ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும் -பரஞ்சோதி சொல்கிறார்-11 (Post.14,606)

Written by London Swaminathan

Post No. 14,606

Date uploaded in London –  8 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள் -11

ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும் ; பேய்கள் ஓடிவிடும் -பரஞ்சோதி .

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-11

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு.) ரத்தினக் கற்களை அணிந்தால்  என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்ற அதிசயங்களைக் கூறுகிறார்; எந்தந்த கிழமையில் என்ன ரத்தினக் கற்களை ஆராய்ந்து பார்த்து மதிப்பிட வேண்டும்

என்பதையும் பட்டியல் இடுகிறார் ! நவரத்தினங்களின் குணங்கள், ஜாதிகள் என்ன என்பதையும் விளக்குகிறார்

இதை அவர் மாணிக்கம் விற்ற படலத்தில் சொல்கிறார்.

குருவிந்தந் தரிப்பவர்பார் முழுதுமொரு

     குடைநிழலிற் குளிப்ப வாண்டு

திருவிந்தை யுடனிருப்பர் சௌகந்தி

     கந்தரிப்போர் செல்வங் கீர்த்தி

மருவிந்தப் பயனடைவர் கோவாங்கந்

     தரிப்போர்தம் மனையியற் பாலும்

பெருவிந்த மெனச்சாலி முதற்பண்ட

     முடன்செல்வப் பெருக்கு முண்டாம்.

கீழே சொல்லப்படும் குருவிந்தம் செளகந்திகம், கோவாங்கம் என்பன மாணிக்கத்தின் RUBY வகைகள்;  இவைகள் என்ன பூக்களின் நிறத்தில் இருக்கும் என்றும் விளக்கியிருக்கிறார் பரஞ்சோதி முனிவர். (இதைக் கட்டுரையின் பின்பகுதியில் காண்க  )

குருவிந்தத்தினை அணிகின்றவர் நிலவுலக முற்றும்

தமது ஒரு குடை நிழலின் கீழ்த் தங்க அரசாண்டு,

திருமகளோடும் வீரமகளோடுங் கூடியிருப்பர்;

சௌகந்திகத்தினை அணிவோர்,

செல்வமும் புகழுமாகிய பொருந்திய இந்தப் பயன்களை

யடைவார்;

கோவாங்கத்தினை அணிவோரின் வீட்டில், பாலும் பெரிய மலையைப் போல நெல் முதலிய பல பண்டங்களின் குவைகளோடு செல்வப் பெருக்கமும் உண்டாகும் .

****

எள்ளியிடு குற்றமெலா மிகந் துகுண

     னேற்றொளிவிட் டிருள்கால் சீத்துத்

தள்ளியவிச் செம்பதும ராகமது

     புனைதக்கோர் தம்பா லேனைத்

தெள்ளியமுத் துள்ளிட்ட பன்மணியும்

     வந்தோங்குஞ் செய்யா ளோடும்

ஒள்ளியநற் செல்வமதற் கொப்பநெடும்

     பாற்கடலி னோங்கு மானே.

விலக்கப்பட்ட குற்றங்களெல்லாவற்றினின்றும் நீங்கி,

சிறந்த குணங்களைத் தன்னகத்தே கொண்டு ஒளி வீசி

இருளைப் போக்கிய, இந்தச் சிவந்த பதுமராக மணியை அணிகின்ற

தக்கோரிடத்து,  மற்றைச் சிறந்த முத்து முதலிய பல மணிகளும் வந்து பெருகும்;  அதற்குப் பொருந்த, திருமகளோடும் புகழைத் தருவதாகிய நல்ல செல்வமும், நெடிய பாற்கடலைப் போல வளரும்.

****

ரத்தினக்கற்களில் நல்லனவும் தீயனவும் உண்டு ; அவைகளுக்குள் கீறல், புள்ளிகள், உள்ளே நீர்க்குமிழி போன்ற தோற்றம் இவைகள் இருந்தால் எதிரிடையான பலன்கள் நேரிடும் . இதனால் குற்றம் இல்லாத என்ற அடைமொழியை பரஞ்சோதி போடுகிறார் .

குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உண்டு . ஒன்று அதை ஒரு அட்வான்ஸ் தொகை செலுத்தி வீட்ட்ட்டுக்குக் கொண்டு வந்து நல்ல செய்திகள் வருகிறதா, நல்லது ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும் . இரண்டாவதுவழி, ரத்தினம் விஷயத்தில் நிபுணராக இருப்பவரிடம் காட்டினால், உரிய கருவிகளைக் கொண்டு சோதித்துச் சொல்லுவார்.

****

இரண்டு டிட்பிட்ஸ் TITBITS செய்திகளைக் கூறுகிறேன் :

சில தினங்களுக்கு முன்னால், குறுக்கெழுத்துப் போட்டியை என்னுடைய பிளாக்கில் வெளியிட்டேன் ; குருவிந்தம் என்ற சொல்லினை எனது ஞாபக சக்த்தியால் எழுதினேன். அதை ஆனந்த விகடன் அகராதி மற்றும் கூகுள் அகராதிகள் செய்து பார்த்தும் கிடைக்காவில்லை! பின்னர் என்னிடமுள்ள திருவிளையாடல் புஸ்தகத்தில் கண்டுபிடித்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். 

இரண்டாவது செய்தி :

மதுரையில் வசித்த எனது தாயார் திருமதி ராஜலட்சுமி சந்தானத்தின் கைகள் ராசியான கைகள் ; இதனால் மதுரைக்கு வந்து நகை வாங்குவோர் என் தாயாரை அழைத்துக்கொண்டு தெற்காவணி மூலவீதிக்குச் செல்வார் . நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் பட்டொளி வீசிப் பறக்கும் தெரு அது; இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத வீதி என்பதை தி. வி.பு செட்டி தெரு வருணனையிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.

சொல்ல வந்த  விஷயம் என அம்மாவின் ராசியான கைகள் பற்றியது அல்ல ; அந்தக் காலத்தில் மக்கள் மீது இருந்த நம்பிக்கை ஆகும் ; என் அம்மா வாங்கும் அல்லது வாங்கிக் கொடுக்கும் வைரத்துக்கு முன்பணம் ஏதுமின்றி, “அம்மா, இது நல்ல வைரம் ; வீட்டுக்குக் கொண்டுபோய் ஒரு வாரம் வைத்துவிட்டு பணம் கொடுங்கள் என்பார்கள்; அதே படி,  நாங்களும் செய்த பொன்னான நாட்கள் அவை ; அந்த அளவுக்கு மக்களின் மீது நம்பிக்கை ! ஆனால் உங்களை நன்றாக அறிந்து இருந்தால்தான் செட்டியாரும் இதைச் செய்வார் ; நாங்கள் மதுரையின் வசித்த காலத்தில் அந்தக் காலத்தில் அங்கு ஜகஜ்ஜோதியாக இரவு வெளிச்சத்துடன் திகழ்ந்த அந்த வீதி முழுதும் செட்டியார் கடைகள்தான் இதை  பரஞ்சோதி முனிவரும் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு படலத்தில் எழுதியிருக்கிறார் நம்பிக்கை என்பதைச் சொல்லவே இதை எழுதினேன்.

தி. வி. பு. உரை எழுதிய வேங்கடசாமி நாட்டார் பல மேற்கோள்களையும் தருகிறார் ; இதோ பழைய நூல் பாடல்:-

மாணிக் கத்தியல் வகுக்குங் காலைச்

சமனொளி சூழ்ந்த விருநான் கிடமும்

நால்வகை வருணமு நவின்றவிப் பெயரும்

பன்னிரு குணமும் பதினறு குற்றமும்

இருபத் தெண்வகை யிலங்கிய நிறமும்

மருவிய விலையும் பத்தி பாய்தலும்

இவையென மொழிப வியல்புணர்ந் தோரே”

என்னும் பழைய நூற்பாவால் அறிக. (43)

****

எதிரியின் வாளும் அணுகாதாம்!

பிறநிறச் சார்பு புள்ளி புள்ளடி பிறங்கு கீற்று

மறுவரு* தராச மென்ன வகுத்தவைங் குற்றந் தள்ளி

அறைதரு பண்பு சான்ற வரதன மணியும் வேந்தன்

செறுநர்வா ளூற்ற மின்றிச் செருமகட் கன்ப னாவான்.

 (அவ்வவற்றிற்குரிய நிறமொழிந்த) வேறு

நிறம் பொருந்தலும், விந்துவும், காக பாதமும்,

விளங்குகின்ற தாரையும், குற்றம் பொருந்திய

ஒளி சலித்தலும், – என்று பாகுபாடு செய்த

ஐந்து குற்றங்களையும் ஒழித்து,

 (அவ்வவற்றிற்குக்) கூறிய குணம் நிறைந்த மணிகளை அணிகின்ற

மன்னன், பகைவரது வாளினால் இடையூறில்லாமல், செருமகட்கு வீரமகளுக்குத் தோழனாவான் .

குற்றங்களின் பட்டியல்

சரை மலம், கீற்று, சம்படி, பிளத்தல், துளை, கரு, விந்து, காக

பாதகம், மிருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல், கருகல், வெள்ளை, கல், மணல், பரிவு, தார், சாயையிறுகுதல், கருப்பத் துளை, கல்லிடை முடங்கல், திருக்கு என்பன குற்றங்கள் .

அவற்றுள், ஐந்து குற்றங்களைப் பொது வகையால் ஈண்டெடுத்துக் கூறினார்.

புள்ளடி – காகபாதம்; புள் – காக்கை. ஊற்றம் – ஊறு;

*****

குறுநிலக் கிழவ னேனு மவன்பெருங் குடைக்கீழ்த் தங்கி

மறுகுநீர் ஞால மெல்லாம் வாழுமற் றவனைப் பாம்பு

தெறுவிலங் கலகை பூதஞ் சிறுதெய்வம் வறுமை நொய்தீக்

கறுவுகொள் கூற்றச் சீற்றங் கலங்கிட வாதி யாவாம்.

 (இம்மணிகளை யணிபவன்) குறுநில மன்னாயினும், அவன் பெருங் கடல் சூழ்ந்த உலகமனைத்தும் பொருந்தி வாழ்வான்; பாம்பும் ,விலங்குகளும் பேயும் பூதமும் சிறு தெய்வங்களும் கூற்றின்/ எமனின் சினமும்,  அவனைத் துன்புறுத்த மாட்டா .

தெறு விலங்கு=  கொலைத் தொழிலையுடைய விலங்கு; சிங்கம் புலி முதலியன.

*****

மணிகளில் ஜாதிகள் !

முன்னவ ரென்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம்

மன்னவ ரென்ப துப்பு மாணிக்கம் வணிக ரென்ப

மின்னவிர் புருட ராகம் வயிடூயம் வெயிற்கோ மேதம்

பின்னவ ரென்ப நீல மரகதம் பெற்ற சாதி.

கற்று வல்லோர், சாதி வகையால், வயிரத்தையும்

கடலிற்றோன்றிய முத்தையும் DIAMONDS AND PEARLS அந்தணர் என்று கூறுவர்;

பவளத்தையும் மாணிக்கத்தையும் CORALS AND RUBIES அரசரென்று KSHATRIAS கூறுவர்;

மின்போல விளங்கும் புருட ராகத்தையும் TOPAZ, வயிடூரியத்தையும் (Cymophane அல்லது Cat’s eye), ஒளி பொருந்திய கோமேதகத்தையும் HASSONITE GARNETSவணிகர் என்று கூறுவர்;

 நீலத்தையும் மரகதத்தையும் SAPPHIRE AND EMERALDS சூத்திரரென்று கூறுவர் .

****

நவரத்தினங்களின் குணங்கள்

பார்த்திவர் மதிக்கு முத்தம் பளிங்கன்றிப் பச்சை தானுஞ்

சாத்திகந் துகிர்மா ணிக்கங் கோமேதந் தாமே யன்றி

மாத்திகழ் புருட ராகம் வயிடூயம் வயிரந் தாமும்

ஏத்திரா சதமா நீலந் தாமத மென்ப ராய்ந்தோர்.

நூல்களை ஆராய்ந்தோர், அரசர்கள் மதிக்கின்ற முத்தும், பளிங்கு – பளிங்கும், இவையல்லாமல், மரகதமும், சாத்துவிக

குணமுடையனவாம்,

பவளமும் மாணிக்கமும், கோமேதமும், புருடராகமும் வயிடூரியமும் வயிரமும்,   இராசத குணம் உடையனவாம்,

நீலமானது, தாமச குணம் உடையதாம்,

****

என்ன கிழமைகளில் ஆராய வேண்டும்?

எந்தந்த கிழமையில் என்ன ரத்தினக் கற்களை ஆராய்ந்து பார்த்து மதிப்பிட   வேண்டும் என்பதையும் பட்டியல் இடுகிறார் !

இனையவை யளந்து கண்டு மதிக்குநா ளெழுமான் பொற்றேர்

முனைவனாண் முதலா வேழின் முறையினாற் பதும ராகங்

கனைகதிர் முத்தந் துப்புக் காருடம் புருட ராகம்

புனையொளி வயிர நீல மென்மனார் புலமை சான்றோர்.

இம்மணிகளை ஆராய்ந்து பார்த்து மதிப்பிடும் நாட்கள்,

ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னாலாகிய

தேரினையுடைய சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமைSUNDAY

பதுமராகமும் ,முத்தும் பவளமும் பச்சையும் புருடராகமும்,

வயிரமும் நீலமும் என்று கூறுவர்

****

வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கு மாகும்

மையறு திங்க டானே வயிடூய மணிக்கு மாகும்

ஐயற விவையொன் பானு மாய்பவ ரகம்பு றம்பு

துய்யரா யறவோ ராய்மு சொன்னநா ளடைவே யாய்வர்.

ஞாயிற்றுக் கிழமையே, கோமேதக மணிக்கும் உரியதாகும்;

குற்றமற்ற திங்கட்கிழமையே, வயிடூய மணிக்கும் ஆகும்.

ஒன்பது மணிகளையும் உள்ளும் புறமும் தூய்மையுடையவராய். அறநெறியிற் செல்பவராய், முன் கூறிய கிழமைகளில் முறையே ஆராயக் கடவர் ;

பதுமராகத்திற்குக் கூறிய ஞாயிற்றுக் கிழமையே, கோமேதகத்திற்கும்,

முத்திற்குக் கூறிய திங்கட்கிழமையே, வயிடூரியத்திற்கும் ஆகுமென்றார்..

*****

மாணிக்கக் கல்லின் வகைகள்

மாணிக்கத்தின் பொதுநிறங்களைக் கூறிப் பின் நாற் சாதிக்கும்

உரிய நிறங்களைக் கூறுகின்றார்.

சாதரங்கம் பதுமராகமெனவும், குருவிந்தம் இரத்த விந்து எனவும், சௌகந்திகம் நீலகந்தியெனவும், கோவாங்கம் படிதமெனவும் பெயர் கூறப்படுதலுமுண்டு;

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்

விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்”

என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க.

****

சாதரங்க நிறங்கமலங் கருநெய்த

     லிரவியொளி தழல்கச் சோதம்

மாதுளம்போ ததன்வித்துக் கார்விளக்குக்

     கோபமென வகுத்த பத்தும்

மேதகைய குருவிந்த நிறங்குன்றி

     முயற்குருதி வெள்ள லோத்தம்

போதுபலா சலர் திலகஞ் செவ்வரத்தம்

     விதாரமெரி பொன்போ லெட்டு.

சாதரங்கத்தின் நிறம், தாமரை, மலரும், கருநெய்தல் மலரும்,

சூரியனொளியும்.,நெருப்பும், மாதுள மலரும், மாதுள வித்தும், முகிலும், தீபமும், இந்திர கோபமும், எனப் பாகுபாடு செய்த பத்துமாகும்;

*****

குருவிந்தத்தின் நிறம், குன்றி மணியும்,

முயலிரத்தமும் , வெள்ள லோத்த மலரும்,

முண் முருக்க மலரும், மஞ்சாடி மலரும்,

செவ்வரத்த மலரும்; முள்ளிலவ மலரும்,

பொன்னும் ஆகிய இவைகளைப் போலஎட்டு

வகையாகும்.

*****

வேறு நூல்களில் வேறு விளக்கம் காணப்படுகிறது:–

தாமரை கழுநீர் சாதகப் புட்கண்

கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு

மாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும்

ஓதுசா துரங்க வொளியா கும்மே”

என்னும் பழைய நூற்பாவிலும்,

சாதகப் புட்கண் டாமரை கழுநீர்

கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு

வன்னி மாதுளம் பூவிதை யென்னப்

பன்னு சாதுரங்க வொளிக்குணம் பத்தும்”

என்னும் கல்லாட அகவற் பகுதியினும் சாதுரங்க நிறத்துள் கார் கூறப்படாது  சாதகப் புள்ளின்கண் கூறப்பட்டிருத்தலும்;

திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக்

கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே

சிந்துரங் குக்கிற் கண்ணென வெட்டும்

எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே”

என்னும் நூற்பாவிலே, குருவிந்த நிறத்துள் செவ்வரத்தம், விதாரம் பொன்என்பன வின்றிச், செம்பருத்திப்பூ, சிந்துரம், குக்கிற்கண் என்பனவும்,

செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம்

முயலின் சோரி சிந்துரங் குன்றி

கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும்”

என்னும் கல்லாடப் பகுதியிலே விதாரமும் பொன்னும் இன்றிச், செம் பஞ்சு,சிந்துரம் என்பனவும் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலன.

—SUBHAM–

TAGS– ரத்தினங்கள், அணிந்தால், செல்வம்  ,பரஞ்சோதி,

நவரத்தினங்கள் ,அரிய செய்திகள் -11,

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-11

பலன்கள் ,குணங்கள், ஜாதிகள் , மாணிக்கம் விற்ற படலம்

Leave a comment

Leave a comment