
Written by London Swaminathan
Post No. 14,593
Date uploaded in London – 5 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஒரு அன்னப் பறவையின் பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்போகிறார் . அவர் சொன்ன காரணம் ஏற்கனவே தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உள்ளது!
ஜூன் பத்தாம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆக்ஸ்யம் மிஷன்-4 விண்கலம் வானத்தில் பறக்கப்போகிறது. அதன் கேப்டன் சுபான்ஷு சுக்லா. அவர் 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கப்போகிறார் இதற்கு முன்னர் ராகேஷ் சர்மா விண்கலத்தில் சென்றதை நாம் அறிவோம் . ஆனால் இவர் 14 நாட்கள் விண்கலத்தில் தங்கி புதிய சாதனை செய்யப்போகிறார்
Why Indian astronaut Shubhanshu Shukla carrying swan doll to space?
Astronaut Group Captain Shubhanshu Shukla, who will pilot the Axiom-4 mission that has been rescheduled for June 10, said he would carry the hopes and dreams of 1.4 billion Indians into space.
தன்னுடைய பயணம் வெற்றியடைய இந்தியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில விண்கல ஏவுதளத்திலிருந்து அவர் பேசினார்
நாம் நட்சத்திரங்களைக்கூட அடைய முடியும் ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார் . நாங்கள் 14 நாட்களில் பல சாதனைகளை செய்யப்போகிறோம் என்றார்
இந்தியாவின் தேசீய வடிவமைப்புக் கழகம் செய்துள்ள பல பரிசுப் பொருட்களை சுக்லா, விண்வெளிக்கு கொண்டு செல்லப்போகிறார். அதில் ஒன்று அன்னப் பறவையின் பொம்மை . ஏன் அன்னப்பறவையின் பொம்மையை கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:
“அன்னப்பறவை மத ரீதியில் முக்கியம் வாய்ந்தது. பாலையும், தண்ணீரையும் பிரித்து பாலினை மட்டும் சாப்பிடும் அபூர்வ சக்தி இதற்குண்டு என்று நம்புகிறோம். இதன் பொருள் தூய்மை, விவேகம், அருள் ஆகியவற்றை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும் அறிவு விஷயத்தில் இது சம நிலையை உண்டாக உதவுகிறது இது எனக்குப் பிடித்த கருத்து . எனக்கு இப்பொழுது முழு உத்வேகம் வந்துவிட்டது ; பறக்கத்தயாராகி விட்டோம்” .
“நான் கொண்டு செல்லும் அன்னப்பறவை, நாங்கள் எடையற்ற தன்மையை அடைந்து விட்டோமா என்பதைக் காட்டும் அடையாளம்” (விண்வெளியில் பூமியிலிருக்கும் ஈர்ப்புவிசை இல்லாததால் ராக்கெட்டுக்குள் எல்லோரும் மிதப்பார்கள்; அது ஒரு தனி அனுபவம். அப்படி பறப்பதற்கு நீண்ட கால பயிற்சி பெற வேண்டும் )
1984- ம் ஆண்டில் ரஷ்ய விண்கலத்தில் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தியுடன் உரையாடினார் அதே போல பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசும் திட்டம் உண்டா என்று வினவியபோது பல முக்கியப்புள்ளிக்களு டன் தொடர்புகொள்ளும் திட்டம் உண்டு என்றி மழுப்பாலாக விடை தந்தார். விண்வெளி ஆராய்சசியுடன் தொடர்புடைய மாணவர்கள் அறிஞர்களுடன் பேசப்போவதாக அவர் தெரிவித்தபோது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .
முதலில் விண்வெளியில் பயணம் செய்த ராகேஷ் சர்மாவுடன், தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்தான் எனக்கு முன் உதாரணமாக விளங்கும் மனிதர் என்றும் அவருக்காக விண்கலத்தில் நான் ஒன்றைக் கொண்டுபோகப் போகிறேன் சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்! என்றார்.
மாம் பழ ரசம் , கேரட் ஹல்வா , பாசிப்பயறு ஹல்வா ஆகியவற்றையும் கொண்டு செல்வேன். இதை மற்ற வீரகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் சொன்னார்
இவருடன் செல்லும் குழுவினர் இரண்டு வாரங்களுக்கு விண்கலத்தில் தங்கி பல ஆராய்ச்சிகளை செய்யப்போகிறார்கள்
நாசா NASA என்னும் அமெரிக்க விண்வெளி அமைப்பின் வீராங்கனை Peggy Whitson, பெக்கி விட்சன் இந்த பயணத்தின் கமாண்டர் ஆவார்
நாங்கள் நடத்தப்போகும் ஆராய்ச்சிகள் மனித குலத்துக்குப் பயனுள்ள ஆராய்ச்சிகள் ஆகும் என்கிறார் பெக்கி . இந்தக் குழுவில் போலந்து, ஹங்கேரி நாட்டவர்களும் இருக்கிறார்கள் . ப்ளோரிடாவிலுள்ள கென்னடி ராக்கெட் தளத்திலிருந்து பால்கன் FALCON ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்வெளியில் மிதக்க விடப்படும் . The crew will lift off aboard Dragon on a SpaceX Falcon 9 rocket from Launch Complex 39A at NASA’s Kennedy Space Centre in Florida.
11 YEARS AGO I WROTE:

ஆய்வுக் கட்டுரை எழுதியவர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1155; தேதி:– ஜூலை 7, 2014.
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா?
பெரிய ஞானிகளை பரம ஹம்ச — (பெருமைமிகு அன்னம்)— என்று அழைப்பது ஏன்?
அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்?
பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ?
அதிசயச் செய்தி ஒன்று
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து — (நாலடியார்)
பொருள்:– கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.
Translation:– Learning has no bounds; the learners’ days are few and if they would calmly reflect, diseases are also many. Let them therefore carefully investigate and learn what is essential, making a good choice like the swan which drinks the milk separating it from the water.
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!
உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.
அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.
அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.
அதிசயச் செய்தி இரண்டு
பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?
உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் ( என்னுடைய ஒரு கட்டுரையில் இவரது அற்புதச் செயல்கள் உள்ளன.) எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.
ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–
ஓம் ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி
தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்
–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.
ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.
‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது. தத்தாத்ரேயர் என்ற முனிவர், இயற்கையில் உள்ள ஒவ்வொரு பிராணி, பறவை, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றது பாகவதத்தில் வருகிறது.
அதிசயச் செய்தி மூன்று
இன்னொரு விளக்கமும் சொல்லலாம்:–
அன்னப் பறவை தூய வெண்ணிறப் பறவை. இந்திய இலக்கியங்களில் வெள்ளை நிறம் என்பது தூய்மையயும், புகழையும் குறிக்கும். மேலும் அன்னப் பறவைகள் புனித இமயத்தில் மானசஸரோவர் என்ற நிர்மலமான ஏரியில் வசிப்பதைப் புற நானூற்றுப் புலவர்களும் காளிதாசனும் பாடுகின்றனர். அவை சூரியனை நோக்கிப் போவது போல உயரமாகப் பறப்பது, ஞானிகள் இறைவனை நாடிச் செல்வதைப் போன்றதே என்றும் புலவர்கள் புகழ்கின்றனர்.
அன்னப் பறவைகள் ஏகபத்னி (ஒருவனுக்கு ஒருத்தி) விரதம் கொண்ட பறவைகள் என்பதாலும் இந்துக்கள் விரும்புவர். பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம்!! விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்சாவதாரம். குட்டிகள் இடத்திலும், மனைவி இடத்திலும் பாசம் உடைய பறவை என்பதால் இந்திய இலக்கியங்கள் இவற்றை உவமைகளாகப் பயன்படுத்தும்.
வீட்டைவிட்டு ஓடிப்போன சித்தார்த்தனை (கௌதம புத்தர்), அன்னப் பறவை போல வந்துவிடு என்று புத்தசரிதம் சொல்லும்.
வேதத்தில் அன்னப் பறவைகள்
உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன:–
ரிக் வேதத்தில் (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;; அதர்வணம் AV 6-12-1 etc) கூட்டமாகப் பறப்பவை, பின்புறத்தில் கருப்பு வண்ணம் உடையவை, அதிக இரைச்சல் செய்பவை, இரவில் முழித்திருப்பவை என்று புலவர்கள் பாடுவர்.
இரட்டையர்களான அஸ்வினி தேவர்களை சோமயாகத்துக்கு அன்னப் பறவை போல ஜோடியாக வரவேண்டும் என்று ரிக்வேத ரிஷி பாடுகிறார் (RV 5-78-1).
சூரியனையும் உயர் நிலையிலுள்ள ஞானியையும் அன்னத்துக்கு ஒப்பிடுகிறது சிவ புராணம் (2-15-10)
மாங்குடிக் கிழாரும் சூரியனை நோக்கிப் பறக்கும் அன்னப்பறவை பற்றிச் சொல்கிறார் — (மதுரைக் காஞ்சி 385-386)
“ஒள்கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி”
ஆய்தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேகம் திரிதரும் – கலித்தொகை 69
இது ரிக்வேதத்தில் 1-163-10 வரும் வெள்ளைக் குதிரை பற்றிய பாடலின் எதிரொலி!!!அதிசயச் செய்தி நான்கு
மஹாபாரதத்தில் நள தமயந்தி கதையில் நளன், அன்னப் பறவையை தூது அனுப்புகிறான். தமயந்தி அதைப் பிடித்து விஷயத்தை அறிகிறாள். பரணரும் (நற்றிணை 356), பிசிராந்தையாரும் (புறம் 67) தென்கடலில் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்னங்கள் பொன் நிறம் பிரகாசிக்கும் இமயமலையை நோக்கிப் பறப்பதைப் பாடுகின்றனர். அவைகளை தூது விடுகின்றனர்.
அன்னச் சேவல் அன்னச் சேவல்
……………………
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் (புறம்.67)
நிலம்தாழ் மருங்கின் தென்கடல் மேய்ந்த
இலங்குமென் தூவி செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் — (நற்றிணை 356)
காளிதாசன் படைத்த ரகுவம்ச, மேகதூத காவியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.
எல்லாப் புலவர்களும் பெண்ணின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுவர் (அகம் 279)
படுக்கைத் தலையணைகளில் அன்னத் தூவி (சிறகு) வைத்துப் பயன்படுத்தினர்.
அதிசயச் செய்தி ஐந்து
ராமாயணத்தில் ஒரு கதை
ராமாயண, மஹாபாரதத்தில் நிறைய இடங்களில் அன்னம் பற்றிய உவமைகள் வருகின்றன. ஒரு சுவையான கதையும் உண்டு. அணிலுக்கு ஏன் முதுகில் மூன்று கோடுகள்?, காகத்துக்கு ஏன் ஒரு கண் குருடு? போன்ற பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அன்னத்துக்கு ஏன் தூய வெண்ணிறம் என்று தெரியுமா?
ராவணன் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக வருண பகவான் அன்னப் பறவையாக மாறினாராம். பின்னர் நன்றிக் கடனாக அன்னத்துக்கு என்றும் தூய வெண்ணிறத்தை அளித்தாராம் வருண பகவான்:–
வர்ணோ மனோரம: சௌப்ய சந்த்ரமண்டல சந்நிப:
பவிஷ்யதி தவோதக்ர: சுத்தனேண சமப்ரப: — 7-18-29
ஹம்சானாம் ஹி புரா ராம ந வர்ண: சர்வ பாண்டுர:
பக்ஷா நீலாக்ர சம்வீதா: க்ரோடா: சஸ்பாக்ர நிர்மலா: – 7-18-31
இதே போல மஹாபாரதத்திலும் அன்னப் பறவை பற்றி சில கதைகள் இருக்கின்றன.
ஆகவே அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை, கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!! Posted 7th July 2014 by Swaminathan
-சுபம்-
அன்னம், பால், தண்ணீர், உவமை, தமிழ் ,சம்ஸ்க்ருத நூல்கள், சுக்லா, விண்வெளிப் பயணம், அன்னம் பொம்மை, கேரட்டை ஹல்வா, காளிதாசன், சங்கப் புலவர்கள், ரிக் வேதம், ஐந்து அதிசயச் செய்திகள்