அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப் (Post No.14,555)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,555

Date uploaded in London – –26 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை 

அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப்

(WIM HOF– THE ICEMAN) 

ச. நாகராஜன் 

இறைவனின் படைப்பில் நாம் காணும் அதிசய ஆற்றல்கள் கொண்ட மனிதர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.

கடும் குளிரைத் தாங்கும் மனிதரும் உண்டு என்பதை நிரூபிக்க விம் ஹாஃப் என்னும் ஐஸ் மனிதர் இருக்கிறார்.

நெதர்லாந்தில் லிம்பர்க்கொல் சிட்டார்ட் என்னும் இடத்தில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி இவர் பிறந்தார். இப்போது இவருக்கு வயது 65.

இவருடைய பதினேழாம் வயதில் ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றது. பீட்ரிக்ஸ்பாக்ஸ் என்னும் கால்வாயில் கடும் குளிர் நீரில் திடீரென அவர் குதித்து நீந்தத் தொடங்கினார். குளிர் அவர் உடலை பாதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து குளிரான சூழ்நிலை அவரைப் பாதிக்காமல் இருப்பதைக் கண்ட விஞ்ஞானிகள் அவரை ஆராயத் தொடங்கினர். 2024ல் எட்டு ஆய்வுகள் நடைபெற்றன; அவரது தனித்துவம் வாய்ந்த ஒரு வழி அவரைக் குளிரிலிருந்து காக்கிறது என்று முடிவை அறிவித்தன.

தனது வழியை விம் ஹாஃப் மெதேட் (WIM HOF METODஎன்று அவர் கூறுகிறார்.

இமயமலையில் உள்ள யோகிகளும், திபெத்திய லாமாக்களும் இமயமலையில் கடும் குளிரில் போர்வை கூட போர்த்திக் கொள்ளாமல் இருப்பதை பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆனால் விம் ஹாஃப் வழி தனி வழி!

26 உலக ரிகார்டுகளை அவர் பெற்றிருக்கிறார்.

வெறும் காலுடன் இரண்டு மணி நேரம் 16 நிமிடம் 34 வினாடிகள் அவர் பனிக்கட்டிகளின் மீது ஓடியது ஒரு உலக சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சாதனை பின்லாந்தில் 2007ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளன்று நிகழ்த்தப்பட்டது.

2000, மார்ச் மாதம் 16ம் நாளன்று ஐஸுக்கு அடியில் நீந்தி அவர் கின்னஸ் சாதனையைப் படைத்தார்.

மவுண்ட் எவரெஸ்டில் வெறும் சாதாரண உடையுடன் அவர் ஏறி அனைவரையும் வியக்க வைத்தார்.

அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும் வெளியாகியுள்ளன. யூ டியூபிலும் அவரைப் பற்றிய படம் உண்டு.

தனது சாதனைகளின் அடிப்படையில் அவர் உணர்வூக்கம் கொடுக்கும் மோடிவேஷன் பேச்சாளராக மிளிர்ந்து அனைவருக்கும் ஊக்கமூட்டி வருகிறார்.

அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகளில் சில இதோ:

நமக்குள்ளே சக்தி இருக்கிறது. நமக்குள்ளே சென்று எதையும் வென்று விடலாம்.

உங்கள்  மூளையைக் கட்டுக்குள் கொண்டு வரும் போது நம்பிக்கை வருகிறது.

நாம் இயற்கையிலிருந்து வெளியே வந்து விட்டோம். குளிரானது நாம் இழந்த ஒன்றிற்கு நம்மை திருப்பி இட்டுச் செல்லும் வலிமை கொண்டது.

 இது போன்ற ஊக்கமூட்டும் ஏராளமான கருத்துக்களை அவர் கூறி இளைய சமுதாயத்தினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 விம் ஹாஃப் – தி ஐஸ் மேன் – ஒரு அதிசய மனிதர் தான்!

***

Leave a comment

Leave a comment