
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,557
Date uploaded in London – –27 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
7-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் கூரிய விழியாள் வெரோனிகா செய்டர்!
ச. நாகராஜன்

பெண்களின் கண்ணழகை வியந்து மீன் விழியாள் என்றும் மான் விழியாள் என்றும் புலவர்கள் பாடுவதுண்டு.
இப்போது பிரமிக்க வைக்கும் கூரிய பார்வையைக் கொண்ட ஒரு பெண்ணின் கண்ணழகை எப்படி வர்ணிப்பது?
யோசிக்க வேண்டியது தான்!
வெரோனிகா செய்டர் (VERONICA SEIDER) என்ற மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பெண்மணிக்கு உலகிலேயே யாருக்கும் இல்லாத அளவு கூரிய பார்வை உள்ளது என்பது அதிசயச் செய்தி தானே!
1951ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு ஸ்டுட்கார்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார்.
ஒரு மைல் தூரத்தில் உள்ள ஒருவரை சரியாக அடையாளம் கண்டு உரைக்கும் இவரது பார்வை நல்ல பார்வையை உடைய ஒருவரின் பார்வையை விட 20 மடங்கு அதிகமாகக் கூரிய பார்வையைக் கொண்டதாக இருக்கிறது.
பருந்துப் பார்வை, கழுகுப் பார்வை என்றெல்லாம் வர்ணிப்போமே அதை விட கூர்மையாக உள்ளது இவரது பார்வை.
1972ம் ஆண்டிலேயே கின்னஸ் உலக சாதனைகளில் இவரது கண் பார்வை பற்றிய சாதனை இடம் பெற்றுள்ளது.
இவரது 21ம் வயதிலேயே இவர் படித்த பல்கலைக் கழகம் இவரது அபூர்வ ஆற்றலை உணர்ந்து சோதனைகளை நடத்தி அதை உலகிற்கு அறிவித்தது.
நுண்மையான பார்வையைக் கொண்ட இவரது பார்வை மைக்ரோஸ்கோபிக் பார்வை எனப்படுகிறது.
சாதாரண ஒரு மனிதரின் கண்கள் 25 செண்டிமீட்டர் துரத்தில் உள்ள ஒரு பொருளை 100 மைக்ரான் என்ற அளவில் பார்க்கும் சக்தியைக் கொண்டது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும். பத்து மைக்ரான் என்பது ஒரு பேப்பரில் இடப்பட்ட ஒரு சிறு புள்ளி என்று கொள்ளலாம்.
வெகு தொலைவில் வானத்தில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திரங்களைச் சிறு புள்ளிகளாகப் பார்த்து பிரமிக்கிறோம்.
ஆனால் வெரோனிகாவின் கூரிய பார்வையோ அதீத மனித ஆற்றல் கொண்ட மர்மமமாக இருக்கிறது!
சாதாரணமாக நாம் பத்து பக்கம் எழுதும் ஒரு கடிதத்தை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அதைப் படிக்கும் ஆற்றல் உள்ள கண் பார்வையை இவர் கொண்டுள்ளது படைப்பு விசித்திரமே தான்!
ஒரு முறை ஒரு பேப்பரை தனது நகத்தின் அளவில் கிழித்து அதில் 20 கவிதைகளை அவர் எழுதிக் காட்டினார்.
இதைத் தவிர அடிப்படையான வண்ணங்களைப் பார்க்கும் ஆற்றலையும் இவர் கொண்டிருந்தார். ஒரு டெலிவிஷன் காட்சியில் அடிப்படையாக உள்ள வண்ணங்களை இனம் கண்டு எடுத்துரைக்கும் வல்லமையும் இவருக்கு இருந்தது.
இப்படி ஒரு அபூர்வத் திறமையைக் கொண்டிருந்தாலும் அவர் பகட்டையும் விளம்பரத்தையும் விரும்பவில்லை. சாதாரண ஒரு பல் டாக்டராக மேற்கு ஜெர்மனியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இப்படிப்பட்ட அபூர்வப் பெண்மணி தனது 62ம் வயதில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி மரணமடைந்தார்.
எல்லையற்ற படைப்பு விநோதங்களில் அறிவியலாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு அபூர்வ ஆற்றல் கொண்ட பெண்மணி வெரோனிகா செய்டர்!
**