ஆலயம் அறிவோம்! வட திருமுல்லை வாயில் (Post No14,610)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 610

Date uploaded in London –9 June 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-6-25 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்

    சூழ் கொடி முல்லையாற் கட்டிட்டு

எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு

    அருளிய இறைவனே, என்றும்

நல்லவர் பரவும் திருமுல்லைவாயில்

    நாதனேநரைவிடை ஏறீ

பல்கலைப் பொருளே படு துயர் களையாய்

   பாசுபதா பரஞ்சுடரே!

                 – சுந்தரர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் தொண்டைமண்டலத்தில்அமைந்துள்ள வடதிருமுல்லைவாயில் திருத்தலமாகும்.

சென்னை – ஆவடி சாலையில் சென்னையிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் ஆவடியை அடுத்து அமைந்துள்ளது இது.

தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லை வாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகிறது.

இறைவர் :  மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்

இறைவியார் : கொடியிடை நாயகி அம்மன்

தல விருட்சம் : முல்லை (இது வெளிச்சுற்றில் நந்தியின் அருகில் உள்ளது)

தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்

பண்டைய காலத்தில் கிருத யுகத்தில் இரத்தினபுரமாகவும் திரேதா யுகத்தில் வில்வ வனமாகவும், துவாபர யுகத்தில் சண்பக வனமாகவும் விளங்கி இப்போது கலி யுகத்தில் முல்லைவனமாகத் திகழ ஆரம்பித்தது.

இத்தலத்தைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

முன்பொரு காலத்தில் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு தொண்டைமான் அரசாட்சி புரிந்து வந்தான். அதே சமயம் புழல்கோட்டையிலிருந்து கொண்டு ஓணன் மற்றும் காந்தன் என்னும் அசுரர்கள் எருக்கத் தூண்களும் வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் அரசாண்டு வந்தனர்.  இவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோவில் ஓணகாந்தந்தளி என்ற தலமாகும்.

இவர்களைக் காண தொண்டைமான் வந்த போது  கோழம்பேடு என்னும் இடத்தில் இரவு நேரத்தில் தங்கி உறங்க ஆரம்பித்தான். அப்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்கு ஒரு சிவத்தலம் இருக்க வேண்டும் என்று எண்ணிய அவன் மறு நாள் காலை யானை மீது ஏறி வந்தான். அப்போது அசுரர்களான ஓணனும் காந்தனும் அவனை எதிர்த்தனர். தனியாக வந்த தொண்டைமான் தன் சேனைகளுடன் வருவதற்காகத் திரும்பினான்.

அப்போது அவன் யானையின் கால்கள்  முல்லைப்புதர் ஒன்றில் மாட்டிக் கொள்ள மன்னன் தன் உடைவாளால் முல்லைப்புதரை வெட்டினான். அங்கிருந்து இரத்தம் பீறிட்டது. உடனே கீழே இறங்கிப் பார்த்த தொண்டைமான் அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

திகைத்துப் போன தொண்டைமான் தன்னை தனது வாளால் அரிந்து கொள்ள முயன்றான். அப்போது இறைவன் அவனுக்குக் காட்சி தந்து அருளினான். “ மன்னா! நான் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லை. நான் மாசு இல்லா மணியே தான். வருத்தப்படாதே. உனக்குத் துணையாக நந்தியை அனுப்புகிறேன். வெற்றி பெற்று வருக” என்று இறைவன் அருளவே நந்தியுடன் தொண்டைமான் கிளம்பினான்.

அவன் நந்தியுடன் வருவதை அறிந்த ஓணனும் காந்தனும் அவனிடம் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து  அந்த மன்னன் இரு எருக்கத்தூண்களை எடுத்து வந்தான். அந்தத் தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. 

வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும் காலைப் போக்கில் அவை வெள்ளத்தின் வசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள நந்தி இதன் காரணமாக கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகளை உடைய ராஜ கோபுரம் தெற்கு பார்த்து உள்ளது. அருகில் தீரத்த குளம் உள்ளது.

ராஜகோபுரத்தின் எதிரே சந்நிதி வீதியில் பதினாறு கால் மண்டபமும் அருகில் வசந்த மண்டபமும் உள்ளன.

ராஜகோபுர வாயில் துவாரபாலகர்கள் உள்ளனர். நுழைந்தவுடன் எதிரே பிரசன்ன விநாயகரைத் தரிசிக்கலாம். அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றைச் சுட்டிக் காட்டும் யானை மீதிருந்து மன்னன் முல்லைக் கொடியை வெட்டுவது, சிவலிங்கம், மன்னன் தன் கழுத்தை அரிவது, இறைவன் காட்சி தருவது ஆகிய சிற்பங்கள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

கோவிலை வலமாக வரும்போது கல்யாண மண்டபம் உள்ளது. மண்டபத்தினுள் அம்பாள் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும், சுப்ரமண்யர் சந்நிதியும் உள்ளன,  இங்கு முருகபிரான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது இரு தேவியருடன் வடக்கு வெளிபிரகாரத்தில் எழுந்தருளியுள்ளார்.

வெளி பிரகாரத்தில் வில்வ மரம் உள்ளது. பைரவர் சந்நிதியும் உள்ளது.

ஸ்வயம்பு லிங்கம் உயரமாக உள்ளது. லிங்கம் மேற்புறத்தில் வெட்டுடன் காணப்படுகிறது.

எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருப்பதால் அபிஷேகம் சிரசில் கிடையாது. அபிஷேகம் சதுரபீட ஆவுடையாருக்கு மட்டுமே உண்டு. அதுவும் வெந்நீரால் இந்த அபிஷேகம் நடைபெறும்.

 வருடத்திற்கு ஒரு முறை சித்திரை மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சந்தனக்காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப்படுகிறது.

 மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள் உள்ளன. இவற்றிற்கு பூண்கள் இடப்பட்டுள்ளன.

விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையதாகும்.

சுவாமிக்கு முன்பு வெளியில் தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு, பூதேவி, ஶ்ரீ தேவி திருவுருவங்கள் உள்ளன.

இன்னும் பைரவர், அருணகிரி, க்ஷிப்ர கணபதி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்களையும் காணலாம்.

சுந்தரர் இங்கு ஒரு பதிகம் அருளியுள்ள்ளார். ‘அடியேன் படு துயர் களையாய்’ என்று நெஞ்சை உருக்கும் வண்ணம் அது அமைந்துள்ள ஒன்றாகும்.

அருட்பிரகாச வள்ளலார், இத்தலத்தில் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்தில் மூன்று திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளனர்.

மாசிலாமணீஸ்வரரின் கர்பக்ருஹத்தைச் சுற்றி 23 கல்வெட்டுகள் உள்ளன.

 காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை கொடியிடைநாயகி அம்மையும் மாசிலாமணீஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

Leave a comment

Leave a comment