WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,605
Date uploaded in London – –8 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-6-25 கல்கி ஆன்லைனில் வெளியாகியுள்ள சிறுகதை
ஏஜியும் சூப்பர் ஏஜியும்!
(ARROGANT GIRL AND SUPER ARROGANT GENTLE MAN)
ச. நாகராஜன்
கணேஷ் வருத்தத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். அவருக்கு வந்த செய்திகள் நன்றாகவே இல்லை. ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு மூன்று மாத ஓய்வில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஓய்வாகப் படுக்கையில் படுத்திருந்தவருக்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தந்த செய்திகள் நன்றாகவே இல்லை.
ஓய்வாக இருக்கும்போது கம்பெனியை யார் கவனிப்பது?
கலிபோர்னியாவில் மேலாண்மை நிர்வாகத்தில் டிகிரி வாங்கிய தனது பெண் அகிலாவை தைரியமாக எம்.டி. ஆக்கி அவளையே நிர்வாகத்தைக் கவனிக்கச் சொல்லி அவர் பெருமிதமும் பட்டார். அமெரிக்காவில் நிர்வாக மேலாண்மைப் படிப்பு என்றால் சும்மாவா?
ஆனால் அகிலாவிற்கு ஷார்ட் டெம்பர் அதிகம். எதிர்பார்ப்பும் அதிகம். அமெரிக்கா போலவே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் இங்கு நடக்குமா?
தினசரி இரண்டு சஸ்பென்ஷன் ஆர்டரைக் கொடுத்தாள் அகிலா. டிஸிப்ளின்! டிஸிப்ளின்!. அனைவரும் நடுங்கினர். பட்டனைச் சரியாகப் போடவில்லை என்று செக்யூரிடிக்கு மெமோ.
மானேஜர் ஐந்து நிமிடம் லேட்டாக வந்தார் என்பதற்காக அப்படியே வீட்டிற்குப் போய்விட்டு மறு நாள் வந்தால் போதும் என்ற ஆர்டர்.
மேஜை மேல் ஃபைல்களைச் சரியாக அடுக்கவில்லை என்று 15 வருட சர்வீஸுடன் மிக விஸ்வாசமாக வேலை பார்த்த செக்ரட்டரி மேல் அகிலா பாய்ந்து பிடுங்க அவர் பயந்து போய் ஒரு வார லீவில் குல தெய்வ தரிசனத்திற்காக யாத்திரை போய் விட்டார்.
இது ஒரு பக்கம் என்றால் வாடிக்கையாளர்களிடமும் நெளிவு சுளிவுடன் நடக்க அகிலாவால் முடியவில்லை.
தனது நடத்தை தப்பு என்று அவளுக்குத் தெரியவில்லை. அதை நளினமாகச் சுட்டிக் காட்டிய இரண்டு பேருக்கு உடனடியாக பதவி இறக்கம் ஆர்டர் தரப்பட்டது.
இனி யார் தான் பேசுவார்கள்? தங்களுக்குள் ஏஜியின் ஆர்டர் என்று சொல்லிக் கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள்.
ஏஜி என்றால் அகிலா கணேஷ் என்று அகிலா நினைக்க கம்பெனிக்குள்ளோ அனைவருக்கும அராகண்ட் கேர்ள் தான் ஏஜி என்பதற்கு அர்த்தம் என்பது தெரியும்!
என்ன செய்வது? நெருங்கிய நண்பர் விஸ்வத்திடம் சொல்லி வருத்தப்பட்டார் கணேஷ்.
“கவலைப் படாதே நான் ஒரு ஆளை அனுப்புகிறேன். யுஎஸ்ஸ்லிருந்து வந்திருக்கிறார். கன்ஸல்டண்டாக 30 நாள் மட்டும் இங்கு இருப்பார். எப்படி கம்பெனியை முன்னேற்றலாம் என்பதைக் கவனிப்பார். எல்லா அதிகாரமும் அவருக்கு உண்டு என்று அகிலாவிடம் சொல்லி விடு” என்றார் விஸ்வம்.
“நீ சொல்வதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. ஜமாய்த்து விடு” என்றார் கணேஷ்.
ஆபீஸே அல்லோலகல்லோலப்பட்டது. வந்த இரண்டே நாளில் ஏஜிக்கு அது தான் – அராகண்ட் கேர்ளுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து விட்டார் யுஎஸ் கன்சல்டண்ட் எஸ் ஏ ஜி. – சிவகங்கை அனந்தராமன் கணபதி. ஆனால் இரண்டே நாட்களில் அனைவரும் அவரை சூபர் அராகண்ட் ஜெண்டில்மேன் என்று எஸ் ஏ ஜிக்கு அர்த்தம் சொன்னார்கள்.
“அகிலா! இப்படி இருந்தால் கம்பெனி உருப்படவே உருப்படாது. டிஸிப்ளின் வேணும் அகிலா, டிஸிப்ளின் வேணும்” என்றார் எஸ் ஏ ஜி.
“அதைத் தான் நானும் சொன்னேன், அங்கிள்!” என்றாள் அகிலா.
ஆனால் அகிலாவே திடுக்கிட்டுப் போனாள் செக்யூரிடி ஆபீஸரின் ஒரு மாத சஸ்பென்ஷன் ஆர்டரைப் பார்த்து.
ஒரு கரப்பை உள்ளே பார்த்தாராம் எஸ் ஏ ஜி. உடனடி சஸ்பென்ஷன்.
லை பார்ப்பவர்கள் உள்ளே வந்த சமயம் ‘கதவு திறந்த போது காற்றில் ஒரு கரப்பின் தோல் தான் உள்ளே வந்தது, மேடம்’ என்று செக்யூரிடி சொன்ன விளக்கத்தை ஏற்றுக் கொண்டாள் அகிலா. அதை எஸ் ஏ ஜியிடம் செக்யூரிடியின் சார்பில் சொன்ன அகிலாவிடம் ஒரு பொட்டலத்தைக் காண்பித்த அவர் அதில் இருந்த இரண்டு ஈக்களுக்கு என்ன பதில் என்று கேட்டார். ஆபீஸுக்குள்ளே ஈக்களைப் பார்த்தாராம் அவர்!
அகிலா திகைத்தாள்.
அடுத்த நாளில் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் சீஃப் அவுட். ஒரு ஸ்டேட்மெண்டில் இரண்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக்!
அக்கவுண்டண்ட் அரண்டு போனார் – யாருக்கும் அட்வான்ஸ் தரக்கூடாது என்ற ஆர்டரைப் பார்த்து.
மனிதாபிமானத்தின் பேரில் ஆஸ்பத்திரி, பள்ளி ஃபீஸ் செலவுக்காக சாலரி அட்வான்ஸ் கொடுப்பதில் என்ன தவறு? அதை அந்த மாத சம்பளத்திலேயே தான் பிடித்துக் கொள்கிறோமே” – இதைக் கேட்டதால் அவருடைய ஒரு வார சம்பளம் கட்!
அகிலாவுக்கு நிஜமாகவே தூக்கிவாரிப் போட்ட தருணம் தன் மேலேயே டிஸிப்ளின் ஆக்ஷன் வந்த போது தான்!
“அகிலா! ஏன் லேட், ஒரு நிமிடம்? இப்படி எல்லாம் எம் டி இருக்கக்கூடாது!”
‘“கீழே வேலை பார்ப்பவரை எப்போதும் உட்காரச் சொல்லாதே; நின்று கொண்டே அவர்கள் பேச வேண்டும்?”
“யாருக்கும் லீவ் கிடையாது. கம்பெனி ரன் பண்ண வேண்டுமில்லையா?”
“இப்படி ஒரு அராகண்ட் ஆளைப் பார்த்ததே இல்லை” என்று அகிலா மனம் திறந்து ஆபீஸில் பலருடனும் பேசி விட்டாள்.
இது எஸ் ஏ ஜிக்கு தெரிந்து விடப் போகிறது என்று ஒருவர் சொன்ன போது என் எம் டி வேலையே போனாலும் பரவாயில்லை. இப்படி அனைவரின் மனமும் புண்படுமாறு பேசுவதை என் அப்பாவிடம் கண்டிப்பாகச் சொல்கிறேன்” என்றாள் அகிலா.
“மேடம்! அவரது 30 நாள் கன்ஸல்டண்ஸி பீரியட் நாளையோடு முடிகிறது! அக்கவுண்ட்ஸை செட்டில் பண்ணவா?” என்று
அக்கவுண்டண்ட் கேட்டபோது ஆஹா! உடனே செய்யுங்கள் என்றாள் அகிலா.
மறுநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட எஸ் ஏ ஜி, அகிலாவிடம், “எப்படி ஆபீஸை நடத்த வேண்டும் என்று தெரிந்ததா” என்று கேட்ட போது அகிலா “நன்றாகத் தெரிந்தது, தேங்க்ஸ்” என்று கூறி அவருக்கு விடை கொடுத்தாள்.
அடுத்த நாள்.
காலை முதல் வேலையாக கடந்த 30 நாட்களிலும் அதற்கு முன்பும் போடப்பட்ட சஸ்பென்ஷன் ஆர்டர், பதவி இறக்க ஆர்டர், ஃபைன் முதலிய எல்லா பேப்பர்களையும் தன் மேஜைக்கு கொண்டு வரச் சொன்னாள் அகிலா. அக்கவுண்டண்டையும் மேனேஜரையும் அழைத்து எதிரே உட்காரச் சொன்னாள்.
“இந்த எல்லா ஆர்டரும் கேன்ஸல்ட். அனைவருக்கும் இழந்த பணத்தை உடனே காஷாகக் கொடுக்க வேண்டும். நானே என் கைப்பட பணத்தைக் கொடுக்கப் போகிறேன்” என்ற அகிலாவின் வார்த்தைகளை சந்தோஷமாக ஆமோதித்தனர் இருவரும்.
அத்துடன் இன்னொரு ஆர்டர் இருக்கு என்று கூறி நிறுத்தினாள் அகிலா.
எல்லோருக்கும் இன்று இலவச ஸ்வீட் ஆர்டர் பண்ணுங்கள். அவரவர் டேபிளில் வைத்தே அதைச் சாப்பிடலாம். அத்தோடு வீட்டுக்குக் கொண்டு பொக நல்ல ஸ்வீட் பாக்கட் ஒன்றையும் எல்லோருக்கும் தாருங்கள். முக்கியமாக செக்யூரிட்டியை மறந்து விடாதீர்கள்.” என்ற அகிலாவை வியப்புடன் பார்த்தனர் மானேஜரும் அக்கவுண்டண்டும்.
“எதற்காக என்று பார்க்காதீர்கள் எஸ் ஏ ஜி, எப்படி ஒரு ஆபீஸை நடத்த வேண்டும், எப்படி நடத்தக் கூடாது என்று எனக்குச் சொல்லித் தந்த பாடத்திற்காகத் தான் இந்த ஸ்வீட்” என்றாள் அகிலா.
வெளியே வந்து நடந்ததை அவர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட அனைவரும் ஏஜி – அகிலா கணேஷ் வாழ்க என்று கோஷமிட்டனர்.
“என்ன விஸ்வம்! இப்படி ஒரு டிராமா போட்டுட்டயே! என்ற கணேஷிடம், “பாவம் சிவகங்கை அனந்தராமன் கணபதி இப்படி சூப்பர் அராகண்ட் ஜெண்டில்மேனாக நடிக்க ரொம்ப சிரமப்பட்டுட்டேன் என்று என்னிடம் சொன்னார் என்றார் விஸ்வம்.
***