ஞானமயம் வழங்கும் (1-6-2025) உலக இந்து செய்திமடல் (Post No.14,584)

Written by London Swaminathan

Post No. 14,584

Date uploaded in London –  2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

(Collected from Popular Newspapers and edited for broadcast)

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் முதல் தேதி 2025-ம் ஆண்டு

முதலில் இந்தியச் செய்திகள்! 

****

 அமர்நாத் யாத்திரைக்கு 3 . 5 லட்சம் பேர் முன்பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரைக்கு நாடு முழுவதும் இருந்து 3.5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான் அனைத்து பாதுகாப்புஏற்பாடுகளும் செய்யப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்த கோடை சீசனில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாங்கள் அமர்நாத் யாத்திரையில் முழு கவனம் செலுத்த போகிறோம். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த யாத்திரைக்குப் பிறகு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்படும், இவ்வாறு கூறினார்.

52 நாட்கள் கொண்ட அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரையில் இந்த யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதும் 3.5 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது 

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள்

மத்திய பாதுகாப்புப் ஆயு தப் படையினரை மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்புகிறது. இவர்கள் ஜூன் மதம் இரண்டாவது வாரம் முதல் பாதுகாப்புப் பணிகளை ஏற்பார்கள். 

***** 

அயோத்தி ராமர் கோவிலில்  சிவன் சிலை பிரதிஷ்டை

 அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் பிராண பிரதிஷ்டை ஜூன் 3 முதல் ஜூன் 5, 2025 வரை நடைபெற உள்ளது.

 உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில்  ராமர் கோவிலில் நேற்று சிவ பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 ஜூன் மாதம் மூன்றாம் தேதி முதல், அபிஷேக ஆராதனைகள் துவங்கப்படும் என்று கோவில் நிர்மாணக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்

 இப்போது 90 சதவிகித வேலை முடிந்துவிட்டது கோவிலைச் சுற்றி வலம் வரும் பிரகார பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் நிறைவடையும் ; கோவில் அமைப்பு தொடர்பான எல்லா வேலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்றும் மிஸ்ரா தெரிவித்தார். 

****

வைகாசி விசாக திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

 முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

 ****

பிரேசில் நாட்டு ஜோனாஸ் மாசெட்டிக்கு பத்மஸ்ரீ விருது!

இந்து சமய பாரம்பரிய  உடையில் வந்து ராஷீரபதியிடம் விருது பெற்றார்.

அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஒருவர் ஜோனாஸ் மாசெட்டி Jonas Masetti என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்துமத ஆன்மீக குரு ஆவார். வேஷ்டி- அங்கவஸ்த்ரம் – சிகை முதலியவற்றோடு அர்ச்சக வடிவில் வந்து விருதுபெற்ற அவரின் ஆன்மீக பெயர் விஸ்வானந்தா.

பிரேசில் நாட்டின் ஜெனிரோவில் பிறந்த இவர், இயந்திரப் பொறியியலில் (Mecanical Engineer) பட்டம் பெற்று, பிரேசில் இராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பங்குச் சந்தையில் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

இருப்பினும், வாழ்க்கையில் ஏதோ குறைவது போல் உணர்ந்த ஜோனாஸ் அவர்கள் யோகா மற்றும் தியானம் மூலம் ஆன்மீகப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.

2004 ஆம் ஆண்டு தமிழகம்- கோவை ஆனைகட்டியில் உள்ள ஆச்சிரமத்திற்கு வந்து சுவாமி தயானந்த சரஸ்வதியிடம் வேதாந்தம் பயின்றார். நான்கு ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கற்றார்.

பிறகு தனது குருவின் வழிகாட்டுதலின்படி, பிரேசில் திரும்பிய ஜோனாஸ் ‘விஷ்வ வித்யா’ என்ற அமைப்பை நிறுவி வேதாந்த போதனைகளை பரப்பத் தொடங்கினார்.

அவரது போதனைகள் பிரேசில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தது.  அவர் பகவத் கீதையை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் வேதாந்தம் மற்றும் யோகா குறித்து பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஜோனாஸ் மாசெட்டி தனது ஆன்மீக போதனைகள் மூலம் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

*****

 தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை – பிரதமர் மோடி

இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 142வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

தாய்நாட்டின் மீதான சாவர்க்களின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை எனக்கூறியுள்ள அவர், சுதந்திர இயக்கத்தின் மீதான சாவர்க்கரின் துணிச்சலை தேசம் ஒருபோதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாவர்க்கரின் தியாகமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் சுதந்திரத்திற்காக துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் உச்சத்தைத் தாண்டியவர் சாவர்க்கர் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நலனை அகில இந்திய உணர்வாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் சாவர்க்கர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திரப் போராட்டத்தை தனது எழுத்துக்களால் வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றியவர் சாவர்க்கர் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சமூகத்தை தீண்டாமையின் கொடுமையில் இருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வீர் சாவர்க்கர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

*****

ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி ஜூன் 22-ம் தேதி நடத்தவிருக்கிறது.. முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பூமி பூஜை மே மாதம் 28-ஆம் தேதி நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22 ல் நடக்கவுள்ளது.

அதற்கான பூமி பூஜை மதுரை வண்டியூரில்  நடந்தது. ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கோ பூஜையுடன் விழா தொடங்கியது.

இதற்கு முன்னர்,

கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்துகொண்டு மாநாட்டுத் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு வழங்குகிறது எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், ஜூன் 22ஆம் தேதி மதுரையில் கட்சி பாகுபாடு இன்றி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

**** 

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்துக்கும் , ராணுவத்துக்கும் எதிராக சிலர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை ராம்நகரில் படைவீரர்களை பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம் என்ற நிகழ்வில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக சிலர் பல்வேறு கருத்துகளை பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும் கூறினார்.

****

 லண்டனில் ருத்ர ஜபம்,  யக்ஞம் 

லண்டனில் நடந்த ருத்ர ஜபம் யக்ஞம் காரணமாக, சென்ற ஞாயிற்றுக்கிழமை நமது ஒலி பரப்பு நிகழ்ச்சி, ஒத்திவைக்கப்பட்டதை முன்னரே அறிவித்து இருந்தோம் . 

மித்ர சேவா அமைப்பின் சார்பில் நடந்த அந்த நிகாழ்ச்சி திரு கல்யாண சுந்தர சிவாசார்யா தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. சுமார் ஆயிரம் பேர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு யஜுர் வேதத்திலுள்ள ருத்ரம் – சமகம் ஆகியவற்றை பதினோரு முறை ஓதினார்கள் அதே நேரத்தில் ஹோமமும் நடந்தது. ஒவ்வொரு அணுவாகம் முடியும்போதும் மேடையில் அலங்கரிக்கப்பட்ட பளிங்குச் சிலை சிவலிங்கத்துக்கு அபிஷேகமும் ஆரத்தியும் நடந்தது 

ஏராளமான பெண்களும் சிறுவர் சிறுமியரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்; இறுதியில் மகா பிரசாதமும் வழங்கப்பட்டது .

பிரிட்டனின் தொலைதூர நகரங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர் . மித்ரா சேவா சாரிட்டி இதை மூன்றாவது ஆண்டாக நடத்தியுள்ளது; மேலும் ஆண்டுதோறும் உடையாளூர் டாக்டர் கல்யாணராமன் தலைமையில் ராதாகிருஷ்ண கல்யாணத்தையும் மித்ர சேவா அமைப்பு நடத்தி வருகிறது .

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்  வாசித்த செய்தி மடல் இது.

 அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் எட்டாம்  தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

 —SUBHAM—-

 Tags-ஞானமயம் , (1-6-2025) ,உலக இந்து செய்திமடல் 

Leave a comment

Leave a comment