Post No. 14,611
Date uploaded in London – 9 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் எட்டாம் தேதி 2025-ம் ஆண்டு .
(Collected from popular newspapers and edited for broadcast)
முதலில் இந்தியச் செய்திகள்!
குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் இறைச்சி, முட்டை உட்பட அனைத்து வகையிலான அசைவ உணவுகளைத் தடை செய்து உலகின் முதல் சைவ நகரமாக உருவெடுத்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் சமண துறவிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அந்த நகரத்தில் அசைவ உணவுகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு சமண மதத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும், அவர்களின் மத நம்பிக்கைக்கு மரியாதை அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
*****
என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்; எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி
அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது என் வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று,” என ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் கூறினார்.
எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க், இந்தியா வந்துள்ளார். அவர் இன்று உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க் உடன் வந்திருந்தார். அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் அவர்கள் சென்றனர்.
ராமர் கோவில் பயணம் குறித்து எரோல் மஸ்க் கூறியதாவது:
தனது வாழ்நாளின் மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று, இந்தியா அருமையான, அற்புதமான நாடு. இந்திய கலாசாரம், விருந்தோம்பல்,அன்பு, கருணை நிறைந்த மக்கள் கொண்ட நாடாக உள்ளது. இந்தியா ஒரு அற்புதமான இடம். முடிந்தவரை பலர் இந்தியாவுக்கு வர வேண்டும்,
எங்களிடம் சில வணிக திட்டங்கள் உள்ளன, அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா-அமெரிக்க உறவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. இவ்வாறு எரோல் மஸ்க் கூறினார்.
*****
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு
38 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளதை தொடர்ந்து 581 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர், jammers, ஜாமர்கள் மற்றும் drones.ட்ரோன்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், கடல் மட்டத்தில் இருந்து 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை,- ஆகஸ்ட் மாதங்களில் இங்கு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது மட்டுமே இந்த குகை கோவில் திறந்திருக்கும். இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி துவங்கி ஆக., 9 வரை 38 நாட்கள் மட்டுமே அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு 52 நாட்கள் யாத்திரை நடந்த நிலையில், இந்தாண்டு 38 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் சென்று இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்தாண்டு பாதுகாப்பு பணியில் 581 Central Armed Police Forces (CAPF) companies மத்திய ஆயுதப்படையின் 581 கம்பெனி வீரர்கள், ஜாமர்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு யாத்ரீகர்கள் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக அவர்கள் செல்லும் பாதையை நோக்கி வரும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்படும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்வார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற கே 9 பிரிவினரும் மற்றும் வான்வெளியில் கண்காணிப்பில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. பஹல்காம் மற்றும் அமர்நாத் குகை சொல்லும் வழியில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
முதல்முறையாக யாத்ரீகர்கள் செல்லும் வாகனம் வழியில் jammers ஜாமர்கள் பொருத்தப்படும். இந்த வாகனத்தை மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
*********
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா, வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
*****
கோவில் விழாக்களில் ஆடல் பாடல்- கோர்ட் உத்தரவு
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக் கோரி 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர்கள், கடந்த பல ஆண்டுகளாக ஆடல், பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை காட்டி அனுமதி மறுக்கின்றனர். அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறினர்.
இதனைக்கேட்ட நீதிபதி,
சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யபடுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
மனுதாரர்கள் ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும். இதனால், உங்கள் கிராமம் செழிப்பாக இருக்கும் எனக்கூறி மனுக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
****
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
தொன்மை வாய்ந்த திருச்செந்துறை கோவிலை தெருவில் விட்டது அரசு என்று ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திருச்சி ஜீயபுரம் பகுதியில் உள்ள திருச்செந்துறை கோவில், எப்படிப்பட்ட கோவில் என்பது குறித்து திருச்சி மக்களுக்கு தெரியாத தகவல்கள் உள்ளது. இக்கோவிலை இன்று காலை 9 மணிக்கு திறந்தனர். நேற்று 7 20 மணிக்கு மூடி உள்ளனர். எந்நேரமும் எரிய வேண்டிய விளக்கு எரியவில்லை. காலை 9:15 மணிக்கு தான் முதல் விளக்கை ஏற்றினர்.
சோழ மன்னன் ஆதித்ய தேவரின் மகன் பராந்தகன். இவரது பெயர் சோழப்பெருமானடிகள். இவரது மகன் அரிகுலகேசரியார். இவரது தேவியார்தான் கோவிலை கட்டி உள்ளார்.
மங்கள வாத்தியம் இசைப்பவர்கள் வாழ வேண்டும் என்பவருக்காக, பல நூறு ஆண்டுகளுக்கு எந்நேரமும் மங்கள வாத்தியம் பாட வேண்டும் என்பதற்காக தங்கம் கொடுத்து உள்ளார். அதனை ஈசான மங்களம் மகாசபைக்கு கொடுத்தார். அதில் நிலத்தை வாங்கி, இந்த குடும்பத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பவர்களுக்கு வழங்கி உள்ளனர். அவர்கள் கருவறைக்கு அருகே நின்று வாசிப்பார்கள்.
ஆனால், 20 ஆண்டுக்கு முன்பு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அப்படிப்பட்ட நிகழ்ச்சி கோவிலில் இல்லாமல், தொன்மையான கோவிலை அறநிலையத்துறை தெருவில் விட்டுவிட்டது. இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.
*****
கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெங்களூரு நிகழ்வு பற்றிய கேள்விக்கு, மக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக்கூடாது என மனோ தங்கராஜ் பதில் அளித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்
கோவில் சொத்துகளை சுரண்டும் கூட்டம், மக்கள் கோயில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பகுத்தறிவு பேசுவதாக விமர்சித்துள்ளார்.
இண்டி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் திமுக தலைவரிடம் இவ்வாறு கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
****
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு!

கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவையின் கட்டணத்தை உயர்த்தி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலா படகு சேவையின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் 75 ரூபாயாக இருந்த கட்டணம், 100 ரூபாயாகவும், மாணவர்களுக்கு 30 ரூபாயாக இருந்த கட்டணம் 40 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு
கடந்த சில தினங்களுக்கு முன் அமலுக்கு வந்துவிட்டது. நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைகால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை வழங்கப்பட்டு வருகிறது.
****

சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
மங்களூரு பாஜ்பே அருகே இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், பன்ட்வாலில் நடந்த அப்துல் ரஹிமான் கொலை வழக்கில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாட்டே சாந்திகுட்டேவைச் சேர்ந்த அப்துல் ரசாக் (59). முக்கிய குற்றவாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், அவர்கள் தப்பிக்க உதவியதாகவும் அப்துல் ரசாக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முசாமிலின் தந்தை அப்துல் ரசாக் ஆவார். அப்துல் ரசாக், மகன் முசாமில் மற்றும் மருமகன் நௌஷாத் ஆகியோருடன் சேர்ந்து சுஹாஸ் ஷெட்டியைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மே 1 ஆம் தேதி இரவு, மங்களூர் நகரின் பாஜே அருகே இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி வாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்..
****
பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
இன்று ஜூன் 8-ம் தேதி பத்மநாபசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது
மிகப் பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அறிவுறுத்தலின்படி, புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
பின் கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், மீண்டும் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று அண்மையில் முடிவுற்றன. விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடந்தது.
****
கடைசியாக ஒரு சுவையான வெளிநாட்டுச் செய்தி
விண்கலத்தில் செல்லும் தமிழ், சம்ஸ்க்ருத அன்னப்பறவை!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஒரு அன்னப் பறவையின் பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்போகிறார் . அவர் சொன்ன காரணம் ஏற்கனவே தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உள்ளது!
ஜூன் பத்தாம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆக்ஸ்யம் மிஷன்-4 விண்கலம், வானத்தில் பறக்கப்போகிறது. அதன் கேப்டன் சுபான்ஷு சுக்லா. அவர் 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கப்போகிறார் இதற்கு முன்னர் ராகேஷ் சர்மா விண்கலத்தில் சென்றதை நாம் அறிவோம் . ஆனால் இவர் 14 நாட்கள் விண்கலத்தில் தங்கி புதிய சாதனை செய்யப்போகிறார்
தன்னுடைய பயணம் வெற்றியடைய இந்தியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில விண்கல ஏவுதளத்திலிருந்து அவர் பேசினார்
நாம் நட்சத்திரங்களைக்கூட அடைய முடியும் ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார் . நாங்கள் 14 நாட்களில் பல சாதனைகளை செய்யப்போகிறோம் என்றார்
இந்தியாவின் தேசீய வடிவமைப்புக் கழகம் செய்துள்ள பல பரிசுப் பொருட்களை சுக்லா, விண்வெளிக்கு கொண்டு செல்லப்போகிறார். அதில் ஒன்று அன்னப் பறவையின் பொம்மை . ஏன் அன்னப்பறவையின் பொம்மையை கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:
“அன்னப்பறவை மத ரீதியில் முக்கியம் வாய்ந்தது. பாலையும், தண்ணீரையும் பிரித்து பாலினை மட்டும் சாப்பிடும் அபூர்வ சக்தி இதற்குண்டு என்று நம்புகிறோம். இதன் பொருள் தூய்மை, விவேகம், அருள் ஆகியவற்றை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும் அறிவு விஷயத்தில் இது சம நிலையை உண்டாக உதவுகிறது இது எனக்குப் பிடித்த கருத்து . எனக்கு இப்பொழுது முழு உத்வேகம் வந்துவிட்டது ; பறக்கத் தயாராகி விட்டோம்” .
“நான் கொண்டு செல்லும் அன்னப்பறவை, நாங்கள் எடையற்ற தன்மையை அடைந்து விட்டோமா என்பதைக் காட்டும் அடையாளம்”
மாம் பழ ரசம் , கேரட் ஹல்வா , பாசிப்பயறு ஹல்வா ஆகியவற்றையும் கொண்டு செல்வேன். இதை மற்ற வீரகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் சொன்னார்
இவருடன் செல்லும் குழுவினர் இரண்டு வாரங்களுக்கு விண்கலத்தில் தங்கி பல ஆராய்ச்சிகளை செய்யப்போகிறார்கள்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
ஜூன் மாதம் 15–ம் தேதி
லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam news, 862025, broadcast