
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,609
Date uploaded in London – –9 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வாஸ்து – அடிப்படை விதிகளைக் கவனியுங்கள்!
ச. நாகராஜன்
ஏராளமான நண்பர்கள் புது வீடு குடிபோகும் போதோ அல்லது புது வீடு ஒன்றை விலைக்கு வாங்கும் போதோ அடிப்படை வாஸ்து விதிகள் தெரியாமல் திண்டாடுகிறார்கள்.
அடிப்படையான முக்கிய விதிகள் இதோ:
வீடு கிழக்கு திசையையோ அல்லது வடகிழக்கு திசையை நோக்கியோ அமைந்திருப்பது நல்லது. ஒருபோதும் தென்கிழக்கு திசையைப் பார்த்து வீடு இருக்கக் கூடாது.
படுக்கை அறை தென்மேற்கில் அமைந்திருக்க வேண்டும். தம்பதிகள் உறங்கும் படுக்கை அறை மேற்கிலோ அல்லது வடக்கிலோ மட்டுமே அமைந்திருக்கலாம்.
சமையலறை தென்கிழக்கில் மட்டுமே இருக்க வேண்டும்.
சாப்பிடும் அறை சமையலறையோடு ஒட்டி இருத்தல் வேண்டும். இது மேற்கில் இருக்கலாம்.
சமையலறையில் அமைக்கப்படும் சிங்க் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.
பூஜை அறை வடகிழக்கில் இருக்க வேண்டும். தென்கிழக்கிலோ அல்லது தென்மேற்கிலோ இருத்தல் கூடாது.
பணியாளர்களின் அறை வடமேற்கில் இருக்க வேண்டும்.
கிணறானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இது செல்வ வளத்தைத் தரும்.
படுக்கை அறையில் அட்டாச்ட் பாத்ரூம் தெற்கிலோ அல்லது வடக்கிலோ இருக்கலாம். கம்மோட் தெற்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும். ஒரு போதும் கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ பார்த்து இருக்கக்கூடாது.
எந்த ஒரு அறையிலும் வடகிழக்கு மூலையில் குப்பை கூளங்கள், செருப்பு, விளக்குமாறு உள்ளிட்டவை இருக்கக் கூடாது. இது செல்வ வளத்தைப் பாதிக்கும்.
குளியலறை கிழக்கில் இருப்பது சிறந்தது. அடுத்த சிறப்பான இடம் வடக்கு ஆகும்.
பணம், நகைகள் லாக்கர் அல்லது அலமாரி வடக்குச் சுவரில் தெற்கு நோக்கிப் பார்த்திருக்க வைக்கப்பட வேண்டும். ஆக இது வடக்கு நோக்கி செயல்பட்டுக் கொண்டே இருக்கும். குபேரனின் திசை வடக்கு என்பதை நினைவில் கொள்ளலாம்.
ஒரு வீட்டில் மொத்த கதவுகளின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணில் இருக்க வேண்டும்.
ஒரு வீட்டில் மொத்த ஜன்னல்களின் எண்ணிக்கை மூன்று அல்லது ஆறு அல்லது பதினொன்று ஆகிய எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.
ஒரு போதும் கண்ணாடியை சமையல் அறையில் (குறிப்பாக ஸ்டவ் அருகே) வைக்கக் கூடாது.
கண்ணாடி டைனிங் டேபிள் அருகே அதைப் பார்த்து இருந்தால் உணவு தடையின்றி சுவையாகக் கிடைக்கும்.
படுக்கை அறையில் நிலைக் கண்ணாடி இருக்கவே கூடாது. தம்பதிகளிடையே சச்சரவை இது ஏற்படுத்தும்.
தவறி அமைக்கப்பட்டிருந்தால் அதை திரை போட்டு மூடி விட வேண்டும்.
கூடத்தில் மையத்தில் ஒரு சிறிய பகுதி தூய்மையாக எந்த வித நாற்காலி, மேஜை இதர பொருள்கள் வைக்காமல் இருக்க வேண்டும். பிரம்மஸ்தலம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பொதுவாக அனைத்து வீடுகளிலும் சோபா, நாற்காலி உள்ளிட்டவை வைக்கப்படுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். ஹாலின் மூலைகளிலிருந்து ஒரு நூலைக் கட்டிப் பார்த்தால் மையப்புள்ளியைக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பகுதியில் – பிரம்ம ஸ்தலத்தில் (ஒரு சிறிய அளவு) காலியாக இருக்க வேண்டும்.
கூடத்தில் (ஹாலில்) வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தினமும் காலையில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். அதை மறுநாள் கீழே கொட்டி விட்டு தூய புதிய நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
செல்வ வளம் சேரச் சேர பன்னீர், புஷ்பங்கள் ஆகியவற்றை நீரில் போட்டு இன்னும் அதன் சக்தியை அதிகரித்து வளத்தைக் கூட்டலாம்.
இன்னும் ஏராளமான அதிக செலவில்லாத ஏராளமான அம்சங்களை வீட்டில் சேர்த்து அனைத்து திசைகளையும் நமது வளத்தைக் கூட்ட சாதகமாக்கிக் கொள்ளலாம்.
இவை அனைத்தும் பழைய காலத்தில் சாதாரணமாகப் பின்பற்றப்பட்டு வந்தவை. இப்போது கட்டுரை மூலம் தெரிவிக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.
வாஸ்து பார்ப்போம்; வளத்தைச் சேர்ப்போம்.