முத்துமாலை அணிந்தால் ஆயுள் வளரும்; பணம் சேரும்! பரஞ்சோதி தகவல்-12 (Post No.14,612)

Written by London Swaminathan

Post No. 14,612

Date uploaded in London –  9 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.

நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள் -12

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-12

முத்துக்கள்  எங்கெங்கு உற்பத்தியாகின்றன என்று விரித்துவிட்டு அவைகளின் பெயர்களையும் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் :

பான்முத்தம் வருணன் முத்தம்

     பகன்முத்தம் பகலோன் முத்தம்

மான்முத்த நீல முத்த

     மாசறு குருதி முத்தங்

கான்முத்தம் பசிய முத்தங்

     காலன்றன் முத்தந் தேவர்

கோன்முத்தம் பொன்போன் முத்தங்

     குணங்களும் பயனுஞ் சொல்வாம்.

 பால் போன்ற வெள்ளை நிற  முத்துக்கள் வருணனுக்குரிய முத்தங்களாகும்;

சூரியன் போன்று செந்நிறம் வாய்ந்த முத்தங்கள் சூரியனுக்குரிய

முத்தங்களாகும்;

நீல நிறமுடைய முத்தங்கள் திருமாலுக்குரிய முத்துக்கள் ;

குற்றமற்ற குருதி நிறத்தினையுடைய முத்தங்கள் வாயு தேவனுக்குரிய முத்துக்கள்;

பச்சை வர்ண முத்துக்கள்  எமன் /கூற்றுவனுக்குரிய முத்தங்களாகும்;

பொன்னைப் போலும் நிறம் வாய்ந்த முத்தங்கள்,

தேவேந்திரனுக்குரிய முத்தங்களாகும்;

(இனி) அவற்றின் குணங்களையும் அணிவோரடையும் பயனையும் கூறுவோம்

*****

உடுத்திர ளனைய காட்சி யுருட்சிமா சின்மை கையால்

எடுத்திடிற் றிண்மை பார்வைக் கின்புறல் படிக மென்ன*

அடுத்திடு குணமா றின்ன வணியின்மூ தணங்கோ டின்மை

விடுத்திடுந் திருவந் தெய்தும் விளைந்திடுஞ் செல்வம் வாழ்நாள்.

1.உடுக்( விண்மீன்) கூட்டத்தினை ஒத்த தோற்றமும், 2.திரட்சியும், 3.குற்றங்களில்லாமையும்,4.கையினால் எடுத்தால் திண்ணென்றிருத்தலும்,5.நோக்கத்திற்கு இன்பஞ் செய்தலும், 6. படிகம்

போன்று தெளிந்திருத்தலும்,  என்று குணங்கள் ஆறாகும்;

இம் முத்துக்களை அணிந்தால் (அணிவோரைத்)

வறுமையும் (விட்டு) நீங்கும்; – திருமகள் வந்து சேருவாள்;

செல்வமும் வாழ்நாளும் மிகும்.

****

வைரம்தான் சிறந்த ரத்தினம் !

மாமணி மரபுக் கெல்லாம் வயிரமே முதன்மைச் சாதி

ஆமென வுரைப்பர் நூலோ ரதிகம்யா தென்னி னேனைக்

காமரு மணிகட் கெல்லாந் தமரிடு கருவி யாமத்

தூமணி தனக்குந் தானே துளையிடுங் கருவி யாகும்.

வைரம் ஏன் சிறந்தது என்றால் உலகிலேயே கடினமான பொருள் வைரம்தான் . மற்ற  நவரத்தினங்களைத் துளை போட வைர ஊசியைத்தான் பயன்படுத்துகிறார்கள் ; மேலும் வைரத்தைத் துளைபோட வல்லது வைர ஊசி மட்டுமே 

நவரத்தின   நூலாராய்ச்சி வல்லுநர்கள் , பெருமை

பொருந்திய மணிகளில் வயிரமே முதற் சாதியாம் என்று

கூறுவர்;  அம் முதன்மை எதனாலென்னில்,  அந்தத் தூய்மையுடைய வயிரமணி,  மற்றைய மணிகளனைத்திற்கும் தொளையிடுங் கருவியாகும் (அன்றி),  தனக்கும் தானே தொளை செய்யும் கருவியாகும்

வைரம் உயர்ந்தது, பவளம் தாழ்ந்தது

     ‘நவமணிகளுள் வயிரமே எல்லாவற்றினுஞ் சிறந்ததாகும்; கோமேதகமும், பவழமும் எல்லாவற்றினும் தாழ்ந்தனவாகும்; மரகதமும், மாணிக்கமும், முத்தும் தலையாய மணிகளாம்; இந்திர நீலமும், புட்பராகமும், வைடூரியமும் இடையாய மணிகளாகும்.’ என்று சுக்கிர நீதியிற் கூறப்பட்டுளது. வயிரம் எல்லாவற்றினும் கடினமானது .

வயிர வூசியு மயன்வினை யிரும்பும்

செயிரறு பொன்னைச் செம்மைசெ யாணியும்

தமக்கமை கருவியுந் தாமா மவைபோல்

உரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே”

என்னும் சூத்திரம் இங்கு நோக்கற் பாலது. (61)

*****

மரகதம் / பச்சைக் கல்லின் தோற்றம்

வலாசுரனின் பித்தம்தான் மரகதம் ஆகியது; இதை கருட ரத்தினம் என்றும் சொல்லுவார்கள்.

மரகதத் தோற்றங் கேண்மின் வலாசுரன் பித்தந் தன்னை

இரைதமக் காகக் கௌவிப் பறந்தபுள் ளீர்ந்தண் டில்லித்

தரைதனிற் சிதற வீழ்ந்து தங்கிய தோற்ற மாகும்

உரைதரு தோற்ற மின்னும் வேறுவே றுள்ள கேண்மின்.

மரகதத்தின் தோற்றத்தினைக் கேளுங்கள்; வலாசுரன்

பித்தத்தை,  தமக்கு உணவாகக் கௌவிப் பறந்த கலுழன்/ கருடன் ,  டில்லி நாட்டிற் ?????? சிதறலால் வீழ்ந்து தங்கிய (இடங்களில்) தோற்றமாகும்;  இன்னம் வெவ்வேறு உள்ளன கேளுங்கள்.

 PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.

என் கருத்து

மரகதம் பச்சை நிறக் கல்; பித்த நீரும் அதே நிறம்; ஆகையால் இதை அசுரனின் பித்த நீரில் உண்டானது ன்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. கருடனுடன் சம்மந்தப்படுத்தவும் காரணம் உண்டு; ஆதி காலத்தில் பள்ளத்தாக்குகளில் இருந்த நவரத்தினங்களை எடுப்பதாற்காக மாமிசத் துண்டுகளை மலை உச்சியிலிருந்து வீசி எறிவார்கள்; அதைப் பள்ளத்தாக்கின் அடிப்பகுதிக்குச் சென்று எடுத்துக்கொண்டு கருடன் மேலே பறந்து வரும் அப்போது அதைப் பிடித்தோ கொன்றோ மரகதம் முதலிய கற்களை எடுத்தனர்; இதனால் இதை கருட ரத்தினம் என்பார்கள்

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதைவிளக்குகிறார் :

     ‘வலனுடைய வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன்

நகைத்தலானுமிழ, அஃது இமவான் முதலிய பன் மலைகளினும் ஊறிப் பிறத்தலிற் கருடோற்காரம் என்று பெயர் பெற்ற மரகதச் சாதி’ என்று அடியார்க்கு நல்லார் கூறுவர்.

****

மாணிக்கம் விற்ற படலத்தில் ஒவ்வொரு ரத்தினத்தின் தோற்றம் , கிடைக்குமிடம், அவற்றை அணிவதால் ஏற்படும் பலன்களைக் கூறுகிறார் ; பொதுவான செய்தி, ததீசி முனிவரின் எலும் பிலிருந்தும் வலாசுரனின் உடற்பகுதிகளிலிருந்தும் நவரத்தினங்கள் தோன்றின என்பதாகும்; இவை விஞ்ஞானக் கொள்கைகளுக்கு முரணானவை; ஆயினும் நவரத்தினங்களின் வகைகள், குணங்கள் முதலிய செய்திகள் இரத்தின ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் செய்திகள். இதை பாடல் வரிசைப்படி வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியுள்ளார். அவற்றை  அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதே நமக்குத் பயன்தரும் செய்தி; இதில் வியப்பான செய்தி என்னவென்றால் அட்லாஸ் என்னும் தேசப்பட புஸ்தகம் இல்லாத காலத்தும் அவர் சிங்களம் கோசலம் முதல் துருக்கி ஈரான்/ பாரசீகம் வரை குறிப்பிடுவதாகும் ஆனால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாசனும் பாண்டிய நாடு முதல் பாரசீகம் வரை வருணிக்கிறார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.    குற்றமில்லாத மணிகளை  அணிவோருக்கு புகழும் செல்வமும் ஆயுளும் வளரும் என்பதே பரஞ்சோதி முனிவர் கூறும் செய்தி;

இதற்கு மேலும் சில உதாரணங்கள் இதோ  :

இந்தமணி பாரியாத் திரகிரியிற்

     கொடுமுடியா யிலங்குந் தெய்வ

மந்தரமால் வரைப்புறஞ்சூழ் மேகலையா

     மயனிந்த மணியி னாலே

அந்தரநா டவனகரு மரசிருப்பு

     மண்டபமு மமைத்தா னிந்தச்

சந்தமணி தரிப்பவரே தரியார்வெந்

     நிடவாகை தரிக்க வல்லார்.

தெய்வத் தச்சன் மயன், இந்த மணியினாலே, தேவேந்திரனது  நகரத்தையும் அவன் அரசு வீற்றிருக்கு மண்டபத்தையும் ஆக்கினான்; இந்த அழகிய TOPAZ புருடராகமணியை (புஷ்பராகம்)  அணிபவரே,பகைவர் புறங்கொடுக்க வெற்றி மாலை தரிக்க வல்லராவர் .

*****

நீலம் SAPHIRE  பற்றிய ஒரு அதிசயச் செய்தி !

நீல ரத்தினம் சிறந்ததா என்று சோதிக்க அதைப் பால் குடத்தில் போடவேண்டும் ; அப்போது பாலின் நிறத்தைவிட நீல நிறம் அதிகமாக இருந்தால் அது மிகச் சிறந்த நீலக்கல் என்கிறார் பரஞ்சோதியாரும் நச்சினார்க்கினியரும் ; மதுரை பாரத்வாஜ கோத்திர பிராமணன் நச்சினார்க்கினியர் உரையில்லாவிடில் இன்று நமக்கு சங்க இலக்கியத்தின் உண்மைப்பொருள் தெரிந்திராது!

இலங்கொளிய விந்நீல மெய்ப்படுப்போர்

     மங்கலஞ்சேர்ந் திருப்பா ரேனை

அலங்குகதிர் நீலத்திற் பெருவிலையா

     யிரப்பத்தி னளவைத் தாகித்

துலங்குவதான் பாற்கடத்தி னூறுகுணச்

     சிறப்படைந்து தோற்றுஞ் சோதி

கலங்குகட லுடவைப்பி லரிதிந்த

     விந்திரன்பேர்க் கரிய நீலம்

ஒளியினையுடைய இந்நீல மணிகளைஅணிகின்றவர்கள் நலங்களெய்தியிருப்பர்;  மற்றை ஒளியினையுடைய மா நீலத்தினும் பதினாயிர மடங்காகிய பெரிய விலையினை உடைய இந்த இந்திர நீலம்,  பால் குடத்தில் இட்டால்,  (பால் நிறத்தைக் கீழ்ப்படுத்தி) நூறு மடங்கு தன் குணம் மேம்பட்டு ஒளி தோன்றச் செய்யும்; (இஃது)

ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் அரியதாகும்!

சீவகசிந்தாமணியிலே “கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படிலாய்” என்பதன் குறிப்பாகக் ‘கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங் கெடுமென்றுணர்க’ என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது இங்கு

நினைக்கற்பாலது. (73)

  PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.

*****

தந்தைதன் காமக் கிழத்திய ரீன்ற

     தனயராய்த் தனக்குமுன் னவராய்

முந்தைநா ளரசன் பொன்னறை முரித்து

     முடிமுதற் பொருள்கவர்ந் துட்குஞ்

சிந்தைய ராகி மறுபுலத் தொளித்த

     தெவ்வரைச் சிலர்கொடு விடுப்ப

வந்தவர் கவர்ந்த தனமெலா மீள

     வாங்கினா னீர்ங்கதிர் மருமான்.

நவரத்தின வியாபாரி வடிவில் வந்த சிவபெருமான் அரசனுக்குத் தேவையான நவரத்தினங்களைக் கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்று மறைகிறார் ; பின்னர் மந்திரிகள் அவைகளைக்கொண்டு நவரத்தின மகுடம் செய்து இளம் வயது அபிஷேக பாண்டியனுக்கு பட்டாபிஷேகம் செய்கின்றனர் அவனுக்கு யார் யார் கருவூலத்தைக் கொள்ளையடித்து எங்கே ஒளிந்து கொண்டு இருக்கின்றனர் என்ற துப்புத் தகவலை மக்கள் கொடுக்கின்றனர் ; அவனையும் அவர்களை பிடித்து பழைய ரத்தினங்களை  மீட்டான் என்ற சுபச் செய்தியுடன் பரஞ்சோதி முனிவரும் மாணிக்கம் விற்ற படலத்தை முடிக்கிறார்; இன்று ரத்தின வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இதிலும் சிலப்பதிகார உரையிலும் ஏராளமான தகவல்கள இருக்கின்றன.

*****

எழுகூற்றிருக்கை

ஏழு முதல் ஒன்று வரை எண்களை வைத்துக் கவி பாடுவது எழுகூற்றிருக்கை எனப்படும் இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல்

அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல். ; இதை சம்பந்தர், திருமங்கை ஆழ்வார், அருணகிரிநாதர் முதலிய பலரும் பயன்படுத்திப் பாடியுள்ளனர் பரஞ்சோதியாரும் பாடியுள்ளார்:

ஓருருவாய் நேர்நின்ற வணிகேசர்

     விடையின்மே லுமையா ளோடும்

ஈருருவாய் முக்கண்ணு நாற்கரமு

     மஞ்சமர (5) ரிறவா வாறு (6)

காருருவா யெழு(7) மிடறுங் காட்டித்தங்

     கோயில்புகக் கண்டா ரின்று

பாருருவாய் நின்றவணி கேசரிவ

     ரெனவேபின் பற்றிப் போவார்.

ஓர் உருவாகி நேரே நின்ற வணிகர் பெருமான், இடபவூர்தியின் மேல் உமைப் பிராட்டியோடும் இரண்டு திருவுருவமாய்,  மூன்று கண்களையும் நான்கு கைகளையும், அஞ்சிய (5) தேவர்கள் இறவாத

வண்ணம், தோன்றச் செய்து,  தமது திருக்கோயிலுட் போதலைக் கண்டவர்கள்,  இன்று பாரின்கண் வணிகர் தலைவர் வடிவினராய் நின்றவர் இவரே என்று, பின்றொடர்ந்து சென்றனர். .

மாணிக்கம் விற்ற படலத்தில் வணிகர் உருவாய் வந்த சிவபெருமான் மறைந்த காட்சி இது!

இச்செய்யுளில் ஒன்று முதல் ஏழு எண்களின் பெயர்

கூறியது எண்ணலங்காரம்; அஞ்சு, ஆறு, ஏழு என்பன ஈண்டு எண்ணுப்

பெயர்களல்லவேனும் சொல்லொப்புமை நோக்கி எண்ணாகக் கொள்ளப்படும்; எழுகூற்றிருக்கை முதலியவற்றிலும் இங்ஙனம் வருதல் காண்க. (85)

–subham—

Tags- எழுகூற்றிருக்கை, முத்துமாலை ,ஆயுள் அதிகரிக்கும், பணம் சேரும், பரஞ்சோதி தகவல், நவரத்தினங்கள் , அரிய செய்திகள் – திருவிளையாடல் புராணம் ,) ஆராய்ச்சிக் கட்டுரை-12

Leave a comment

Leave a comment