ஆலயம் அறிவோம்! மன்னார்குடி ராஜகோபால சுவாமி !!(Post No. 14, 646)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 646

Date uploaded in London –16 June 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ஞானமயம் நிகழ்ச்சியில் 15-6-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

என்றென்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாய்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

                 – ஆண்டாள் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழ மண்டலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடி திருத்தலமாகும்.

இது தக்ஷிண த்வாரகா என அழைக்கப்படுகிறது.

23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஆலயத்தில்

எழுந்தருளியுள்ள ராஜகோபால சுவாமி கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறார்.

இறைவர் :  ஶ்ரீ, ராஜகோபால சுவாமி

இறைவியார் : செங்கமலத் தாயார், செண்பக லட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தப்ரஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி

தீர்த்தம் : ஹரித்ரா நதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்

விமானம் : ஸ்வயம்பு விமானம்

154 அடி உயரமுள்ள ராஜ கோபுரமும் கோவிலின் நுழைவுப் பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன கருட ஸ்தம்பமும் அனைவரையும் வியக்க வைப்பவை.

கோவிலைப் பற்றிய பழம் பெரும் வரலாறு ஒன்று உண்டு. இங்கு நான்கு வேதங்களைக் கற்ற வேத விற்பன்னர்கள் வாழ்ந்தமையால் இது ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் செண்பகாரண்யா என்றும் ஶ்ரீ ராஜகோபாலன் குடி கொண்டிருப்பதால் ராஜமன்னார் என்றும்,மன்னர்கள் கோவில் கட்டியதால் மன்னார்குடி என்றும் அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.

கோவிலைப் பற்றிய புராண வரலாறு ஒன்றும் உண்டு. பெரும் முனிவரான வாஹி என்ற பெரிய முனிவருக்கு கோபிளர், கோபிரளயர் என இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்கள் துவாரகைக்குச் சென்று கண்ணபிரானை வழிபடச் சென்றனர். ஆனால் வழியிலே அவர்களைச் சந்தித்த நாரதர் கிருஷ்ணர் விண்ணுலகம் ஏகி விட்டதைத் தெரிவித்து, செண்பகாரண்யம் சென்று கிருஷ்ணரை வழிபடுமாறு கூறியருளினார். அதன்படி அவர்கள் இங்கு வந்து கிருஷ்ணரை வழிபடலாயினர். கிருஷ்ணரின் அனைத்து லீலைகளையும் அவர்கள் இங்கேயே கண்டு களித்தனர்.

இங்கு ராஜகோபால சுவாமி ஒரு பாலகனாக இடையன் கோலத்தில் காணப்படுகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை கொலுசு ஆகிய குழந்தை அணியும் அணிகலன்களையும் அணிந்திருக்கிறார்.

கூடவே ஒரு பசுவும் இரண்டு கன்றுகளும் அவர் அருகில் உள்ளன.

குவலயாபீடம் என்னும் யானையை கம்சன் ஏவி விடவே கிருஷ்ணர் யானையின் தந்தத்தை உடைத்து அதை அடக்கினார். இதைச் சுட்டிக்காட்டும் வகையில் இங்கு கிருஷ்ணரின் இடது கையில் தந்தம் உள்ளது.

கிருஷ்ணரின் பால்ய லீலைகளை நினைவூட்டும் கோவில் இது.

உற்சவரின் சிலை வெங்கலத்தினால் உருவாக்கப்பட்ட சிலையாகும்.

கோவிலை சுண்ணாம்புக் கலவை கொண்டு முதலாம் குலோத்துங்க சோழன் இதைப் புதுப்பித்தான். அவனது கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகிறது.

கோவிலில் மொத்தம் 16 கோபுரங்கள் உள்ளன. 18 விமானங்கள், 24 சந்நிதிகள், ஏழு பிரகாரங்கள், ஒன்பது நவ தீர்த்தங்கள் 2 மரத்தினால் ஆன தேர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட திருக்கோவிலாகும் இது.

கோவிலில் எழுந்தருளியுள்ள ராஜகோபால சுவாமியின் உயரம் 12 அடி ஆகும்.

இங்குள்ள குளம் 1158 அடி நீளமும் 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இது ஹரித்ராந்தி என்று அழைக்கப்படுகிறது. கோபியர்கள் மஞ்சளுடன் இங்கு குளித்ததால் நீர் மஞ்சள் நிறம் அடைந்ததால் ஹரித்ராந்தி என்று இது அழைக்கப்படுகிறது.

திருநாழி பிரகாரம், கருட பிரகாரம், செண்பக பிரகாரம், காசி பிரகாரம், நாச்சியார் பிரகாரம் உள்ளிட்ட பிரகாரங்களையும் வல்லாள மஹாராஜா மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை மண்டபம், பலகணி மண்டபம், வெண்ணெய் தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களும் இங்கு அமைந்துள்ளன.

ராஜகோபால சுவாமியையே தன் குல தெய்வமாகக் கருதிய விஜயராகவ நாயக்கர் தன்னை மன்னாரு தாசன் என்றே அழைத்துக் கொண்டார். அவர் இயற்றிய தெலுங்கு மொழியில் இருந்த படைப்புகள் அனைத்தையும் அவர் ராஜகோபாலனுக்கே சமர்ப்பித்தார். அவர் இயற்றிய பல நாடகங்கள் இந்தக் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப்பட்டது.

இங்கு ஓரிரவு தங்கினால் ஒரு கோடி ஆண்டு தவம் இருந்ததற்குச் சமம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு உற்சவம் நடப்பது இந்தக் கோவிலின் சிறப்பாகும்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் செங்கமலத் தாயாரும் ஶ்ரீ ராஜகோபால சுவாமியும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

Leave a comment

Leave a comment