பாண்டியர்  வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்கள், புதிர்கள் (Post No.14,616)

Written by London Swaminathan

Post No. 14,616

Date uploaded in London –  10 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட பாண்டியர்கள் யார் ? வெள்ளைக்காரர்கள் கணக்குப்படி ஒரு ரசரின் சராசரி ஆட்சிக்காலம் இருபது ஆண்டுகள்; ஆனால் தமிழ் நாட்டில் இது முப்பது ஆண்டுகள் என்று என்னுடைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. வெளிநாட்டுக்காரர்  சராசரியை ஒப்புக்கொண்டாலும் கடுங்கோன் என்னும் மன்னனுக்கு முன்னால் ஆண்ட ஐம்பது பாண்டியர்கள் யார் ? இதை அறிய திருவிளையாடல் புராணம் நமக்கு உறுதுணையாக நிற்கிறது. அதற்கு மூல நூலான சாரசமுச்சயம் போன்ற சம்ஸ்க்ருத நூல்களை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிப்படலாம். இலங்கை விஜயன் (550 BCE) ஆட்சிக் காலம் முதல் கல்வெட்டு கூறும் கடுங்கோன் (550 CE) காலம் வரை ஆண்டவர்கள் பட்டியல் எங்கே?

****

பாண்டியர் பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு  இலங்கையின் வரலாற்றைக் கூறும் மஹா வம்சத்தில் கிடைக்கிறது . தீய செயல்களுக்காக இந்தியாவின் கலிங்கம்/வங்காள பிரதேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் (545 BCE) ஒரு யக்ஷ  கன்னிகையை மணக்கிறான் ; அவளுடைய பெயர் குவேனி. ஆனால் முறையான ராஜ வம்ச பெண்ணைத்தான் க்ஷத்ரிய மன்னர்கள் மணக்க வேண்டும், அப்போதுதான் அந்தப் பெண் மஹாராணி  ஆக முடியும் என்று புரோகிதர்கள் சொல்லவே , அவர்கள் மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னரின் மகளை பெண் கேட்கின்றனர் அவளும் விஜயனை மணக்கிறாள். அவள் மட்டுமின்றி மந்திரி மகள்கள் முதலியோரும் இலங்கைக்கு வந்து அங்குள்ள ராஜ வம்ச ஆட்களை மணக்கின்றனர். ஏனெனில் விஜயனுடன் எழுநூறு பேர் இந்தியாவிலிருந்து இலங்ககைக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சி அஜந்தா குகையில் ஓவியமாக உள்ளது. இது 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த (545 BCE) வரலாற்று நிகழ்ச்சி  . அப்போதைய மதுரையைக் கடல் விழுங்கியதாக இறையனார் அகப்பொருள் உரையிலிருந்து நாம் அறிகிறோம். 

இதற்குப்பின்னர் கல்வெட்டு சான்றுகள் அசோக மன்னரின் கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கிறது. அதற்குப்பின்னர் காரவேலனின் ஹத்தி கும்பா கல்வெட்டிலிருந்து கிடைக்கிறது. பாண்டியர் மட்டுமின்றி சேர, சோழ, சத்தியபுத்திரர் (அதியமான்) பற்றியும் அசோகர் கூறுகிறார் .

இதை எல்லாம் உறுதிப்படுத்தும் வகையில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாளன் என்ற சோழன் இலங்கையை 45 ஆண்டுகள் நீதி நெறி தவறாமல் ஆண்டதையும் மஹாவம்சம் கூறுகிறது; இது ஒரு புறமிருக்க மெகஸ்தனீஸ் (born around 350 BCE and died around 290 BCE) எழுதிய இண்டிகா INDICA நூலில், பண்டேயா என்ற மகாராணி தென்னாட்டை ஆண்டதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அந்த ராணி மீனாட்சியாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.  மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புகளை எல்லோரும் ஏற்கின்றனர்.

இதன் சாராம்சம் என்ன?

2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர் ஆட்சி துவங்கியது என்பதாகும். அதற்கு முன்னரும் பாண்டியர் ஆட்சி இருந்ததற்கு மஹாபாரதம் ராமாயணத்திலிருந்தும் குறிப்புகள் கிடைக்கின்றன .

கடல்கொண்ட கபாட புரத்தை வால்மீகி  ராமாயண ஸ்லோகத்திலிருந்தும் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திர ஸ்லோகத்திலிருந்தும் அறிகிறோம்; பாண்டிய கவாடம் என்ற முத்து பற்றி அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

****

ஒரு வட்டத்தை வரைந்து துவக்கப்புள்ளியைக் காட்டு என்று சொன்னால் எவரும் எந்த இடத்திலும் புள்ளியைவைத்து இங்கிருந்துதான் வட்டம் துவங்கியது என்று சொல்ல முடியும். அந்தக் குழப்பத்தைத் தவிர்க்க நாம் ஏதேனும் ஒரு துவக்கப்புள்ளியைக் குறிக்கவேண்டும். தொல்காப்பியம் சொல்லும் நிலம் தரு திரு வில் பாண்டியன் முதல்  சங்க நூல்களைத் தொகுத்த உக்கிரப்பெருவழுதி வரை பல பாண்டிய மன்னர் பெயர்கள் கிடைத்த போதிலும் நெடுஞ்செழியன் எப்போது ஆண்டார், அது எந்த நெடுங்கிச்செழியன் , முதுகுடுமிபி பெருவழுதி எப்போது ஆண்டார் என்றெல்லாம் யூகிக்கத்தான் முடிகிறது; குறிப்பிட்ட ஆண்டினைச் சொல்ல முடியவில்லை. ஆகையால் வட்டத்தில் நாமே துவக்கப்புள்ளியை வைப்போம் .

நல்ல வேளையாக, பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில்( தி வி பு) மலையத்வஜ பாண்டியன் காலத்திலிருந்து தொடர்ச்சியான வரலாறு கிடைக்கிறது. அதில் அவர் இன்னார் மகன் இவர் என்று சொல்லி கதையைக் கொண்டு செல்கிறார். சுமார் எழுபது பாண்டிய மன்னர்களின் பெயர்கள் நமக்கு கிடைக்கின்றன .

இப்போது நமக்குள்ள பொறுப்பு யார், யார் எப்போது ஆண்டார்களென்று முடிவு செய்வதே.

தி. வி. பு. சொல்லும் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களாக இருப்பதால் அதை ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கிவிட்டனர். அந்தப் பெயர்கள் அவர்கள் பட்டம் ஏற்றபோது கொடுக்கப்பட்ட அபிஷேகப் பெயர்கள் என்பதை அறிந்தால் அவருடைய வேறு தமிழ்ப்பெயர்கள் நெடுஞ்செழியனாகவோ பெருவழுதியாகவோ இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். மேலும் கல்வெட்டுகளின் தமிழ்ப் பகுதிகள் மாறன் வழுதி என்று சொல்லும்  இடத்திலும் அதே கல்வெட்டின் ஸம்ஸ்க்ருதப் பகுதி வர்மன் ஜடிலன் (சடையன்) என்றெல்லாம் சொல்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையை நிறுவிய குலசேகர பாண்டியன் மற்றும் அவருக்கு கடம்ப வனத்தில் சிவலிங்கம் இருப்பத்தைச் சொன்ன தனஞ்செயன் என்ற செட்டியார் பெயரை அப்படியே கர்நாடக ஆளுப்பா வம்ச மன்னர்களின் பெயர்களில் காண்கிறோம். அதுமட்டுமல்லாமல் தி வி பு பெயர்களான குலசேகரன், வீர பாண்டியன், குலோத்துங்கன் என்ற பெயர்களை பிற்காலத்த்தில் சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்களில் காண்கிறோம் இதனால் இவை கற்பனைப் பெயர்களோ இட்டுக்கட்டிய பெயர்களோ இல்லை என்பது தெளிவாகிறது  பூரண வர்மன் என்பவரின்1600 ஆண்டுப் பழமை உடைய கல்வெட்டு இந்தோனேஷிய காட்டில் கிடைத்திருக்கிறது புற நானூறு முதலிய நூல்களில் நிறைய சம்ஸ்க்ருத கோத்திர பெயர்களைக் காண்கிறோம் அப்பர்   காலத்திலும் அவருக்கு முன்னரும் திலகவதி, புனிதவதி பரம தத்தன், முதலிய ஸம்ஸ்க்ருதப் பெயர்களைக் காண்கிறோம்; யானை மாலை போட்டதால் மன்னர் ஆன மூர்த்தி செட்டியார் (நாயனார் பற்றியும் நம்பியின் தி. வி. பு. வும் பெரியபுராணமும் பாடுகின்றன

இவை  எல்லாவாற்றையும் கருத்திற்கொண்டு மீனாட்சி அரசாண்ட தேதியிலிருந்து  நாம் வரலாற்றினைத் துவங்கி பாண்டிய மன்னர் ஆட்சி வரிசையை  பட்டியல் இடலாம்.  மெகஸ்தனீஸ், பெருவழுதி  குறிப்பினை ஆதாரமாக வைத்து மீனாட்சி ஆண்டது 2300 ஆண்டுகளுக்கு முன்னர் என்று துவங்கலாம்.  மதுரையில் கோவில் இருந்ததை புறநானூற்றிலுள்ள முதுகுடுமி பெருவழுதி பாடலும் காட்டுகிறது. மஹேந்திர பலலவன் (600 CE) கால சம்பந்தர் அங்கயற்கண்ணிஆலவாய் என்று தெளிவாகவே பெயர் சொல்லிப் பாடியிருக்கிறார். மீனாட்சி என்பதன் அழகான தமிழ் மொழிபெயர்ப்பு அங்கயற்கண்ணி ஆகும்.

இதற்குப்பின் மாணிக்கவாசகர் பற்றித் தமிழ் அறிஞர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதை அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

 –subham—

Tags- பாண்டியர்  வரலாறு  தீர்க்கப்படாத மர்மங்கள், புதிர்கள்

Leave a comment

Leave a comment