Post No. 14,586
Date uploaded in London – –3 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
24-5-25 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை!
மகிழ்ச்சி நகரம் கொல்கத்தா தரும் புத்துணர்ச்சி!
ச. நாகராஜன்
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய மாநிலம் மேற்கு வங்கமாகும். இம்மாநிலத்தில் தலைநகரான கொல்கத்தா இந்தியாவின் ஏழாவது பெரிய நகரமாகும்.
மகிழ்ச்சி நகரம் (JOY CITY) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் கொல்கத்தாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் பார்ப்பதற்கு உள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
தக்ஷிணேஸ்வரம் காளி கோவில்
கொல்கத்தாவின் தாயாக வழிபடப்படும் காளி குடிகொண்டு அருளாட்சி நடத்தும் இடம் தக்ஷிணேஸ்வரம் காளி கோவில் ஆகும். ஹூக்ளி ஆற்றில் கிழக்குக் கரையில் அமைந்துள்ள கோவில் இது. காளியின் ஒரு அம்சமான பவதாரிணி அருளாட்சி செய்யும் இடம் இது. கொல்கத்தாவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கும் இந்தக் கோவிலைச் சுற்றி வெளியிடமும், அதைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தில் பல அறைகளும் உள்ளன.
ஆற்றங்கரையில் பன்னிரண்டு சிறு கோவில்கள் உள்ளன.
கடைசியில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகே வடமேற்கு மூலையில் உள்ள ஒரு கூடத்தில் தான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார்.
இந்தக் கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
1847-ம் ஆண்டில் இப்பகுதியின் ஜமீந்தாரிணியாக விளங்கிய ராணி ராஸமணி தேவியார் புனிதத்தலமான காசிக்கு யாத்திரை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். தேவையான பொருள்கள் சேகரிக்கப்பட்டு உறவினர்கள், வேலையாட்களுடனும் 24 படகுகளில் அங்கு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.
கிளம்புவதற்கு முதல் நாள் ராணியார் கனவு ஒன்றைக் கண்டார். அதில் தோன்றிய காளி, காசிக்கு வந்து தரிசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கென அழகிய கோவில் ஒன்றை நிர்மாணித்து அங்கேயே வழிபட்டால் போதும் என்றும் அருளுரை கூறினாள்.
உடனடியாக ராணியார் பெரும் நிலப்பகுதியை வாங்கிக் கோவிலை அழகுறக் கட்டி முடித்தார்.
1855ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
கோவில் திறக்கப்பட்ட போது நாடு முழுவதிலுமிருந்து ஒரு லட்சம் அந்தணர்கள் விழாவைச் சிறப்பிக்க அழைக்கப்பட்டனர்.
கோவிலின் குருக்களாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தமையனாரான ராம்குமார் நியமிக்கப்பட்டார்.
அவர் அடுத்த ஆண்டே காலமாகவே அந்த குருக்கள் பணியை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேற்கொண்டார். பரமஹம்ஸரின் தேவியார் அன்னை சாரதாமணி தேவியாரும் இங்கேயே வந்து குடியேறினார்.
அதிலிருந்து பரமஹம்ஸர் 1886-ம் ஆண்டு மறையும் வரையில் சுமார் 30 ஆண்டுகள் காளி கோவிலுக்கு குருக்களாக இருந்து கோவிலின் பெருமையையும் புகழையும் பெருமளவு உயர்த்தினார்.
இறைவன் : சிவன் மற்றும் கிருஷ்ணர்
இறைவி : பவதாரிணி அல்லது காளி மற்றும் ராதா
கோவிலின் கர்பக்ருஹத்தில் காளி தேவியின் சிலை உள்ளது.
இங்குள்ள பஞ்சவடி பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஆல், அரசு, வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து மரங்கள் சூழ்ந்த இந்த பஞ்சவடி பகுதியில் தான் பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் பரமஹம்ஸரின் இதர சீடர்கள் ஆன்மீக சாதனையை மேற்கொண்டனர். பரமஹம்ஸர் அருளால் விவேகானந்தர் காளியை தரிசனம் செய்து உத்வேகம் பெற்று பாரதத்தை எழுச்சி பெறச் செய்தார். அப்படிப்பட்ட புண்யமான திருத்தலம் இதுவே என்பதை யாராலும் மறக்க முடியாது.
ஹௌரா பிரிட்ஜ்
ஹூக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான தொங்கு பாலம் ஹௌரா பிரிட்ஜ் ஆகும். ஹூக்ளி நதியின் எதிரெதிர் கரைகளில் இருந்த ஹௌராவையும் கொல்கத்தாவையும் இணைக்கும் வண்ணம் இந்தப் பாலம் 1943ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் தினம்தோறும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்கின்றன. ஒருலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் இதில் நடந்து செல்கின்றனர். இது உலகின் ஆறாவ்து நீளமான பாலமாகும்,
டிராம்
கொல்கத்தா என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது டிராம் தான். பஸ், ரயில், கார் என பயணப்படும் பயணிகள் டிராமில் பயணப்பட ஒரு சிறந்த இடம் கொல்கத்தா நகரம் தான்!
ஈடன் கார்டன்ஸ்
கொல்கத்தா என்றவுடனேயே கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுக்கு வருவது ஈடன் கார்டன்ஸ் மைதானம் தான். இங்கு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகள் என்றும் நினைவு கூரத் தக்கவையாகும். 68000 பேர் அமரக்கூடிய இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் உலக அரங்கங்களில் சிறந்த ஒன்றாகும்.
நியூமார்க்கெட்.
பேரம் பேசி பொருள்களை வாங்க விரும்புபவர்களுக்கே உரித்தான மார்க்கெட் நியூமார்க்கெட். இங்கு 2000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஈடன் கார்டன்ஸுக்கு அருகில் உள்ளது இது.
விக்டோரியா மெமோரியல் ஹால்
விக்டோரியா மகாராணியின் நினவாக மக்ரனா என்ற உயர் வகை சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அதில் புகழ் பெற்ற ஓவியங்கள், சிறபங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை காட்சிப் பொருள்களாக உள்ளன.
அந்தக் காலத்தில் மன்னர்கள் குதிரை சவாரி செய்ததை நினைவு கூரும் வகையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த உணர்வைப் பெறுவதற்காக இங்குள்ள குதிரை வண்டி பயணத்தை மேற்கொள்வது வழக்கம், அலங்கரிக்கப்பட்ட ரதம் போல உள்ள ஏராளமான குதிரை வண்டிகள் இங்கு சவாரிக்காக தயாராக இருக்கும். இது ஒரு உல்லாசப் பொழுது போக்கு அம்சமாக இங்கு திகழ்கிறது.
காலேஜ் ஸ்ட்ரீட்
பழைய புத்தகங்களை விரும்பி வாங்கும் புத்தகப் பிரியர்களின் சொர்க்கம் காலேஜ் ஸ்ட்ரீட் பகுதியாகும். இது கொல்கத்தா ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. பல்லாயிரக்கணக்கில் புத்தகங்கள் இப்பகுதியில் உள்ளன.
டயமண்ட் ஹார்பர்
2000 ஆண்டு பழமையான வரலாற்றைக் கொண்டுள்ள இந்த துறைமுகம் கொல்கத்தாவிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வங்காள விரிகுடா பகுதியில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் இது தான். இங்கு தான் ஹூக்ளி நதி கடலுடன் கலக்கிறது. இங்குள்ள கடற்கரையில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுவதற்காக உலகெங்குமிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.
இப்போது ‘எஃப்’ போர்ட் என்று அழைக்கப்படும் ராய்சக் கோட்டை, ம்ற்றும் டயமண்ட் ஹார்பரில் உள்ள லைட் ஹவுஸ் உள்ளிட்டவை பார்க்கத் தகுந்த இடங்களாகும். லைட் ஹவுள் 25 மீட்டர் உயரம் உள்ளது.
ராமகிருஷ்ண ஆசிரமும் இங்கு தான் அமைந்துள்ளது. ஆன்மீக அதிர்வலைகளை ஏற்றிக் கொள்ள விரும்புவோர் தவறாது செல்ல வேண்டிய இடம் இதுவே.
ஜாய் நகர் என்ற மகிழ்ச்சி நகரம் இங்கு அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.
இங்குள்ள கதியாரா என்ற இடத்தில் தான் ஹூக்ளி நதி, ரூப்நாராயண், தாமோதர் ஆகிய நதிகள் சந்திக்கின்றன. போட் சவாரி, சூரிய உதயம், அஸ்தமனக் காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் பயணிகளைக் கவர்ந்து இழுக்கும்.
சுந்தரவனக் காடு
சுந்தர்பன் காடுகள் என அழைக்கப்படும் இந்த காட்டில் சுந்தரி மரங்கள் இருப்பதால் இது அந்தப் பெயரைப் பெற்றது. உலகில் உள்ள ஈரநிலங்களிலேயே பெரிய நிலப்பரப்பு கொண்டது இதுவே. 3968 சதுரமைல் பரப்பளவைக் கொண்டது இது. வங்காளப் புலி, பறவை இனங்கள் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற இடம் இது. இங்குள்ள நீர்நிலைகளில் பெரிய அலைகள் ஆறிலிருந்து பத்து அடி உயரத்திற்கு எழுவதையும் சிறிய அலகள் எழும் போது சேற்று நிலம் சமதளமாக இருப்பதையும் கண்டு ரசிக்கலாம். இங்கு மொத்தம் 102 தீவுகள் உள்ளன.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ராயல் பெங்கால் டைகர் எனப்படும் வங்கப் புலிகள் இருக்கின்றன. பிரம்மாண்டமான இந்தப் புலிகள் ஒரே சமயத்தில் 65 பவுண்ட் இறைச்சியை உண்ண முடியும். இங்கு வாழும் புலிகள் உப்பு நீரில் நீந்தவும் வேட்டையாடவும் நன்கு பழகிக் கொண்டன. இது யுனெஸ்கோவின் மிகச் சிறந்த பாரம்பரிய தளமாக அமைகிறது. புலிகளைப் பார்க்க டைகர் சஃபாரி என ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என திட்டங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டு வாழ்க்கையை அனுபவிக்க விரும்புபவர்கள் இங்குள்ள போட் ஹவுஸில் தங்கி அதை அனுபவிக்கலாம்.
இங்குள்ள மீன்வளமும் இந்தியாவிலேயே மிகப் பெரிய மீன்வள இடமாகும்
சால்ட் லேக் சிடி
கொல்கத்தாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது சால்ட் லேக் சிடி எனப்படும் பிதான் நகர். பழைய காலத்தில் உப்பு நிறைந்த சதுப்பு நிலமாக இருந்ததால் சால்ட் லேக் சிடி என்ற பெயரைப் பெற்றது இது. இப்போதோ திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட அழகிய நகராக ஆகி விட்டது இது.
இதைச் சுற்றி நிறைய ஏரிகள் உள்ளதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இது அமைந்திருப்பதில் வியப்பில்லை.
சுத்தமான நகருக்குப் போக வேண்டும் என்றால் டெல்லிக்குச் செல்லுங்கள். பணக்கார இடத்திற்குப் போக வேண்டும் என்றால் மும்பைக்குச் செல்லுங்கள். ஹை-டெக் சிடிக்குப் போல விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டியது பங்களூருக்கு. ஆனால் ஆத்ம துடிப்புடன் பாரம்பரியம் கொண்ட நகரத்திற்குச் செல்ல விரும்பினால் உங்களுக்கான இடம் கொல்கொத்தா தான் என்பது புகழ் பெற்ற மேற்கோளாகும்!
காளிகா தேவியின் பெயரிலிருந்து உருவான கொல்கத்தா பண்பாட்டின் தலைநகரம் என்று புகழப்படுகிறது.
கொல்கத்தா போகலாம்; காளிதேவியின் அருளைப் பெறலாம்!
***