Post No. 14,615
Date uploaded in London – –10 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
7-6-25 மாலைமலர் இதழில் வெளி வந்த இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை! – 1
ச. நாகராஜன்
இந்தியாவின் அற்புதமான ஒரு நகராகத் திகழ்வது கன்யாகுமரி நகர். இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.
இங்குள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவை நமது பாரம்பரியத்தை விளக்கிக் கொண்டிருக்கின்றன.
அருகில் சுசீந்திரம், திருக்குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கும் சென்று புத்துணர்ச்சி பெறலாம். இவற்றை இங்கு பார்ப்போம்.
திருக்குற்றாலம்
குற்றால அழகினையும், சிறப்பினையும் பற்றி குற்றாலத்தை அடுத்துள்ள மேலகரத்தில் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர் தான் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் அற்புதமாகக் கூறியுள்ளார்.
எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்:
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் ;
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் ;
கானவர்கள் விழி எறிந்து, வானவரை அழைப்பார் ;
கவன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார் ;
தேன் அருவித் திரை எழும்பி, வானின் வழி ஒழுகும் ;
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும் ;
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!
– குற்றாலக் குறவஞ்சி பாடல் எண் 67
தென்காசியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தின் எழிலையும் அருவிகளின் வனப்பையும், இயற்கைச் சூழலையும் மலையின் புனிதத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒன்பது புகழ் பெற்ற அருவிகள் இங்கு மக்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கின்றன. பேரருவி, ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றில் ஜனக்கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். குற்றால மலையின் மீது ஏறி செண்பகா தேவி மற்றும் தேனருவியை நெருங்கினால் அங்கு விழும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ஆனந்திக்கலாம்.
புராண வரலாற்றின் படி சிவ-பார்வதி திருமணத்தின் போது தேவர்கள் அனைவரும் ஒருமிக்க கைலாசத்தில் கூடவே, வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. உடனே சிவபிரான அகத்திய முனிவரை நோக்கி தென்திசை ஏகி பூமியை சமனப்படுத்துமாறு பணிக்க அகத்தியர் பொதிய மலை வந்தார். பூமியும் சமனமாயிற்று.
அகத்தியர் பொதிய மலையிலிருந்து தமிழ் மொழியைப் பரப்பும் அரிய செயலில் ஈடுபட்டார்.
சிவபிரான் கோவில் கொண்டுள்ள இடம் குற்றாலம். அருவியில் குளித்து புத்துணர்ச்சி பெற்று ஆன்மீக எழுச்சி பெற குற்றால நாதரை தரிசிக்கலாம்.
இங்குள்ள காற்றில் ஆக்ஸிஜனின் அளவு அபரிமிதமாக இருப்பதால் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இங்கு வந்து தங்கி அதை உடனே போக்கிக் கொள்வது வழக்கம். அற்புதமான அரிய வகை மூலிகைகளில் பட்டுத் தவழ்ந்து வரும் தென்றல் இதமாக உடல் மீது படுவதாலும் மூலிகைக் காற்றை சுவாசிப்பதாலும் அனைத்து விதமான நோய்களும் போய்விடும் என்பது நிபுணர்களின் அறிவுரை!
தென்காசி
இறைவர் : காசி விஸ்வநாதர்
இறைவி : உலகம்மை நாயகி
பொங்கி வரும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி ஒடும் சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருக்குற்றாலத்திற்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாகவே இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் எழுந்தது குறித்து சுவையான ஒரு வரலாறு உண்டு.
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் பெரிதும் போற்றப்பட்டு நல்லாட்சி செய்தவன் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1422ம் ஆண்டு வாக்கில் இவன் தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
அவன் வடக்கில் காசி சென்று விஸ்வநாதரைத் தரிசிக்க விழைந்த போது அவன் கனவில் சிவபிரான் தோன்றி எனக்கு தென்காசியில் ஒரு கோவில் கட்டுக என்று அருள் பாலித்துக் கூறினார்.
உடனே 15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 17 ஆண்டுகளில் மிகப் பெரும் கோவிலை அமைத்தான் பராக்கிரம பாண்டியன்.
திருச்செந்தூர் (அறுபடை வீடுகளில் இரண்டாவது)
சூரபன்மனை வதம் செய்ய முருகன் தன் பரிவார தேவதைகளுடன் வந்து முகாமிட்ட தலம் திருச்செந்தூர். சூரனை அடியோடு அழித்து அவனைச் சேவற் கொடியாக மாற்றிக் கொண்ட தலம் இது என்பதால் இதற்கு ஜயந்தி நகரம் என்ற பெயர் உண்டு.
சூரனை வதம் செய்ததும் தன் பரிவார தேவதைகளுக்கு முருகன் தன் பன்னிரு கைகளினாலேயே விபூதி பிரஸாதம் வழங்கினார். முருகனின் பன்னிரு கைகளின் ஸ்தானத்தை இன்று பன்னீர் இலை பெற்று, திருச்செந்தூர் இலை பிரஸாதம் என்று பக்தர்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது.
இது அலைவாய்த் தலம் என்பதால் இங்கு வழிபடும் போது நமது மனதில் எழுகின்ற எண்ணங்கள் ஓய்ந்து மன அமைதி கூடும்; இறையருள் சித்திக்கும்.
கடற்கரை ஓரம் அமைந்துள்ள திருச்செந்தூர் தல தரிசனம் வெற்றியைத் தரும்; வளமான வாழ்க்கையைத் தரும்! லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவது இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் ஒன்றாகும்.
திருநெல்வேலி
தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தத் தலமானது சில காலம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்த தலமாகும்.
இறைவன் : நெல்லையப்பர் வேணுவன நாதர் உள்ளிட்ட பல பெயர்கள்
இறைவி: காந்திமதியம்ம, வடிவுடையம்மை
இந்த நகரின் பழம்பெருமை சொல்லி முடியாது. இறைவன் திருவிளையாடல் நடத்தியதால் திருநெல்வேலி என்ற பெயர்க் காரணம் ஏற்பட்டது என்பது பற்றியு புராண வரலாறு உண்டு.
***