காஷ்மீரே சிறந்த இடம்! குருபாததாசர் கண்டுபிடிப்பு! —11 (Post No.14,590)

Written by London Swaminathan

Post No. 14,590

Date uploaded in London –  4 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-11

24. இனத்தில் உயர்ந்தவை

தாருவில் சந்தனம் நதியினில் கங்கைவிர

      தத்தினில் சோமவாரம்

தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்

      தலத்தினில்சி தம்பரதலம்

சீருலவு ரிஷிகளில் வசிட்டர்பசு விற்காம

      தேனுமுனி வரில்நாரதன்

செல்வநவ மணிகளில் திகழ்பதும ராகமணி

      தேமலரில் அம்போருகம்

பேருலவு கற்பினில் அருந்ததி கதித்திடு

      பெலத்தில்மா ருதம்யானையில்

பேசில்ஐ ராவதம் தமிழினில் அகத்தியம்

      பிரணவம் மந்திரத்தில்

வாரிதியி லேதிருப் பாற்கடல் குவட்டினில்

      மாமேரு ஆகும் அன்றோ

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

      மலைமேவு குமரேசனே.- குமரேச சதகம்- குருபாததாசர்

மரங்களில் சந்தனம்

மரங்ககளில் உயர்ந்தது சந்தானம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில் ஊதுபத்தி தன்னையே எரித்து தியாகம் செய்து நமக்கு மணம் தருவது போல, சந்தனமும்  தன்னையே அரைத்து தியாகம் செய்து நமக்கு மணம் தருகிறது அதனால்தான் அதை பெரியோரின் குணத்துக்கு ஒப்பிட்டனர் .

அடினும் ஆவின்பால் தன் கவை குன்றாது.23

சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது.24

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.25

புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.26

கலக்கினும் தண் கடல் சேறாகாது.27

அடினும் பால் பெய்து, கைப்பு அறாது என்று வெற்றி வேற்கை (அதிவீரராம பாண்டியர்) கூறுகிறது .

அம்பலவாணரும் இதையே சொன்னார்

குறைந்தாலும் பயன்படல்

Arappalisura satakam Verse 23

தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்

     சார்மணம் பழுதா குமோ!

  தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு

     சாரமது ரங்கு றையுமோ?

நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்

     நீள்குணம் மழுங்கி விடுமோ?

  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்

     நிறையுமாற் றுக்கு றையுமோ?

கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு

     கதிர்மதி கனம்போ குமோ?

  கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்

     காசினி தனிற்போ குமோ?

அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

—அறப்பளீசுர சதகம் by  அம்பலவாணர்

****

•             ஆறுகளில் கங்கை

கங்கை நீர், பிருந்தாவனத்துத் தூள் , பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தின்  மஹா பிரசாதம் இவை மூன்றையும் சாதாரணமாகக் கருதாதே.  இம்மூன்றும் பரப் பிரும்மத்தின் சொரூபங்களேயாம்- கங்கை பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் .

மேலும் தினமும் பல்லாயிரம்பேர் புனித நீராடுவதாலும்   கும்பமேளாவில் கோடிக் கணக்காணோர் நீராடுவதாலும்  கங்கையே புனிதம் மிக்கது என்று  தெரிகிறது

விரதத்தில் சோமவாரம்

விரதங்களில் சிறந்தது திங்கட்கிழமை விரதம் (சோமவாரம்)

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகழ்கிறார்

•             நிலத்தில் காஷ்மீரம் !!!!

ஆனால் நிலத்தில் சிறந்தது காஷ்மீர் என்று குருபாத தாசர் சொல்வது புதுமையாக இருக்கிறது காஷ்மீரின் இயற்கை அழகு உலகப் பிரசித்தி பெற்றது தற் காலத்தில் அதை இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றெல்லாம் அழைக்கிறார்கள் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகர், அமர்நாத் குகைக்கோயில் , வைஷ்ணவிதேவி குகைக்கோயில் முதலிய பல புனித இடங்கள் அங்கே உள்ளன ஆனால் குருபாததாசர் நிலங்களில் சிறந்தது என்று சொல்வைத்து வேறு எங்குமில்லாத புதுமையோ புதுமை!

காஷ்மீர் என்றால்  காஸ்யப ரிஷியால் உருவாக்கப்பட்ட ஏரி அல்லது கடல் எனப் பொருள்படும் இது முதலில் நீர்ப்பரப்பாக இருந்ததை நீல மத புராணமும் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணியும் பாடுகிறது நவீன புவியியல் ஆராய்ச்சியும் இதை உறுதி செய்கிறது; காஷ்மீர் பற்றி வேதத்தில் சொல்லாவிட்டாலும் விதஸ்தா நதியை ரிக் வேதம் குறிப்பிடுவதால்   இது வேத கால வரலாறு உடையது பின்னர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் அவருக்குப் பின்னால் வந்த பதஞ்சலியும் குறிப்பிடுகின்றனர் மஹாபாரத,  ராமாயணத்தில் காஷ்மீர் பிரதேசம் குறிப்பிடப்படுகிறது  இதனால்தான் குருபாத தாசரும் குறிப்பிட்டார் போலும்.  இந்து மன்னர்கள் ஆண்ட இந்த பூமியை முஸ்லீம்கள் 1200  CE வாக்கில் கைப்பற்றினர், காஷ்மீரில் ஆதிசங்கரர் அம்பாளின் பெயரில் ஸ்ரீநகரை உண்டாக்கியதோடு காஷ்மீர் குங்குமப்பூவினையும் ஹர்ஷ மாமன்னனும் ரத்னாவளி நூலில் குறிப்பிடுகிறார்  பின்னர் வராஹமிஹிரர் ப்ருஹத் ஸம்ஹிதாவில் போற்றுகிறார்.

காஷ்மீர் குங்குமப்பூ என்று சம்ஸ்க்ருத நூல்கள் பின்னவருமாறு வருணிக்கின்றன அதன் பெயரிலேயே காஷ்மீர் இருக்கிறது

Kaśmīraja (कश्मीरज).—m., n. saffron; कश्मीरजस्य कटुताऽपि नितान्तरम्या (kaśmīrajasya kaṭutā’pi nitāntaramyā) Bv.1.71. v. l.Derivable forms: kaśmīrajaḥ (कश्मीरजः), kaśmīrajam (कश्मीरजम्).

காஷ்மீரஜா is a Sanskrit compound consisting of the terms kaśmīra and ja (ज). See also (synonyms): காஷ்மீரஜன்மன்

 .

•             தலத்தில் சிதம்பரம்

சைவர்களுக்கு கோவிலென்றால் அது சிதம்பரமே!

பொன்னம்பலத்தில் நடராஜர் ஆடுவதாலும் மூவாயிரம் தீட்சிதர்கள் வாழ்வதாலும் சிதம்பரம் தனி மகிமை பெற்றது இதைப்பாடாத சைவ அடியார்கள் கிடையாது. நந்தனார்,  மாணிக்கவாசகர் அம்பலத்து  ஜோதியில் கலந்த இடம்.

கோயில்புராணம் என்றாலே  சிதம்பரம் பற்றியது என்று பொருள்

நந்தனார் சரித்திரம்

ஒவ்வொருநாளும் நந்தனார் ‘நாளைப் போவோம்’, ‘நாளைப் போவோம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்க்கு

‘நாளைப்போவார்’ என்றொரு நாமம் உண்டாயிற்று. நந்தனார் பிறகு ஒருநாள் மனத்துணிவோடு தில்லை சென்றனர்.. அப்பொழுது

சிவபெருமான் கோவில் தீட்சதர்கள் கனவில் தோன்றி, ‘பறையர் குலத்துதித்த நமது பக்தன் நந்தன் என்பான் ஒருவன் தன் பிறப்பை நினைந்து வருந்திக் கோபுர வாயிலருகே நிற்கின்றான். அவனை நீங்கள் தீயில் முழுகச் செய்து பிறப்பின் தூசைப் போக்கி, புனித

பிராமணனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டருளினார். .நந்தனார் அதற்கு மிகவும் மனமகிழ்ச்சியோடு ஒப்பித் தீக்குழிவெட்டி அதிற்குளித்தார். அவர் அதினின்றும் எழுந்தபோது முப்புரிநூல் முதலிய பிராமணச் சின்னங்களோடு கூடிய வேதிய வடிவாயிருந்தனர். அதைக் கண்டாரனைவரும் அதிசயித்து

நிற்க, நந்தனார் நடராஜர் திருநடனச் சபையை நாடிச் சென்றார். மற்றோரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் சிறிதுதூரம் சென்றதும் நந்தனார் அவர்கள் கண்ணுக்கு மறைந்துவிட்டார் என்பது பெரிய புராண செய்தி .

•             ரிஷிகளில் வசிட்டர்

ரிஷிகளில் சிறந்தவர் வசிஷ்டர் என்பதால் அவர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற க்ஷ்த்திரிய மன்னனான விசுவாமித்திரன் காத்திருந்து பின்னர் வசிஷட்டர்  சொன்னவுடன் பிரம்மா ரிஷி/ பிராமண ரிஷி  பட்டம் பெற்றதை   நாம் அறிவோம் இவர் இயற்றிய அல்லது பாடிய துதிகளும் ரிக்வேதத்தில் உள்ளன.

•             பசுவில் காமதேனு

பசு மாடு புனிதமானது; அதிலும் காமதேனு என்பது விரும்பியது எல்லாவற்றையும் கொடுக்கும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு.

•             முனிவரில் நாரதர் 

பக்திக்கு இலக்கணம் நாரதர்; அவர் எழுதிய நாரத பக்தி சூத்திரம் பக்தி பற்றி  விளக்குகிறது. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி•  

மணிகளில் பதுமராகம்

நவரத்தினங்களில் ஒன்று

•             மலர்களில் தாமரை

தமிழில் மலர் என்னால் தாமரை என்று பொருள். எல்லா இந்துப் பெண் தெய்வங்களுடனும் இணைந்த இந்த மலரை இந்தியா, தேசீய  மலர் ஆக்கியது இன்று நாட்டினை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னம்!

•             கற்பினில் அருந்ததி

“அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்” என்பது தமிழர்களின் திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இதில் அருந்ததி பார்த்தல் என்பது என்ன?

ஒவ்வொரு மணமக்களும் கல்யாணம் நடந்த அன்று இரவு சாந்தி முஹூர்த்த (முதல் இரவு) அறைக்குள் நுழைவதற்கு முன் கற்புக்கரசி அருந்ததி நட்சத்திரத்தைக் காணவேண்டும். எதற்காக?

“அருந்ததி போல கற்புக்கரசியாக வாழ்” என்று மணமகளுக்குச் சொல்வதற்காக இந்தச் சடங்கு. அது என்ன? பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? ஆண்களுக்குக் கிடையாதா? என்ற கேள்வி பலர் மனதில் எழும்.

ஆண்களுக்கும் இராம பிரான் போல

“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” –

என்ற கற்பு நெறியைத்தான் சான்றோர் வழங்கினர்.

யார் இந்த அருந்ததி?

வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காணலாம். எதிலும் கடவுளைக் காணும் இந்துக்கள் மட்டும் இதை சப்தரிஷி மண்டலம் என்று அழைத்தனர். சப்த என்றால் ஏழு என்று பொருள். அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் உலக மக்கள் இனத்தைத் தோற்றுவித்த முதல் எழுவர் ஆவர்.

பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் அந்திப் பொழுது நீர்க்கடனில் (ஸந்தியா வந்தனம்) இந்த எழுவரையும் தொழுவர். இதை சங்க இலக்கிய நூலான நற்றிணைப் பாடலும் உறுதி செய்யும். தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு நட்சத்திரங்களையும் தொழுததை நற்றிணை 231 பாடல் வரியில் காணலாம்:–

கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது). பாணினியின் அஷ்டாத்யாயியும் இதே வரிசையில் ஏழு ரிஷிகளை கூறுகிறார்

அருந்ததி என்பவள் கர்தம ரிஷியின் மகள். ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிட்டனின் மனைவி– உலக மஹா உத்தமி– கற்புக்கு அரசி–

உலகின் முதல் சட்ட நிபுணன் மனு வேறு ஒரு செய்தி சொல்கிறார். “கீழ்ஜாதியில் பிறந்த அக்ஷமாலா வசிஷ்டரின் மனைவியாக ஆகவில்லையா?” — ( மனு ஸ்மிருதி 9-23 ) என்று கூறுகிறார் (கணவன் அந்தஸ்து மூலம் மனைவியும் பெயர் வாங்க முடியும் என்ற தொனியில் கூறியது இது ). மஹாபாரதம் (1-224-27/29) இந்தக் கதையை உறுதி செய்கிறது. எது எப்படியானாலும் அவள் கற்புத் தெய்வம் என்பதில் எல்லோருக்கும் உடன் பாடே.

சங்கத் தமிழ் இலக்கிய நூல்கள் அவர்தம் புகழ் பாடுகின்றன. அதைத் தொடர்ந்து எழுந்த சிலப்பதிகாரம், திரிகடுகம் போன்ற நூல்களும் அருந்ததியின்ன் புகழை விதந்து ஓதுகின்றன. .

சிலப்பதிகாரம் வானளாவப் புகழும் கற்புக்கரசியான கண்ணகியின் பெயர் சங்கத் தமிழ் நூல்களில்  உண்டு.

இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—

1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)

மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)

3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)

பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.

4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்

சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)

8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)

9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.கம்பனும் வானளாவப் புகழ்ந்துள்ளான்

•             வலிமையில் தென்றல்

•             யானைகளில் ஐராவதம்

இது இந்திரனுடைய யானை

•             தமிழில் அகத்தியம்

தொல்காப்பியத்துக்கும்  முந்திய நூல் அகத்தியம்; நமக்கு அந்த நூல் கிடைக்கவில்லை ஆனால் மேற்கோள்கள் கிடைத்துள்ளன

•             மந்திரத்தில் பிரணவம்

ஓம் என்ற எழுத்தை ஓரெழுத்து, ஊமைஎழுத்து ,பிரணவம் என்றெல்லாம் சொல்லுவார்கள்

இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும்  தாங்குபவனும் பாட்டனும், கற்றுணரத்தக்கவனும் பரிசுத்தமளிப்பவனும், ஓம்காரப்பொருளும் அவ்வறே ருக், யஜுர், சாம வேதங்களும் நானே- பகவத் கீதை 9-17

குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8

****

 ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்

ஓமென்றெழுத்தே உயிராச்சு

ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை

யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்

****

ஓம்கார ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது என்பதை திருமூலரும் திருமந்திரத்தில் பா டுகிறார்

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628

•             கடலில் பாற்கடல்

பாற்கடலைக் கடைந்ததால் அமிர்தம் கிடைத்தது; மைத்ததை உண்டதால்தான் தேவர்கள் சாகா வரம் பெற்றனர் இன்றும் எந்தப்பொருள் ருசியாக இருந்தாலும் அமிர்தம் போல இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்

பாற்கடலைக் கடைந்தபோது ௧௪ ரத்தினங்களை வந்தன 14 “ரத்தினங்கள்:

சந்திரன் (சோம, நிலவு)

வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)

உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை

ஐராவதம் என்னும் யானை

காம தேனு என்னும் பசு/சுரபி

பாரிஜாதம் – மரம்

கற்பக விருக்ஷம் – மரம்

கௌஸ்துப மணி

குடை

காதுகளுக்கான தோடு

அப்சரஸ் – தேவலோக அழகிகள்

சங்கு

லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை

ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்

தன்வந்திரி – டாக்டர்

காலகூட விஷம்

அமிர்தம்

எந்த ஒரு செயலிலும் நல்லதோடு கெட்டதும் வரும்; நாம் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இது புகட்டும் நீதி.

•             மலைகளில் மேருமலை

மலைகளில் உயர்ந்தது மட்டுமல்ல மேரு அங்குதான் தேவி வசிக்கிறாள் பிராமர்களும் புரோகிதர்களும் பூஜைகளைத்துவங்கும் முன்னாள் சொல்லும் சங்கல்ப மந்திரத்தில் மேரு மலைக்கு எந்தப்பக்கம் இருந்து அதைச் செய்கிறோம் என்று இன்றும் சொல்கிர்சர்கள் கிறார்  

ஆகியவை தன் இனத்தில் தான் உயர்வு.

—SUBHAM—

Tags- இனத்தில் உயர்வு., காஷ்மீர் , குமரேச சதகம் , குருபாததாசர், காமதேனு, மேரு, பாற்கடல், அருந்ததி, வசிட்டர், நாரதர் , பிரணவம், ஓம்காரம் குங்குமப்பூசிதம்பரம், கங்கை, சந்தனம்

Leave a comment

1 Comment

  1. ramdaus's avatar

    ramdaus

     /  June 4, 2025

    How ridiculous this sound claiming to be from Lord Shiva!!

    //

    ‘பறையர் குலத்துதித்த நமது பக்தன் நந்தன் என்பான் ஒருவன் தன் பிறப்பை நினைந்து
    வருந்திக் கோபுர வாயிலருகே நிற்கின்றான். அவனை நீங்கள் தீயில் முழுகச்
    செய்து
    பிறப்பின்
    தூசைப் போக்கி
    , புனித பிராமணனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ //
    Just plain ridiculous!

Leave a comment