தரக் கடவுளை, தரிசித்தோர் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள் ; தவத்தினையுடைய தேவர்களும், வணங்குதற்கு அரியவனை, ருத்திர சூத்த மந்திரத்தால் துதித்து வணங்கியவர்கள்,
ஆயிரம் இராச சூய வேள்வி செய்தலால் வரும்,
பெரிய பயனை அடைவர்; சமட்டி உருவமாகிய அந்தச் சிவலிங்கத்தை வணங்குவோருக்கு கிடைக்கும் பலன்கள் இவை;
ருத்ரம் -சமகம் என்ற மந்திரங்கள் யஜுர் வேதத்தில் உள்ளன. சிவனுக்கு அபிஷேகம் செய்கையில் இந்த மந்த்ரத்தை ஓதுவது வழக்கம்.
****
அங்கையள வாகியநன் னீராட்டிப்
பூசித்தோ ரளவி லேனைத்
துங்கதலத் துறையிலிங்க மூர்த்திகளைச்
சிவாகமநூல் சொன்ன வாற்றான்
மங்கலமா கியமுகம னீரெட்டும்
வழுவாது வாசந் தோய்ந்த
செங்கனக மணிக்கலசப் புனலாட்டி
மாபூசை செய்தோ ராவார்.
பொருள்
உள்ளங்கையிலடங்கும் அளவு நீரால் திருமஞ்சனம் செய்து, பூசித்தவர்கள், மற்றைய உயர்ந்த தலங்களில் எழுந்தருளிய, சிவலிங்க மூர்த்திகளை, சிவாகமம் கூறியபடி மங்கலமான சோடச (16) உபசாரங்களும் தவறாமல், சிவந்த பொன்னாற் செய்த இரத்தின கலசத்தில் நிறைந்த, மணம் உடைய நீரால் அபிடேகம் செய்து பெரிய பூசை செய்தவர்கள் ஆவார்கள் .
சோடச வுபசாரங்களாவன 16— : ஆவாகனம், தாபனம்,
சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை,
பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியம், புட்பதானம், தூபம், தீபம்,
நைவேத்தியம், பானீயம், ஆராத்திரிகை, ஜப சமர்ப்பணை
என்பன.
*****
அவ்வண்ணஞ் சுந்தரனை யைந்தமுத
மானுதவு மைந்து தீந்தேன்
செவ்வண்ணக் கனிசாந்தச் சேறுமுதன்
மட்டித்துத் தேவர் தேறா
மெய்வண்ணங் குளிரவிரைப் புனலாட்டி
மாபூசை விதியாற் செய்தோர்
மைவண்ண வினைநீந்தி யறமுதனாற்
பொருளடைந்து மன்னி வாழ்வார்.
பொருள்
ஆகமத்திற் கூறியவண்ணம் சோமசுந்தரக் கடவுளை, பசுக்களால் அளிக்கப்பெற்ற பஞ்ச கவ்வியமும், மதுரமாகிய தேனும் சிவந்த நிறத்தை யுடைய பழங்களும், சந்தனக் குழம்பும் அப்பி, தேவர்களும் அறியாத அழகிய திருமேனி குளிருமாறு, மணமுடைய நீரால் அபிடேகித்து, பெரிய பூசையை விதிப்படி செய்தவர்கள், கரிய தீவினைக் கடலைக் கடந்து, அற முதலிய நான்கு பயனையும்பெற்று, நிலைபெற்று வாழ்வார்கள் .
நான்கு பயன்கள் – தர்ம அர்த்த காம மோக்ஷம் = அறம், பொருள் ,இன்பம், வீடு;
பஞ்ச கவ்வியம் – பால் தயிர், கோமயம் , நெய் , பசு மூத்திரம்
அமுதம் ஐந்து/ பஞ்சாமிர்தம் : பால், நெய், தேன், சருக்கரை, பழம்;
*****
அழகிகளுடன் விளையாடும் பாக்கியம் !
நல்லவகை முகமனீ ரெட்டுள்ளும்
வடித்தவிரை நன்னீ ராட்ட
வல்லவர்நூ றாயிரயமா மேதமகப்
பயன்பெறுவர் வாச நானம்
எல்லவிர்குங் குமஞ்சாந்த மிவைபலவு
மட்டித்தோ ரெழிலார் தெய்வ
முல்லைநகை யாரோடும் விரைக்கலவை
குளித்தின்ப மூழ்கி வாழ்வார்.
பொருள்
பதினாறு ( சோடச) உபசாரங்களுள்ளும், மணமுள்ள நல்லநீரால் திருமஞ்சனம் செய்வோர் நூறாயிரம் / லட்சம் அஸ்வமேத யாகத்தைச் செய்த பயனை அடைவர்; மணம் பொருந்திய கத்தூரி, குங்குமப்பூ, சந்தனம் ஆகிய வற்றை சாத்தினோர்கள், அழகு நிறைந்த, முல்லை யரும்பு போலும் பற்களை உ டைய தெய்வப் பெண்களோடு இன்பக்கடலுள் திளைத்து வாழ்வார்கள் .
( விரை நன்னீர் – பனிநீருமாம் )
*****
நன்மலரொன் றாலவா யான்முடிமேற்
சாத்தினா னயந்து நூறு
பொன்மலர்கொண் டயற்பதியிற் பூசித்த
பயனெய்தும் புனித போகத்
தன்மைதரு சுந்தரற்குத் தூபமொரு
காற்கொடுப்போர் தமக்குத் தாங்கள்
சொன்மனமெய் யுறச்செய்த குற்றமா
யிரம்பொ றுப்பன் சுருதி நாதன்.
பொருள்
மதுரையிலுள்ள சிவ பெருமான் திருமுடிமேல், நல்ல மலர் ஒன்றைச் சாத்தினால், பிற தலங்களிற் நூறு பொன்னாலாகிய மலர்களைக் கொண்டு, பூசித்த பயன் பெறலாம் ;
சிவபோகத் தன்மையைத் தந்தருளும் சோமசுந்தரக் கடவுளுக்கு, ஒருமுறை தூபம் கொடுப்பவர்களின், ஆயிரங் குற்றங்களை வேதத் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுள் பொறுத்தருள்வான் .
மனம், வாக்குக் காயங்கள் ஆகியவற்றால் செய்த பாவங்கள் போகும்
—-subham—-
TAGS—மலை, சிறந்தது மேரு, மனிதர், சிறந்தோர் பிராமணர், பரஞ்சோதி முனிவர் பட்டியல் ,திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-6