
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,551
Date uploaded in London – –25 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
5-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
எப்படி சாப்பிட வேண்டும்? ஆயுர் வேதம் தரும் அறிவுரை!
ச. நாகராஜன்
ஒவ்வொரு மனிதனும் பூரண ஆரோக்கியத்துடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் குறிக்கோள்.
உணவைப் பற்றிய ஆயுர்வேத குறிப்புகள் மிக முக்கியமானவை.
எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஆயுர்வேதம் தெளிவாக விளக்குகிறது.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பு எழுந்திருப்பது சிறந்தது.
உடனடியாக பல் துலக்கி விட்டு வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவன் என்பதால் உடலில் உள்ள வாத, கப, பித்த தோஷம் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்குத் தக உணவுத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.
சிலருக்கு புரோட்டின் அதிகமாக வேண்டியிருக்கும். இன்னும் சிலருக்கோ கார்போஹைட்ரேட் தேவையாக இருக்கும்.
சூடாக இருக்கும் பண்டங்களை உண்ணுதல் சிறந்தது.
குளிர்ந்த பானத்தையோ அல்லது ஐஸ் வாட்டரையோ நிச்சயமாக சாப்பிடும் முன்னர் குடிக்கக் கூடாது. இது ஜீரணத்தை வெகுவாகப் பாதிக்கும்.
உணவை மிகவும் மெதுவாகவோ அல்லது மிக வேகமாகவோ சாப்பிடாமல் நிதானமாக நன்கு கடித்து சாப்பிட வேண்டும்.
வயிறு முட்ட சாப்பிடாமல் சிறிது வெற்றிடம் வயிறில் இருக்குமாறு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
பசித்த பின்னரே சாப்பிட வேண்டும்.
நடந்து கொண்டோ, வண்டியை ஓட்டியவாறோ, படித்துக்கொண்டோ, டி.வி. பார்த்தவாறோ சாப்பிடக் கூடாது.
உணவு உண்ணுவது ஒரு புனிதமான செயல் என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.
அன்புடன் சமைத்து பரிமாறுபவரிடமிருந்தே உணவைச் சாப்பிட வேண்டும்.
நெய் மிக மிக முக்கியமானது. சாப்பிடும் போது சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும். இது வயதாவதால் வரும் பாதிப்புகளைத் தடுக்கும்.

சாப்பிட்ட பின்னர் சிறிது ஓய்வு தேவை.
இரவு சாப்பிட்ட பின்னர் சிறிது நடக்க வேண்டும். சத பதம் என்று சரகர் இதைக் கூறுகிறார். சத பதம் என்றால் நூறு அடி நட என்று அர்த்தம்.
சாப்பிடும் போது அதிகமாக தண்ணீரை அருந்தக் கூடாது.
சாப்பாட்டுடன் ஒருபோதும் பாலைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
புதிதாக உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு நலம் பயக்கும்.
இஞ்சியை உணவில் சேர்ப்பது நல்லது.
யோகா மற்றும் தியானம் மிகவும் சிறந்தது. சாப்பிடும் முன்னர் உடலை நெளிய வைக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் ஓய்வான நிலைகளைக் கொண்ட படுக்கும் நிலை கொண்ட பயிற்சிகளைச் செய்யலாம்.
காலையில் செய்யப்படும் உடல் பயிற்சிகள் உடல் வலுவைக் கூட்டுகிறது. தொப்பையைக் குறைக்கிறது.
ஒரு போதும் புகை பிடித்தல் கூடாது.
வாத உடம்பைக் கொண்டோர் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சாப்பிட வேண்டும்.
காலை உணவை ஆறிலிருந்து பத்து மணிக்குள்ளும், மதிய உணவை பத்து மணீயிலிருந்து இரண்டு மணிக்குள்ளும் இரவு உணவை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஆயுர்வேத நிபுணரை அணுகி ஒருவர்,. வாத, கப, பித்தம் ஆகிய மூன்றில் எந்த வகை உடம்பு தன்னுடையது என்பதை அறிய வேண்டும். தனது உடலுக்கு ஒவ்வாதவை எவை என்பதைக் கேட்டு அறிதல் வேண்டும்.
உணவே நமக்கு உயிர் நாடி.
அன்னமே உயிருக்கு ஜீவ நாடி.
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
நானே அன்னம் என்கிறது நமது அறநூல்.
அன்னத்தைப் போற்றுவோம். நீண்ட நாள் வாழ்வோம்!
***