
AGATE NECKLACE FROM COLOMBO MUSEUM
Post No. 14,602
Date uploaded in London – 7 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-10
திருவிளையாடல் புராணத்தில் ( தி.வி.பு.) நவரத்தினங்களைப் பற்றிய அரிய செய்திகள் நிறைய இருக்கின்றன. இதற்கு உரை எழுதிய வேங்கடசாமிநாட்டார் சுக்ரநீதி மற்றும் சிலப்பதிகாரத்திலிருந்து நிறைய மேற்கோள்களைக் காட்டுகிறார் . வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவிலிருந்து நிறைய நவரத்னச் செயகிகளை முன்னர் கொடுத்தேன் ;இப்பொழுது தி.வி.பு. சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம் .
முன்கதைச் சுருக்கம்
வீரபாண்டியனென்ற மன்னன் காட்டில் வேட்டையாடப் போனான் ; அவனை புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனுக்கு நிறைய காமக்கிழத்திகள் உண்டு ; மன்னன் கொல்லப்பட்ட செய்தி பரவியவுடன் எல்லோரும் கஜானாவைத் திறந்து நவரத்தினங்களையும் நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு ஓடிவிட்டனர்; காரணம் என்னாவெனில் முறையான பட்டத்து இளவரசன் பச்சிளம் பாலகன். அவனுக்கு மகுடம் சூட்ட மந்திரிகள் திட்டமிட்டனர். ஆனால் நவரத்தின மகுடம் இல்லையே என்று கவலைப்பட்டனர் அப்போது அரண்மனை வாயிலில் ஒரு இரத்தின வியாபாரி தோன்றினார். அவர் வேறு யாருமில்லை ; சாஃஷாத் சிவபெருமானே !
அவர் தன்னிடமுள்ள ரத்தினங்களைக் காட்டி கவலைப்பட வேண்டாம் என்கிறார்; அப்போது ரத்தினங்களைக் காட்டி அவற்றின் தோற்றம் ,சிறப்பு ஆகியவற்றை விளக்குகிறார் .வலன் என்னும் அசுரனின் எலும்புகளிலிருந்து ரத்தினங்கள் தோன்றியதாகச் சொல்கிறார் ; இது சரியல்ல என்பதை தற்கால பூகற்பவியல் நூல்கள் GEOLGICAL SCIENCE காட்டுகின்றன; கடுமையான புவி அழுத்தத்தின் கீழ் பாறையில் சிக்கிய ரசாயனப் பொருட்கள் நவரத்தினங்களை உருவாக்குவதாக தற்கால விஞ்ஞானம் கூறுகிறது; ஆயினும் ரத்தினங்களை இந்துக்கள் வகைப்படுத்தி ஆராய்ந்தது போல வேறு எவரும் ஆராயவில்லை .
நவ (9) ரத்தினங்கள் என்று வகைப்படுத்தியது இந்துக்கள்தான் ; அவைகளுடன் வந்த வணிகன் கிழக்கு முகமாக இருந்து நீல நிற துணியை விரித்து எட்டுத் திக்கிலும் ரத்தினங்களை கொட்டினான் என்று பரஞ்சோதி முனிவர் வருணிக்கிறார்
இங்கு ததீசி முனிவர், வலாசுரன் கதைகள் வருகின்றன ; இந்திரன் யுத்தத்தில் வெற்றிபெறுவதற் காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார் அதைக்கொண்டு இந்திரன் வஜ்ராயுதம் செய்தான் .
இது ஒருபுறமிருக்க வலாசுரனும் தவம் செய்து சாகா வரம் பெற்றிருந்தான்; தானே சாக முன்வந்தாலும் அப்படி சாகும்போது தன்னுடைய எலும்புகள் நவரத்தினம் ஆகவேண்டும் என்று கேட்டிருந்தான் இந்த வரத்தை அவனுக்கு சிவபெருமான் தந்திருந்தார். இந்திரனும் வலனும் ஒரு சமயம் சண்டை செய்தபோது இந்திரன் தோற்றோடினான் ; ஆயினும் வலாசுரனைத் தந்திரமாக வெல்ல நினைத்து வலாசுரனிடம் உனக்குஎன்ன வரம் வேண்டுமோ அதைக்கேள் நான் தருகிறேன் என்றான் ; வலாசுரன் வெடிச் சிரிப்பு சிரித்து, இந்திரா நீதான் தோற்றோடியவன் ; உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்; நான் தருகிறேன் என்றான் ; அதாவது இந்திரன் விரித்த சதி வலையில் சிக்கினான் .
உடனே இந்திரன், நான் ஒரு யாகம் செய்யாப்போகிறேன்; அதற்குப் பலியிட யாகப் பசுவாக நீ வரவேண்டும் என்றான்; வலாசுரன் அதற்குச் சம்மதித்தான். அவனை யாகத்தில் பலியிட்டபோது அவனுடைய எலும்புகள் முன்னர் பெற்ற வரம் காரணமாக நவரத்தினங்களாக மாறின என்பது தி வி பு கதை . இங்கு பரஞ்சோதி முனிவர் சில நீதியையும் சொல்கிறார்
கொடுப்பதே பெருமை; வாங்குவது சிறுமையன்றோ என்று வலாசுரன் சொல்லிவிட்டு, தனது பசு உணவை யாவது தேவர்கள் சாப்பிட்டால் தனக்கு அழியாப்புகழ் உண்டாகும் என்றும் சொல்லிவிட்டு அரசாட்சியைத் தனது மகனிடம் ஒப்படைத்து யாகத்தில் பலியாகிறான்.
இந்த இடத்தில் ததீசி முனிவரின் உயிர்த் தியாகத்தையும் வலாசுரனின் உயிர்த் தியாகத்தையும் காட்டி பரோபகாரம் இதம் சரீரம் (இந்த உடல் இருப்பது, பிறருக்கு உதவி செய்யவே) என்னும் மிகப்பெரிய நீதியை பரஞ்சோதி முனிவர் காட்டுகிறார் .
அத்தோடு
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று— குறள் 236:
If man you walk the stage, appear adorned with glory’s grace;
Save glorious you can shine, ’twere better hide your face
என்பதையும் சொல்கிறார்.
இங்கு பரஞ்சோதி முனிவர் ஒரு உவமையை நமக்கு அளிக்கிறார் ; புரோகிதர்கள் யாகப் பசுவை கம்பத்தில் தர்பைப் புல்லினால் ஆன கயிற்றால் கட்டி, பசுவின் வாயை மூடி, மூச்சுத்திணறும்படி செய்து அதை யாகத்தில் பலியிட்டனர்; இது எப்படி இருந்தது என்றால் சிலந்தி நூலினால் சிங்கத்தைக் கட்டியது போல இருந்தது என்கிறார்.
****

(வணிகனாக வந்த சிவன் மாணிக்கம் விற்கிறார்; அபிஷேக பாண்டியன் சின்னப்பையனாக இருக்கிறார்; இவரை சிறு வயதில் பட்டம் ஏற்ற நெடுநஞ்செழியன் என்று சங்க நூல்கள் செப்புகின்றன .)
****
பசு மாட்டினை முழுதும் பலியிடுவதில்லை அதன் வபை யை எடுத்து ஆகுதி செய்தனர்
(வபை , வயிற்றுக் கொப்பூழினருகில் இருக்கும் நிணம் ;
The Tamil word “வபை” (vapai) translates to “omentum, caul, fat or marrow near the navel” in English. It refers to the fatty membrane that covers the intestines)
.
இங்கு ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்தச் சிறு பகுதியை மட்டும் யாகத்தீயில் போட்டு ஆளுக்கு கொஞ்சம் மட்டும் சாப்பிட்டது ஏன் ? மாமிசத்தை விரும்பி இருந்தால் நூறு ஆடு மாடுகளைக் கொன்றிருக்கலாமே அவற்றின் கை, கால், முதலிய உறுப்புகளையும் சாப்பிட்டிருக்கலாமே !
****
நவரத்தின உற்பத்தி
பசுவினுடைய
ரத்தம் – மாணிக்கம்
பற்கள் – முத்து
மயிர் – வைடூர்யம்
எலும்பு – வைரம்
பித்தம் – பச்சைக் கல் / மரகதம்
நிணம் – கோமேதகம்
தசை – பவளம்
கண்கள் – நீலக்கல்
கபம் – புஷ்பராகம்
ஆகிய நவ/ஒன்பது ரத்தினங்களாக மாறின.
*****
பின்னர் மாணிக்கம் கிடைக்கும் இடங்களை பரஞ்சோதி சொல்கிறார்
கிருத யுகத்தில் – மகத தேசம்
திரேதாயுகத்தில் – காளபுரம்
துவாபரயுகத்தில் – தும்பிரம்
கலியுகத்தில் – சிங்கள தேசம்
ஆகியவற்றில் மாணிக்கம் கிடைக்கும் என்கிறார்
இதில் இலங்கையில் இன்று வரை மாணிக்கம் கிடைப்பது உண்மை. இதை ந்தக்காலத்திலேயே தி வி பு சொல்லிவிட்டது வேறு தேசங்கள் எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.
பின்னர் மாணிக்கத்தின் ஒன்பது வகைகளை பூக்களின் பெயர்களைச் சொல்லி நிறம் குறிப்பிடுகிறார் யற்றை பிராமண க்ஷத்ரிய வைஸ்ய சூத்திர ஜாதி என்றும் வகை பிரிக்கிறார் .
தொடர்ந்து காண்போம் ………………………
Tags- நவரத்தினங்கள் , அரிய செய்திகள் -10 , திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-10