சிவனுக்கு எதைக் கொடுத்தால் நமக்கு என்ன தருவார் ?- Part 7 (Post.14,456)

Written by London Swaminathan

Post No. 14,546

Date uploaded in London –  23 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி!

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-7 

திருவமுது நிவேதிப்போ ரவிழொன்றற்

     குகமொன்றாச் சிவலோ கத்தின்

மருவிநிறை போகமுடன் வைகுவர்தாம்

     பூலமுக வாச மீந்தோர்

பொருவரிய கடவுளராண் டொருநூறு

     கோடிசிவ புரத்து வாழ்வார்

ஒருபளித விளக்கிடுவோர் வெண்ணிறமுங்

     கண்ணுதலு முடைய ராவார்.

ஆலவாய்  ( மதுரை)ப் பெருமானுக்குத் திருவமுது படைப்போர்கள், ஒரு அவிழுக்கு ஒரு யுகத்துக்கு சிவ லோகத்திற் நிறைந்த போகத்துடன் வாழ்வார்கள்;  தாம்பூலமும் முகவாச மைந்தும் கொடுத்தவர்கள்,  ஒப்பில்லாத, கடவுளர் ஆண்டு ஒரு  நூறு கோடிதேவ ஆண்டுகள், சிவலோகத்தில் வாழ்வார்கள்;  ஒரு கற்பூர விளக்கு இடுபவர்கள்; வெண்மை நிறத்தையும் நெற்றிக்கண்ணையும் உடையராவார்கள்.

அவிழ் – பருக்கை ;

முக வாசமாவன : தக்கோலம், ஏலம், இலவங்கம், கர்ப்பூரம், சாதிஎன்பன.

கடவுளராண்டு – மக்கட்கு ஓராண்டு ஒருநாளாகக்

கணிக்கப்பட்ட ஆண்டு. பளித விளக்கு – கர்ப்பூர நீராஞ்சனம்.

கர்ப்பூர தீப வரலாறு ஆராய்ச்சிக்குரியது. விளக்கிடுவோர்

சிவசாரூபம் பெறுவர் என்றதாயிற்று.

நெற்றிக்கண்=ஞானக் கண்

*****

நறுந்திருமஞ் சனமெடுக்கக் குடமாட்ட

     மணிக்கலச நல்ல வாசம்

பெறுந்தகைய தூபக்கால் தீபக்கால்

     மணியின்ன பிறவுங் கங்குற்

றெறுங்கதிர்கான் மணிமாட மதுரைநா

     யகற்கீந்தோர் செய்த பாவம்

வெறுந்துகள்செய் தைம்பொறிக்கு விருந்தூட்டும்

     பெருங்காம வெள்ளத் தாழ்வார்.

    பொருள்:

 இருளை ஓட்டும், ஒளியை,வீசுகின்ற,  மணிகள் பதித்த

மாடங்களையுடைய மதுரை யிறைவனாகிய சோமசுந்தரக்

கடவுளுக்கு,  மணங்கலந்த திருமஞ்சன மெடுத்தற்குக் குடமும்,

அபிடேகிக்க இரத்தினக் கலசமும், இனிய மணத்தைத் தரும் தகுதியையுடைய தூபக்கால்களும்,  தீபக்காலும் மணியும் இவைபோல்வன பிறவும், கொடுத்தவர்கள், தாங்கள் செய்த பாவங்களை,  வெறுவிய பொடியாகச் செய்து,  ஐந்து இந்திரியங்களுக்கும் விருந்துண்பிக்கும், பெரிய இன்பவெள்ளத்துள் மூழ்குவார்கள்

     தூபமும் தீபமும் இடுதற்குரிய கலன்கள் தூபக்கால்தீபக்கால் எனப் பெறும் .

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியதையும் ஒப்பிடலாம்.

சங்கீர்த்திய நாராயண சப்த மாத்ரம் விமுகத துக்காஸ் சுகினோ பவந்து  என்று விஷ்ணு சஹஸ்ர நாமமும் கூறும் ; நாராயணன் என்ற மந்திரத்தைக் கேட்ட நொடியில் துக்கங்கள் மறைந்து போகும் என்பது பொருள்.

****

இயலிசைய பாடலினோ டாடலிவை

     செய்விப்போ ரிறுமாப் பெய்திப்

புயயலிசைய வியங்கலிப்ப மூவுலகுந்

     தொழவரசாய்ப் பொலங்கொம் பாடுஞ்

செயலிசைய வணங்கனையா ராடரங்கு

     கண்டின்பச் செல்வத் தாழ்வார்.

பொருள் –

கயலை ஒத்த கண்களையுடைய அங்கயற்கண்ணியின் (மீனாட்சியின்)  தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளின், சன்னிதானத்தில், பல (வாத்தியங்கள்)  இயங்களும்

 கல்லென்று ஒலிக்க, இயல் இசை  இலக்கணம் உடைய  பாடல்களோடு,  ஆடுபவர்கள், இசைக்கருவிகள் முழங்க

மூன்றுலகங்களும் வணங்குமாறு அரசராகி, தங்க  வர்ண அழகிகள் போன்ற தேவ மகளிரை ஒத்த பெண்கள், மேடையில் தோன்றுவதைக்  கண்டு, இன்பந்தரும் செல்வக் கடலுள் அழுந்துவார்கள் .

அதாவது அரசராகி தேவ லோக கன்னிகைகள் போன்ற அழகிகள் ஆடுவதைக் கண்டு இன்பம் அடைவார்கள்

^^^^^

இத்தகைய திருவால வாயுடையான்

     றிருமுன்ன ரியற்று மோமம்

மெய்த்தவமந் திரந்தான மின்னவணு

     வளவெனினு மேரு வாகும்

உத்தமமா மிவ்விலிங்கப் பெருமையெலாம்

     யாவரளந் துரைப்பர் வேத

வித்தகரே சிறிதறிந்த வாறுரைத்தே

     மினிப்பலகால் விளம்பு மாறென்.

     பொருள்

இத்தன்மையையுடைய திருவாலவாயையுடைய சோம சுந்தரக்

கடவுளின்,  சந்நிதானத்தில், செய்கின்ற,

 ஓமங்களும் உண்மைத்

தவங்களும் மந்திரங்களும் தானங்களும் இவை போல்வன பிறவும்,

அணுவின் அளவின ஆயினும், மகா மேருவின் அளவின ஆகும்;

சிறந்தது ஆகிய,  இந்த இலிங்க

மூர்த்தியின் பெருமைகள் அனைத்தையும், அளவிட்டுக் கூறவல்லார் யார் (ஒருவருமில்லை ),

 வேதங்களில் வல்ல முனிவாகளே,சிறிது அறிந்தபடி கூறினேம்

*****

மதுரை சிவ பெருமானின் பல பெயர்கள்

மான்மதசுந் தரன்கொடிய பழியஞ்சு

     சுந்தரனோர் மருங்கின் ஞானத்

தேன்மருவி யுறைசோம சுந்தரன்றேன்

     செவ்வழியாழ் செய்யப் பூத்த

கான்மருவு தடம்பொழில்* சூ ழாலவாய்ச்

     சுந்தரன்மீன் கணங்கள் சூழப்

பான்மதிசூழ் நான்மாடக் கூடனா

     யகன்மதுரா பதிக்கு வேந்தன்.

பொருள்: மான்மத சுந்தரன் என்றும், கொடுமையான பழியஞ்சிய சுந்தரன் என்றும், ஒரு பக்கத்தில், உமையம்மையார் விரும்பி உறைகின்ற சோமசுந்தரன் என்றும், வண்டுகள், செவ்வழிப் பண்ணைப் பாட, மலர்ந்த,  மணம் பொருந்திய,  பெரிய சோலைகள் சூழ்ந்த,

 ஆலவாய்ச் சுந்தரன் என்றும், உடுத் தொகுதிகள் சூழ,  வெள்ளி சந்திரன் வலம் வருகின்ற,நான் மாடக் கூடனாயகன் என்றும்,  மதுராபதி வேந்தன் என்றும் ………

****

சிரநாலோன் பரவரிய சமட்டிவிச்சா

     புரநாதன் சீவன் முத்தி

புரநாதன் பூவுலக சிவலோகா

     திபன்கன்னி புரேசன் யார்க்கும்

வரநாளுந் தருமூல மாடக் கூடல்

     விவைமுதலா மாடக் கூடல்

அரனாம மின்னமளப் பிலவாகு

     முலகுய்ய வவ்வி லிங்கம்.

பொருள்:

நான்கு தலைகளையுடைய பிரமன்,  வணங்குதற்கரிய,

சமட்டி விச்சாபுர நாதன் என்றும்,  சீவன் முத்திபுர நாதன் என்றும்,  பூலோக சிவலோகாதிபன் என்றும்.  கன்னி புரேசன் என்றும்,  எவருக்கும், எப்போதும்,  வரம் தருகின்ற,  மூலலிங்கமென்றும், இவை முதலாக, நான்மாடக் கூடலில் எழுந்தருளி யிருக்கும் சோமசுந்தரக் கடவுளின்திருப்பெயர்கள், இன்னும்  அளவிறந்தனவாம்; அந்த  இலிங்கம் உய்யும் பொருட்டு முளைத்தெழுந்தது (அதாவது ஸ்வயம் பூ)

—SUBHAM—

TAGS- சிவன், நமக்கு என்ன தருவார் ?  பரஞ்சோதி முனிவர், அதிசயச் செய்தி, திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-7

Leave a comment

Leave a comment