உடும்புப் பிடி பிடிக்கலாமே உபுண்டு (Ubuntu) கொள்கையை! (Post No.14,567)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,567

Date uploaded in London – –30 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

11-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

Motivation

உடும்புப் பிடி பிடிக்கலாமே உபுண்டு (Ubuntu) கொள்கையை! 

ச. நாகராஜன்

உபுண்டுவா அது என்ன? அதை உடும்புப் பிடி பிடிக்கணுமா?

புரியவில்லையே என்று திகைக்க வேண்டாம்.

ஆப்பிரிக்காவின் மனித நேயக் கொள்கை தான் உபுண்டு என்று அழைக்கப்படுகிறது.

 அப்படி என்றால் என்ன? 

அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்கிறீர்களா? 

நலிந்தவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் இரக்கத்துடன் பார்த்து உதவி செய்ய முன் வருகிறீர்களா?

 மற்றவர்கள் பல்வேறு பேதங்களால் அவமானப்படுத்தப்படும் போது நீங்களே அவமானப்படுவதாக உணர்கிறீர்களா? 

மற்றவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்படும் போது நீங்களே ஒடுக்கப்பட்ட உணர்வை அடைகிறீர்களா?

 மனித குலம் மனிதத்தன்மையோடு விளங்க வேண்டும் என்பதை முன் நிறுத்தி அதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் விளங்குகிறீர்களா?

 அப்படி என்றால் நீங்கள் ஒரு உபுண்டு ஆள் தான்!

 உபுண்டு என்ற ஆப்பிரிக்க வாழ்முறைக்கு மனிதத் தன்மையோடு வாழ்வது என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

 தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சமூகத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துகிறது உபுண்டு. பாரம்பரியம் பாரம்பரியமாக அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தப் பண்பானது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் எதையும் அணுகி பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் காண உதவுகிறது.

 தனி மனித அகங்காரத்தை விட்டு விட்டு இணக்கமான கூட்டு மனித வாழ்க்கையை வற்புறுத்தும் உபுண்டுவை தென்னாப்பிரிக்க நோபல் பரிசு பெற்ற ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு (Desmond Tutu) வெகுவாக ஆதரித்துப் பரப்பி வருகிறார். அவரது ‘‘நோ ஃப்யூச்சர் வித் அவுட் ஃபர்கிவ்னெஸ்” (No Future without Forgiveness) என்ற புத்தகம் உபுண்டு கொள்கையை நன்கு விளக்குகிறது.

 கறுப்பு இனத்தைச் செர்ந்த நெல்ஸன் மண்டேலாவும் உபுண்டு கொள்கையை வெகுவாகப் பரப்பியவருள் ஒருவர். இவரே கறுப்பரில் முதல் ஜனாதிபதி ஆனவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உடைந்து கிடந்த ஆப்பிரிக்காவை அவர் ஒன்று சேர்த்தது எப்படி என்றால் இந்த உபுண்டு கொள்கையை வைத்துத் தான்!

 அண்டை அயலாரிடம் அன்புடன் பழகுவதோடு அன்றாடம் அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று விசாரிப்பது தான் உபுண்டு.

 வயதானவர்கள் தனியே வாழ்ந்தால் அவர்களை அக்கறையுடன் பாதுகாப்பாக வாழச் செய்வது தான் உபுண்டு.

 உபுண்டுவை விளக்க ஒரு சிறிய கதை ஒன்று உண்டு.

 ஒரு மனிதவியலாளர் (Anthropologist) ஆப்பிரிக்காவில் இருந்த பூர்வகுடியினரிடையே சென்று வசித்தார்.

ஒரு நாள் அங்கிருந்த குழந்தைகளை அவர் விளையாட அழைத்தார்.

 ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பிய அவர் அதை அங்கிருந்த ஒரு மரத்தின் அருகில் வைத்தார்.

 மரத்திலிருந்து 300 அடி தள்ளி குழந்தைகளை நிற்க வைத்தார் அவர்.

பிறகு கூறினார்: “யார் முதலில் சென்று கூடையைத் தொடுகிறார்களோ அவரே அனைத்துப் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.”

 பின்னர் ,“ரெடி, போகலாம்” என்று அறிவித்தார்.

 அந்தச் சின்னக் குழந்தைகள் என்ன செய்தார்கள், தெரியுமா?

 அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கையைக் கோர்த்துக்கொண்டு கூட்டாக அந்த மரத்தருகே சென்று கூடையைத் தொட்டு பழங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

 வியந்து போன மனிதவியலாளர், “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்.

 அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பதிலைச் சொன்னார்க்ள்: “உபுண்டு”

 மற்றவர்கள் எல்லாம் வருத்தப்படும் போது ஒருவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? என்பது தான் உபுண்டு.

 “நான் இருக்கிறேன்ஏனெனில் மற்றவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்!”

 இது தான் உபுண்டு!

 இந்தக் கொள்கையை உடும்புப் பிடியாக உலகத்தோர் அனைவரும் பிடித்தால் சண்டை, சச்சரவு இன்றி உலகம் முன்னேறுமில்லையா சார்!

சொல்லுங்கள்!

***

Leave a comment

Leave a comment